சர்ச்சைக்குரிய மேஜர் ஜெனரல் தர அதிகாரிகள் வெளியேறியிருக்கின்றனர்.

288

 

இலங்கை இராணுவத்தை விட்டு இந்தமாத முதல் வாரத்தில் இரண்டு, சர்ச்சைக்குரிய மேஜர் ஜெனரல் தர அதிகாரிகள் வெளியேறியிருக்கின்றனர்.

ஒருவர், மேஜர் ஜெனரல் பிரசன்ன சில்வா. இவர் ஓய்வுபெற்று வெளியேறிச் சென்றார்.

இன்னொருவர் மேஜர் ஜெனரல் சுமித் மானவடு. இவர் கட்டுமானப் பணி நடக்கும் பகுதி ஒன்றில், தலையில் மரக்குற்றி ஒன்று வீழ்ந்ததால், படுகாயமடைந்து, இரண்டு நாட்களின் பின்னர் உயிரிழந்தார்.

இந்த இரண்டு பேருமே, கடந்த சில ஆண்டுகளில் சர்ச்சைகளுக்குள்ளானவர்கள். ஊடகங்களில் பரபரப்பாகப் பேசப்பட்டவர்கள்.

இறுதிக்கட்டப் போரில், நாகர்கோவிலில் இருந்து புதுமாத்தளன் நோக்கி முன்னேறிய 55 ஆவது டிவிசனுக்குத் தலைமை தாங்கியவர், போரின் இறுதி நாட்களில், முல்லைத்தீவு நகரப் பகுதியில் இருந்த 59ஆவது டிவிசனின் கட்டளை அதிகாரியாகப் பணியாற்றியவர் தான் மேஜர் ஜெனரல் பிரசன்ன சில்வா.

இவர் போர்க்குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டிருப்பவர் என்பதுடன், இவரது அதிகாரபூர்வ கைத்துப்பாக்கியுடன், இவரது மெய்க்காவலர்கள் கைது செய்யப்பட்ட விவகாரத்தினாலும் அண்மையில் சர்ச்சைகளைச் சந்தித்தவர்.

போர் முடிந்த பின்னர், 2010 செப்டெம்பரில், பிரித்தானியாவில் உள்ள இலங்கைத் தூதரகத்தில் பாதுகாப்பு ஆலோசகராக நியமிக்கப்பட்ட மேஜர் ஜெனரல் பிரசன்ன சில்வா மீது போர்க்குற்றச்சாட்டுப் பத்திரம் ஒன்று தாக்கல் செய்யப்பட்ட நிலையில், அங்கிருந்து அவசரமாக நாடு திரும்பவும் நேரிட்டது.

கடந்த 4ஆம் திகதியுடன் 55 வயதை எட்டிய அவர், சேவை நீடிப்புப் பெற்றுக் கொள்ளாமலேயே, ஓய்வுபெறும் நிலை ஏற்பட்டது.

அதுபோலவே, வன்னியில் விடுதலைப் புலிகளுக்கு எதிராக இறுதிக்கட்டப் போருக்காக முதல்முதலாக உருவாக்கப்பட்ட, படைப்பிரிவான 57ஆவது டிவிசனின் முதலாவது கட்டளை அதிகாரியாக இருந்தவர் தான் மேஜர் ஜெனரல் சுமித் மானவடு.

2007 பெப்ரவரி மாதம் பம்பைமடுவைத் தளமாக கொண்டு உருவாக்கப்பட்ட இந்த டிவிசன் தான், கல்மடுக்குளம் பகுதியில் இருந்து மும்முனைகளில் நகர்வுகளை ஆரம்பித்தது. அதுவே முள்ளிவாய்க்காலுக்கான மூலம்.

இந்தப் படை நகர்வு தொடங்கிய சில நாட்களில் விடுதலைப் புலிகள் நடத்திய பாரிய எதிர்த்தாக்குதல் ஒன்றில் இராணுவத்தினர் பாரிய இழப்புக்களைச் சந்தித்திருந்தனர். உடனடியாகவே 57ஆவது டிவிசன் தளபதி பதவியில் இருந்து, மேஜர் ஜெனரல் மானவடு நீக்கப்பட்டு, மேஜர் ஜெனரல் ஜெகத் டயஸ் நியமிக்கப்பட்டார்.

அதற்குப் பின்னர், மேஜர் ஜெனரல் மானவடு விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில், எந்தவொரு முனையிலும் முன்னிறுத்தப்படவில்லை. ஓரம்கட்டி ஒதுக்கியே வைத்திருந்தார் முன்னைய இராணுவத் தளபதி சரத் பொன்சேகா.

இதனால் சரத் பொன்சேகா மீது ஆத்திரமடைந்திருந்த அவருக்கு சந்தர்ப்பம் பார்த்து வாய்ப்பு ஒன்றை வழங்கினார் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக் ஷ.

2010 ஜனாதிபதி தேர்தலில் சரத் பொன்சேகா தோல்வியடைந்தபோது, அவரைக் கைது செய்யும் பொறுப்பு மேஜர் ஜெனரல் மானவடுவுக்கு அளிக்கப்பட்டது.

அதற்குப் பின்னர், மலேசியாவுக்கான துணைத் தூதுவராக நியமிக்கப்பட்ட மேஜர் ஜெனரல் மானவடு, விடுதலைப் புலிகளின் முக்கிய பிரமுகர்கள் என்று கூறப்பட்ட சிலரை கைது செய்து நாடுகடத்தும் செயற்பாட்டில் முக்கிய பங்காற்றினார்.

எதிர்வரும், ஜுலை மாதத்துடன் 55 வயதை அடைவதால், ஓய்வுபெற வேண்டிய நிலையில் இருந்த அவர், முன்னைய அரசாங்கத்தின் விசுவாசியாக இருந்ததால், ஆட்டிலறிப் படைப்பிரிவின் கட்டளை அதிகாரியாகவே நியமிக்கப்பட்டிருந்தார்.

இத்தகைய சூழலில் தான் அவரது மரணம் நிகழ்ந்திருக்கிறது. அவரது மரணம் பற்றி செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்ட பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, அவரது கர்மவினையின் பலன் என்று குறிப்பிட்டிருந்தார்.

மேஜர் ஜெனரல் மானவடுவும், மேஜர் ஜெனரல் பிரசன்ன சில்வாவும், முன்னைய ஆட்சியாளர்களுக்கு நெருக்கமானவர்கள், விசுவாசமானவர்கள், என்று பெயரெடுத்திருந்தனர்.

அதைவிட, போர்க்குற்றச்சாட்டுகளிலும் பெயர் அடிபட்டதால், மேஜர் ஜெனரல் பிரசன்ன சில்வாவுக்கு, இராணுவத்தில் முக்கிய பதவி வழங்கப்படவில்லை. பாதுகாப்பு அமைச்சில், இணைப்பதிகாரியாகவே நியமிக்கப்பட்டிருந்தார்.

எவ்வாறாயினும், ஒரே வாரத்தில் இரண்டு முக்கிய மேஜர் ஜெனரல்களின் வெற்றிடத்தை இலங்கை இராணுவம் எதிர்கொண்டிருக்கிறது.

55 வயதுக்கு மேல், இராணுவ அதிகாரிகளுக்கு சேவை நீடிப்பு வழங்குவதில்லை என்ற உறுதியான நிலைப்பாட்டை அரசாங்கம் எடுத்திருப்பதால், இந்த ஆண்டில் மாத்திரம் 24 மேஜர் ஜெனரல்கள் இலங்கை இராணுவத்தை விட்டு ஓய்வுபெறும் நிலையில் உள்ளனர்.

இவர்களில் ஏற்கனவே மேஜர் ஜெனரல்கள், ஜெகத் டயஸ், மஹிந்த ஹத்துருசிங்க, லலித் தவுலகல, பிரசன்ன டி சில்வா உள்ளிட்டோர் ஓய்வு பெற்று விட்டனர்.

army-com (1)

தற்போது இராணுவத் தலைமை அதிகாரியாக உள்ள மேஜர் ஜெனரல் மிலிந்த பீரிஸ் வரும் ஓகஸ்ட் 11ஆம் திகதியுடனும், இறுதிக்கட்டப் போரில் 53 ஆவது டிவிசனை வழிநடத்திய மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன, வரும் செப்டெம்பர் 05ஆம் திகதியுடனும், இறுதிப்போரில் 59 ஆவது டிவிசனுக்குத் தலைமை தாங்கிய மேஜர் ஜெனரல் நந்தன உடவத்த நவம்பர் 16ஆம் திகதியுடனும் ஓய்வுபெறும் நிலையில் உள்ளனர்.

இந்தநிலையில், இராணுவத் தளபதி லெப். ஜெனரல் கிரிசாந்த டி சில்வாவின் பதவிக்காலம் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் நிறைவடையவுள்ளது.

அவருக்கு சேவை நீடிப்பு வழங்கப்படுமா? இல்லையா? என்பது உறுதியாகவில்லை. எவ்வாறாயினும், ஏற்கனவே அரசாங்கம் கையாளும் நடைமுறைகளை வைத்துப்பார்க்கும் போது, இறுதிக்கட்டப் போரில் டிவிசன்களுக்குத் தலைமை தாங்கிய அதிகாரிகளுக்கு சேவை நீடிப்பையோ, முக்கிய பதவிகளையோ வழங்குவதில்லை என்ற நிலைப்பாட்டிலேயே அரசாங்கம் இருக்கிறது.

இறுதிக்கட்டப் போரில், டிவிசன்களுக்குத் தலைமை தாங்கிய அதிகாரிகள் அனைவருமே, ஓரம்கட்டப்பட்டு, முக்கியத்துவமற்ற பதவிகளில் தான் அமர்த்தப்பட்டுள்ளனர்.

இதற்கு இரண்டு காரணங்கள் இருக்கின்றன. இந்த இராணுவத் தளபதிகள், மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியிருப்பவர்கள் என்பதால், அதில் இருந்து விடுவிக்கப்படும் வரையில் முக்கிய பதவிகளில் அமர்த்த முடியாதிருக்கிறது.

ஏற்கனவே, மேஜர் ஜெனரல் ஜெகத் டயஸ் இராணுவத் தலைமை அதிகாரியாக நியமிக்கப்பட்ட போது, சர்வதேச அளவில் கடும் எதிர்ப்பை அரசாங்கம் எதிர்கொள்ள நேரிட்டது. எனவே, மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியிருக்கும் அதிகாரிகளுக்கு முக்கிய பதவிகள் வழங்காமலும், சேவை நீடிப்பு வழங்காமலும், தவிர்த்து வருகிறது அரசாங்கம்.

அடுத்து, போரின் இறுதிக்கட்டத்தில் படைப்பிரிவுகளுக்குத் தலைமை தாங்கிய அதிகாரிகள் பலரும், முன்னைய ஆட்சியாளர்களுக்கு விசுவாசமானவர்களாகவே இருந்து வருகின்றனர்.

முன்னைய ஆட்சியாளர்களுக்கு விசுவாசமான படை அதிகாரிகளை முக்கிய பதவிகளில் அமர்த்த அரசாங்கம் தயாராக இல்லை. ஏற்கெனவே ராஜபக் ஷக்களின் ஆதிக்கம் இராணுவத்துக்குள் அதிகம் இருப்பதான கருத்து பரவலாக இருந்து வருகிறது.

இதனால், அத்தகைய அதிகாரிகளை முக்கிய பதவிகளில் அமர்த்துவதை, அரசாங்கம் விரும்பவில்லை. அண்மையில் கூட சேவையில் உள்ள, கஜபா படைப்பிரிவைச் சேர்ந்த நான்கு மேஜர் ஜெனரல்கள், முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக் ஷவை சந்தித்துப் பேசியதாக, ராயவ சிங்கள வாரஇதழ் கடந்தவாரம் செய்தி வெளியிட்டிருந்தது.

ஏற்கனவே, நீர்கொழும்பு விடுதி ஒன்றில் கடந்த ஆண்டு இறுதியில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை, ஒன்பது மேஜர் ஜெனரல்கள் சந்தித்துப் பேசியதையடுத்து, உயர்மட்டப் பிரமுகர்கள், அரசியல்வாதிகளை சந்திப்பதற்கு முன்அனுமதி பெறப்பட வேண்டும் என்று இராணுவத் தளபதியால் கண்டிப்பான அறிவுறுத்தல் விடுக்கப்பட்டிருந்தது.

அதையும் மீறித் தான், நான்கு மேஜர் ஜெனரல்கள், பசில் ராஜபக் ஷவைச் சந்தித்திருந்தனர்.

இதுபோன்ற சம்பவங்கள், அரசாங்கத்துக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்பதால் தான், முன்னைய ஆட்சியாளர்களுக்கு நெருக்கமான அதிகாரிகளை தற்போதைய அரசாங்கம் முக்கியத்துவமற்ற பதவிகளில் அமர்த்தியுள்ளது.

இராணுவக் கட்டமைப்பில் மறுசீரமைப்பை மேற்கொள்வதன் மூலமே, சர்வதேச ஆதரவைத் தக்கவைக்க முடியும் என்ற நிலைக்கு அரசாங்கம் வந்திருக்கிறது. இத்தகைய மறுசீரமைப்பின் போது, சர்ச்சைக்குரிய அதிகாரிகளை ஓரம்கட்டி விடுவது தான் அரசாங்கத்தின் இப்போதைய இலக்கு.

அதனை நோக்கி அரசாங்கம் உறுதியாக முன்னகர்ந்து வருகிறது என்பதையே, மேஜர் ஜெனரல் பிரசன்ன சில்வாவின் ஓய்வு எடுத்துக் காட்டுகிறது.

SHARE