சிங்களவர்களின் விருப்பை பெற்ற சமஷ்டி சாத்தியமில்லை – திருநாவுக்கரசு

329

 

இறைமையுள்ள சமஷ்டித் தீர்வுக்கு சிங்கள இனத்தை உள்ளடக்கிய பொதுவாக்கெடுப்பிற்கு இடமில்லை.

அரசியல் யாப்பு கடவுளால் உருவாக்கப்படுவதில்லை. அது மனிதனால் உருவாக்கப்படுகிறது.

026

இலங்கை அரசியல் யாப்புகள் அனைத்தும் இனப்பிரச்சனையை தீர்ப்பதில் தோல்வி கண்டவை மட்டுமல்ல. அவை இனப்பிரச்சனையை பெரிதும் உருவாக்குவதில் பங்கு வகித்தவையுங்கூட.

மனிதனால் உருவாக்கப்பட்ட இந்த யாப்புகள் பிழையானவை மட்டுமல்ல சமூக நீதி பொறுத்து அவை பெருங் குற்றங்களுக்கு ஏதுவானவையாகவும் உள்ளன. இத்தகைய பிழையான, குற்றம் நிறைந்த அரசியல் யாப்புகளை உருவாக்கிய மனிதர்களே அதனை திருத்தி சரியான யாப்புகளையும் உருவாக்க முடியும்.

இதுவரை இருந்த யாப்புகள் இனப்பிரச்சனைகளை தீர்க்கத் தவறியவை மட்டுமன்றி அவை இனப்பிரச்சனையை பெரிதும் உருவாக்கியவையுங்கூட என்றவகையில் அந்த யாப்புகளை நிராகரித்து புதிய யாப்பினை உருவாக்க வேண்டிய கட்டாயமே இன்றைய தேவையாகும்.

பழைய பிழையான குற்றம் நிறைந்த யாப்புகளை நிராகரித்து புதிய சரியான நன்மை தரத்தக்க யாப்பை உருவாக்க வேண்டிய நிலையில் பழைய யாப்பை நிராகரித்து புதிய யாப்பை உருவாக்க வேண்டியவர்கள் பழைய யாப்பை நிராகரிக்கும் போது அதனுடன் கூடவே பழைய யாப்பின் நிபந்தனைகளையும் சேர்த்து நிராகரிப்பதன் மூலமே புதிய யாப்பையும் புதிய தீர்வையும் உருவாக்க முடியும்.

1978ஆம் ஆண்டு நடைமுறைக்கு வந்த இரண்டாவது குடியரசு அரசியல் யாப்பானது அதிகூடிய நெகிழ்ச்சியற்ற யாப்பாக வடிவமைக்கப்பட்டது. அந்த யாப்பில் உள்ள நிபந்தனையாக மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம், பொதுவாக்கெடுப்பின் மூலமான அங்கீகாரம் என்பவற்றின் வாயிலாகவே அரசியல் யாப்பில் மாற்றம் செய்யலாம் என்று நெகிழ்ச்சியற்ற கடும் நிபந்தனை விதிக்கப்பட்டது. மேலும் விகிதாசார பிரதிநிதித்துவத்தின் கீழ் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் பெறுவது என்பதும் கடினம் என்ற நிலையில் அதன் நெகிழ்ச்சியின்மை இன்னொருபடி அதிகரித்திருந்தது. அதாவது 1972ஆம் ஆண்டு முதலாவது குடியரசு அரசியல் யாப்பில் இருந்த மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் என்ற நிபந்தனைக்கு அப்பால் ‘பொதுவாக்கெடுப்பு’ (Referendum)  என்ற புதிய ஒரு நிபந்தனை சேர்க்கப்பட்டது மட்டுமன்றி விகிதாசார பிரதிநிதித்துவத்தின் கீழ் மூன்றில் இரண்டு பெரும்பான்மை என்ற விடயமும் கடினமுடையதாகியது.

இந்த நெகிழ்ச்சியற்ற யாப்பு நடைமுறையில் இனப்பிரச்சனையை தீர்க்கத் தவறியது மட்டுமன்றி அதுவே இனப்பிரச்சனைக்கு தூண்டுகோலாகவும் இருந்து செயற்படுகிறது என்றவகையில் அந்த யாப்பிற்குப் பதிலாக புதிய யாப்பை உருவாக்கி அந்த புதிய யாப்பின் கீழ் இனப்பிரச்சனைக்குத் தீர்வுகாணப்படும் முயற்சிகள் ஆரம்பமாகின.

1978ஆம் ஆண்டு அரசியல் யாப்பை நிராகரிக்கும் போது கூடவே அதன் நிபந்தனையான பொதுவாக்கெடுப்பையும் நிராகரிக்க வேண்டும். தற்போது பொதுவாக்கெடுப்பில் சிங்கள மக்களின் ஆதரவை பெறத்தக்க வகையில் அதற்கேற்ற தீர்வையே முன்வைக்கலாம் என்று ஆட்சிப்பீடத்தில் உள்ளோர் தமிழ்த் தலைவர்களிடம் கூறத்தொடங்கியுள்ளனர். இது முற்றிலும் தவறான ஒரு அணுகுமுறையாகும்.

தீங்கிழைக்கும் ஜே.ஆர்.ஜெயவர்த்தனவினுடைய நெகிழ்சியற்ற யாப்பை (Inflexible Constitution) யாப்பை மாற்றும் போது கூடவே அதன் Inflexibility-யையும் சேர்த்து மாற்ற வேண்டும். ‘பொதுவாக்கெடுப்பு’ (Referendum) என்பது முக்கால் பகுதியினரான சிங்கள இனத்தைக் கொண்ட நாட்டில் அது பெரும்பான்மையின நாயகமாகவே அமைய முடியும். இதனை Majoritarianism என்று அழைப்பர். இயல்பாகவே இலங்கையின் அரசியல் யாப்புகள் சிங்கள பெரும்பான்மையினரின் கையில் பெரும்பான்மையின நாயகத்தை ஒப்படைத்துள்ள பின்னணியில் இந்த பொதுவாக்கெடுப்பு என்பது யாப்பிற்கான ஒரு நிபந்தனையாக அமையும் போது அது மேற்படி பெரும்பான்மையின நாயகத்தின் உச்சகட்டமாக அமைந்துவிடுகிறது. பல்லின மக்களைக் கொண்ட நாட்டில் ஓர் இனப்பெரும்பான்மை நாயகம் செயற்படுவதுதான் இனப்பிரச்சனையை மேலும் மேலும் மோசமாக்குவதற்கான காரணியாக உள்ளது. அந்த வகையில் அரசியல் யாப்பை திருத்துவதற்கு தடையான பொதுவாக்கெடுப்பு என்ற நிபந்தனையை மாற்றாமல் இனப்பிரச்சனைக்கு தீர்வுகாண முடியாது.

இந்த பொதுவாக்கெடுப்பு என்பது இதற்கு முன்னுள்ள யாப்புகளில் இருந்ததில்லை. 1978ஆம் ஆண்டு யாப்பில்தான் அது முதல்முறையாக உருவாக்கப்பட்டது.

இனப்பிரச்சனையல்லாத விடயங்களில் பொதுவாக்கெடுப்பு என்ற நிபந்தனை இருப்பது வேறு இனப்பிரச்சனைக்குக் காரணமான விடயங்களில் பொதுவாக்கெடுப்பு என்ற நிபந்தனை இருப்பது கேடு. அமெரிக்க யாப்பில் பொதுவாக்கெடுப்பு என்ற ஒன்றில்லை. ஆயினும் அது வெற்றிகரமாக செயற்படுகிறது.

சுமாராக முக்கால் பங்கினரான சிங்கள பெரும்பான்மையினரைக் கொண்ட நாட்டில் ஏனைய இனங்களின் நலன்சார்ந்த விடயங்களில் பொதுவாக்கெடுப்பு என்பது சிங்கள இனநாயகமாகவே அமைய முடியும். ஆதலால் அது அகற்றப்படாமல் இனப்பிரச்சனை சார்ந்த விடயங்களை அணுகமுடியாது.

இது ஒரு பெரிய மீன் தத்துவமாகும். அதாவது சின்ன மீனை பெரிய மீன் விழுங்கும் முன்பு பெரிய மீன் சின்ன மீன்களுக்கு கூறியதாம் இருவருக்கும் பொதுவான ஒரு சட்டத்தை உருவாக்குவோம் அதன்படி மீனை மீன் விழுங்கலாம். ஆனாலும் சின்ன மீனுக்கு சலுகையாக முதலில் பெரிய மீனை விழுங்கும் உரிமை சின்ன மீனுக்குக் கொடுக்கப்படும். அதன்பின்பே பெரிய மீன்களுக்குரிய சட்டம் செல்லுபடியாகும் என்று அமைந்தது. இதைக் கேட்டு சின்ன மீன்கள் மகிழ்ச்சியடைந்தன. இதன்படி மேற்படி சட்டம் நிறைவேற்றப்பட்டு முதலில் பெரிய மீன்களை விழுங்குவதற்கான உரிமை சின்ன மீன்களுக்கு வழங்கப்பட்டது. ஆனால் சின்ன மீன்களால் அது முடியாமல் போனது. இறுதியில் பெரிய மீன்கள் வாயைத் திறந்த போது சின்ன மீன்களெல்லாம் அதற்கு இரையாகின. இந்த சலுகை நிறைந்த பெரிய மீன் தத்துவத்தை ஏற்கமுடியாது என்பது எப்படியோ அப்படியே மேற்படி பொதுவாக்கெடுப்பு என்ற பெரும்பான்மையினத்திற்குச் சாதகமான அரசியல் யாப்பு நிபந்தனையையும் ஏற்கமுடியாது.

இங்கு ‘பொதுவாக்கெடுப்பு’ என்று தமிழிலும் ‘Referendum’ என்று ஆங்கிலத்திலும் சொல்லப்படும் இப்பதத்தின் அரசியல் கோட்பாட்டு விளக்கத்தை நாம் ஐயம்திரிபற கற்றறிய வேண்டியது அவசியம்.

ஆங்கிலத்தில் ‘Referendum’ என்ற பதம் பெரும் பிரயோகத்தைப் பெற முன்பு பிரென்சு மொழியில் ‘Plebiscite’ என்ற பதம் பிரயோகிக்கப்பட்டது. இது 1789ஆம் ஆண்டு பிரென்சு புரட்சியோடு ஓர் அரசியல் பதமாக உலகரங்கில் பிரவேசித்தது.

‘Pleb’ என்ற இலத்தீன் வேர்ச்சொல்லில் இருந்து ‘Plebiscite’ என்ற பிரென்சு மொழிச் சொல் உருவாகியது. ‘Pleb’ என்பதன் பொருள் The Common People என்ற அர்த்தத்தில் வரும் ‘பொதுமக்கள்’ என்பதாகும். மொத்தத்தில் இது பொதுமக்கள் தீர்ப்பு என்று பொருள்படும்.

அதாவது பிரான்சில் 1789ஆம் ஆண்டு புரட்சி நடந்து கொண்டிருந்த போது பிரபுக்கள் ஆங்காங்கே மக்களால் கைதுசெய்யப்பட்டனர். அவர்கள் மீது மக்கள் ஒன்றுகூடி அவர்களை விசாரணை செய்தனர். அதாவது விசாரணை ஆசனத்தில் சில புரட்சியாளர்கள் அமர்ந்திருப்பார்கள். மக்களிடம் இருந்து குறித்த பிரபு மீதான குற்றச்சாட்டுக்கள் என்னவென்று கோரப்படும். இறுதியில் அக்குற்றச்சாட்டுக்கள் மீது மக்கள் வாக்கெடுப்பு நிகழ்த்தி அந்த பிரபுவுக்கு தண்டணை நிறைவேற்றப்படும். இந்த வாக்கெடுப்பு முறைதான் ‘Plebiscite’ என்று அழைக்கப்பட்டது.

அதாவது அந்த குறித்த பிரபுவின் குறித்த ஆளுகை பிரதேசத்திற்கு உட்பட்ட மக்கள் அப்பிரபு மீது குற்றச்சாட்டுக்களை சுமத்தி அக்குறித்த மக்களால் வாக்களிப்பின் மூலம் நிறைவேற்றப்படும் தீர்ப்பையே மேற்படி ‘Plebiscite’ என்று அழைத்தனர்.

இது பின்பு தேசிய இனங்களின் வாக்கெடுப்பிற்கு உரியதாக பிரயோகம் பெற்றது. அதாவது பல்லினங்கள் வாழும் ஒரு நாட்டில் இனப்பிரச்சனை நிகழும் போது அப்பிரச்சனையை தீர்ப்பதற்கு குறித்த பாதிப்புக்கு உள்ளாகும் அந்த இனத்தில் மட்டும் எடுக்கப்படும் வாக்களிப்பு முறையாக இது வரலாற்றில் பரிமாணம் பெறும் நிலை உருவானது.

ஆனால் உலகளாவிய ரீதியில் பிரித்தானியாவே பலம் வாய்ந்த சூரியன் அஸ்தமிக்காத பெரிய ஏகாதிபத்திய அரசாக இருந்ததினால் அது தனது ஏகாதிபத்திய ஆளுகை நன்மைக்கேற்ப ‘Plebiscite’ என்ற குறித்த இனத்தின் மத்தியில் நடத்தப்படும் வாக்கெடுப்பு என்பதற்குப் பதிலாக பலபொருள்படும் ‘Referendum’ என்ற பதத்தை முன்னிலைப்படுத்தியது. ‘Referendum’ என்ற ஆங்கில மொழிப்பதம் ‘Referre’ என்ற லத்தீன் வேர்ச்சொல்லை அடிப்படையாகக் கொண்டு உருவானதாகும். ‘Referre’ என்பதன் பொருள் ‘எடுத்துப்பார்’ ‘Refer’ என்ற மூலப்பொருள்படும் வகையில் வடிவமைக்கப்பட்டது.

அது தனது தேவைக்கேற்ப பொது அர்த்தத்திலும், குறித்த அர்த்தத்திலும் இந்த ‘Referendum’ என்ற வாக்கெடுப்பு முறையை பிரயோகிக்கலாயிற்று.

‘Plebiscite’ என்றால் ஒரு குறித்த இனத்தில் மட்டும் நடத்தப்படும் வாக்கெடுப்பாகும். அதுவும் அந்த குறித்த இனத்தை இரண்டாகவோ அல்லது அதற்கு மேலாகவே கூறுபோட்டு வாக்கெடுப்பு நடத்தவும் முடியாது. அத்துடன் அந்த மக்களின் தலைவிதியை நாட்டில் உள்ள மற்றைய இனங்களின் வாக்கினால் நிர்ணயிக்கவும் முடியாது. இந்த குறித்த ‘Plebiscite’க்குப் பதிலாக பலபொருள் படும் ‘Referendum’ என்ற பதத்தை தமது ஆதிக்கத்தின் வாயிலாக ஸ்தாபித்துவிட்டனர். ஆனாலும் தமது தேவைக்கேற்ப அதனை குறித்த பொருளிலோ அல்லது பொதுப்பொருளிலோ அதனை பயன்படுத்தினர்.

தற்போது அது இலங்கையில் குறித்த பொருளில் அன்றி பொதுப்பொருளில் பயன்படுத்தப்படுகிறது. ஈழத் தமிழர்களை ஒரு தனித் தேசிய இனமாக அதுவும்; பிரிந்து செல்லும் சுயநிர்ணய உரிமையுடன் கூடிய மக்களாக 1944ஆம் ஆண்டு டாக்டர். எஸ்.ஏ.விக்ரமசிங்க தலைமையிலான கம்யூனிஸ்ட் பார்ட்டியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தமிழ்த் தலைவர்கள் சமஷ்டிக் கோரிக்கையை முன்வைக்கும் முன்பு அல்லது பிரிந்து செல்வதற்கான தனிநாட்டுக் கோரிக்கையை முன்வைக்கும் முன்பு இலங்கை கம்யூனிஸ்ட் பார்டியால் மேற்படி தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தற்போது அரங்கத்தில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் ‘இறைமையுடன் கூடிய சமஷ்டி ஆட்சிமுறை’ என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளனர். கூடவே தமிழ்த் தேசிய முன்னணி ‘ஒரு நாடு இரு தேசங்கள்’ என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளது. இதன்படி தமிழர் வேறு தேசம், சிங்களவர் வேறு தேசம் என்பதே பொருளாகும்.

மேற்படி கோட்பாட்டு ரீதியான நிலைப்பாடுகளைக் கொண்டு பார்க்கும் போது தமிழ் மக்கள் என்பது ஒரு தனித்துமான தேசியம் என்பதும் அவர்களின் தலைவிதியை இன்னொரு இனத்தின் வாக்கெடுப்பினால் நிர்ணயிக்க முடியாது என்பதுமே உண்மையாகும்.

அதாவது தமிழ்த் தேசிய கூட்டமைப்பு கூறும் இறைமையுள்ள சமஷ்டி என்பதில் தமிழ் மக்களின் இறைமை தனித்துவமாக பிரித்து கூறப்பட்டிருக்கிறது. ‘இறைமை’ அந்த மக்களுக்கு மட்டும் உரியது என்பதுடன் அதனை இன்னொரு மக்கள் கூட்டத்தால் நிர்ணயிக்க முடியாது என்பதுமாகும்.

இதன்படி தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் தாம் கூறும் இறைமையின் பேரால் இலங்கை தழுவிய பல்லினங்களினால் அளிக்கப்படும் பொதுவாக்கெடுப்பை ஏற்றுக் கொள்ள நியாயம் இருக்க முடியாது.

தமிழ்த் தேசிய முன்னணி கூறும் ஓரு நாட்டில் இரு தேசங்கள் உள்ளன என்ற விடயத்தில் தமிழ்த் தேசத்தின் தலைவிதியை சிங்கள தேசத்தால் நிர்ணயிக்க முடியாது என்ற வகையிலும் அவர்களுடைய நிலைப்பாட்டிலும் பல்லினங்கள் சார்ந்த பொதுவாக்கெடுப்பிற்கு இடம் இருக்கமாட்டாது என்பது தெளிவாக உள்ளது.

தமிழ் மக்களுக்கு என்ன வேண்டும் என்பதை அவர்கள் தீர்மானிக்கும் வகையில் அவர்கள் மத்தியில் மட்டும் பொதுவாக்கெடுப்பு நடத்தப்படுவது சரியானது. அதாவது வேறு இனங்களினால் அவர்களின் தலைவிதி நிர்ணயிக்கப்படும் பொதுவாக்கெடுப்போ அல்லது அவர்களை கூறுபோட்டு நடத்தப்படும் பொதுவாக்கெடுப்போ பிழையானது. மாறாக அவர்களுக்கு என்ன வேண்டும் என்பதற்கு அவர்கள் மத்தியில் எடுக்கப்படும் பொதுவாக்கெடுப்பு சரியானது.

இங்கு பொதுவான பொதுவாக்கெடுப்பு, குறித்த பொதுவாக்கெடுப்பு என்ற இருவேறுவகையில் இந்த வாக்கெடுப்புமுறை வேறுபடுத்தி நோக்கப்பட வேண்டும். எல்லாவற்றிற்கும் அப்பால் அளவால் பெரிய இனத்தின் ஆதிக்கத்திற்குரிய பெரும்பான்மை இனநாயக ‘பொதுவாக்கெடுப்பு’ முறையின் கீழ் இனப்பிரச்சனைக்கான தீர்வை புதிய யாப்பில் உருவாக்க முடியாது.

1972ஆம் ஆண்டு முதலாவது குடியரசு அரசியல் யாப்பை தந்தை செல்வா யாழ்ப்பாணம் நாவலர் மண்டபத்தில் கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் முன் தீயிட்டுக் கொளுத்தியதன் மூலம் அந்த யாப்பை நிராகரித்தார். இது 1978ஆம் ஆண்டு யாப்பிற்கும் பொருந்தும். இந்த 1978ஆம் ஆண்டு யாப்பை மாற்றி புதிய யாப்பு எழுதும் போது கூடவே அதில் காணப்படும் பெரும்பான்மை இனத்தின் அனுமதியைப் பெறுவதான பொதுவாக்கெடுப்பு என்ற நிபந்தனையையும் நீக்காமல் அரசியல் தீர்வு காண்பது சாத்தியமில்லை என்று தந்தை செல்வா 1972ஆம் ஆண்டு அரசியல் யாப்பிற்கு இட்ட தீ இளைஞர்களின் உள்ளங்களில் அணையா தீயாக கொழுந்துவிட்டு எரியத் தொடங்கி அது பெரும் போராட்டத்தை உருவாக்கியதை கருத்தில் கொள்ள வேண்டும். ஆதலால் மனிதன் உருவாக்கிய தீமையான அரசியல் யாப்பை புனிதப் பொருளாக கருதாது அதனை முற்றிலும் மாற்றும் ஒரு நடைமுறையின் மூலமே அரசியல் தீர்வை காணமுடியும்.

பொதுவாக்கெடுப்பு என்ற முன்னைய யாப்பின் விதியின் கீழ்தான் புதிய யாப்பை உருவாக்கலாம் என்று தமிழ் மக்களை அறிவிலிகளாக எண்ணி அரசு தரப்பில் சொல்லப்படும் வாதத்தை சிறுபிள்ளைத்தனமாக ஏற்கும் நிலையில் தமிழினம் இன்று இல்லை. கடந்த மூன்று தசாப்தப் போராட்டத்தின் அனுபவங்களில் இருந்து அரசியலை முற்றிலும் அறிவுபூர்வமாக பார்க்கும் நிலைக்கு தமிழ் மக்கள் இன்று வளர்ந்துள்ளனர். முள்ளிவாய்;க்கால் உலைக்களத்திற்கு இத்தகைய உருவாக்கத்தில் பெரும் பங்குண்டு.

SHARE