சச்சினின் மட்டையால் உலக சாம்பியன் இலங்கையை வெளுத்து வாங்கிய அப்ரிடி!

321
இலங்கை அணிக்கு எதிரான ஒரு ஒருநாள் போட்டியில் அப்ரிடி 37 பந்துகளில் சதம் அடித்து உலகசாதனை படைத்தார்.1996ம் ஆண்டு நடைபெற்ற சமீர் கிண்ணப் போட்டிகளில் கொன்யாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணியில் அறிமுக வீரராக களமிறங்கினார் அப்ரிடி.

அந்தப் போட்டியில் சரியாக அவருக்கு விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்நிலையில் இலங்கைக்கு எதிரான அடுத்தப் போட்டியில் 3வது வீரராக களமிறங்கினார் அப்ரிடி.

அப்போது இலங்கை அணி உலக சாம்பியனாக இருந்தது. ஆனால் அதைப் பற்றி எல்லாம் கவலைப்படாத அப்ரிடி இலங்கை அணியின் பந்துகளை நாலாபுறமும் சிதறடித்தார்.

18 பந்துகளில் அரைசதம், 19 பந்தில் அடுத்த அரைசதம் என்று விளாசிய அப்ரிடி 37 பந்தில் அதிவேகமாக சதம் அடித்து உலகசாதனை படைத்தார்.

அதுமட்டுமல்லாது அந்த இன்னிங்சில் 11 சிக்சர்கள் விளாசி சனத் ஜெயசூரியாவின் சாதனையையும் சமன் செய்தார்.

அப்போது சனத்தும் அவருக்கு பாராட்டு தெரிவித்தார். ஆனால் சச்சின் எப்படி இந்த சாதனையுடன் தொடர்புடையவர் ஆனார் என்பது குழப்பமாக இருக்கிறதா?

அந்தப் போட்டியில் உலகசாதனை படைத்த அப்ரிடி விளையாட பயன்படுத்தியதே சச்சினின் மட்டை தான்.

வக்கார் யூனிஸ் தான் சச்சினுடைய மட்டையை அவரிடம் கொடுத்து விளையாடச் சொல்லியிருக்கிறார்.

இது பற்றி ஒரு பேட்டியில் அப்ரிடி கூறுகையில், “வலைப் பயிற்சியின் போது சச்சின் அவருடைய துடுப்பாட்ட மட்டையை வக்கார் யூனிஸிடம் கொடுத்திருந்தார்.

அவர் அதை என்னிடம் கொடுத்து, இது சச்சினுடையை துடுப்பாட்ட மட்டை, இதை வைத்து விளையாடு என்றார். அந்த மட்டை தான் நான் சாதனை படைக்க உதவியாக இருந்தது” என்று தெரிவித்திருந்தார்.

இவருடைய உலகசாதனை முறியடிக்கபடாமலே இருந்தது. இந்நிலையில் 2014ம் ஆண்டு தான் கோரே ஆண்டர்சன் 36 பந்துகளில் சதம் அடித்து அவரது சாதனையை முறியடித்தார்.

SHARE