சாலையோரம் படுத்திருந்த நபர் மீது காரை ஏற்றி கொன்ற பொலிசார்: நள்ளிரவில் ஒரு சோக சம்பவம்

293
ஜேர்மனி நாட்டில் சாலையோரம் படுத்திருந்த நபர் மீது காரை ஏற்றி பொலிசார் ஒருவர் கொன்றுள்ளதாக வெளியாகியுள்ள தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.ஜேர்மனியில் உள்ள Zirndorf என்ற நகரிலிருந்து நேற்று நள்ளிரவு 2 மணியளவில் பொலிசார் ஒருவர் ரோந்து பணியில் ஈடுப்பட்டிருந்தார்.

Nuremberg என்ற நகரை அடைந்த பின்னர் அங்குள்ள ஒவ்வொரு சாலைகளையும் கண்காணித்தவாறு சென்றுள்ளார்.

அப்போது, சாலையோரமாக படுத்திருந்த 58 வயதான நபர் மீது பொலிசார் வாகனம் ஏறியதாக கூறப்படுகிறது.

உடனடியாக காரை விட்டு இறங்கிய பொலிசார் மருத்துவ அவசர வாகனத்திற்கு தகவல் அளித்துள்ளார். ஆனால், படுகாயம் அடைந்திருந்த நபர் சில நிமிடங்களிலேயே உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக அந்நகர பொலிஸ் மேல் அதிகாரிகள் சம்பவம் எவ்வாறு நிகழ்ந்தது என்பது குறித்து விரிவான விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளனர்.

பொலிசார் ஓட்டிச்சென்ற வாகனத்தில் தொழில்நுட்ப கோளாறுகள் ஏதாவது இருக்கின்றனவா என்பது குறித்து ஆய்வு செய்ய ரோந்து வாகனத்தை பொலிசார் பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர்.

காரை ஏற்றிய பொலிசாரிடம் விசாரணை செய்தபோது, ‘நள்ளிரவு நேரம் என்பதால் சாலையோரம் படுத்திருந்த நபரை கவனிக்கவில்லை’ என கூறியுள்ளார்.

சம்பவம் தொடர்பாக பொலிசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், விபத்தினை நேரில் பார்த்த சாட்சிகள் இருந்தால் அவர்கள் உடனடியாக பொலிசாரை தொடர்புக்கொள்ளுமாறு பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

SHARE