சிங்களவர்களுக்கு ஒரு நீதி தமிழர்களுக்கு ஒரு நீதி தொடர்பில் தமிழ் மக்கள் அச்சம்!

278

 

இந்த நல்லாட்சி அரசாங்கம் சிங்கள மக்களுக்கு ஒரு நீதியையும் தமிழ் மக்களுக்கும் ஒரு நீதியையும் வழங்குவது தமிழ் மக்கள் மத்தியில் தொடர்ந்தும் அச்ச நிலையினையே ஏற்படுத்தியுள்ளதாக வடமாகாணசபை உறுப்பினர் சுகிர்தன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் நேற்று நடைபெற்ற சத்துருக்கொண்டான் படுகொலை நினைவு தினத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை குறிப்பிட்டார்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,

சத்துருக்கொண்டான் படுகொலை 26 வருடங்களை கடந்துள்ளபோதிலும் அதன் உறவுகள் இன்றும் கண்ணீருடனேயே உள்ளனர்.

 

இது வரையும் அவர்களுக்கான நீதி நியாயம் கிடைக்காத நிலையே இருந்துவருகின்றது.

உருவாக்கப்பட்டுள்ள நல்லாட்சி அரசாங்கம் கூட சிங்கள மக்களுக்கு ஒரு நீதியையும் தமிழ் மக்களுக்கு ஒரு நீதியையும் வழங்குகின்றது.இது தமிழ் மக்கள் மத்தியில் அச்ச நிலையை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2011ஆம் ஆண்டு படுகொலைசெய்யப்பட்ட பாரத லக்ஸ்மனனின் கொலை மரண தண்டனையை இந்த அரசாங்கம் வழங்கியுள்ளது.

ஆனால் 26 வருடத்திற்கு மேலாக இந்த நாட்டில் தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட இன அழிப்புக்கு இந்த அரசாங்கம் உண்மையான தீர்வினை வழங்கவில்லை.

 

இதனை நாங்கள் மிக வன்மையாக கண்டிக்கின்றோம்.

ஐந்து வருடத்தில் சிங்கள மக்களுக்கு ஏற்பட்ட வலிக்கு நீதி கிடைக்குமென்றால் சத்துருக்கொண்டான் படுகொலை தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்ட இராணுவ அதிகாரிக்கு எந்த தண்டனையும் இதுவரையில் வழங்கப்படாதது இந்த நல்லாட்சி அரசாங்கத்தினை கேள்விக்குறியாக்கியுள்ளது.

சர்வதேச விசாரணை நாங்கள் இதன் காரணமாகவே கோரி நிற்கின்றோம்.

கடந்த 2009ஆம் ஆண்டு வரை எமக்காக உயிர்நீர்த்த உறவுகளுக்கான நினைவுத்தூபி முள்ளிவாய்க்காலில் அமைக்கப்படவேண்டும்.

அந்த நினைவுத்தூபியானது வடகிழக்கில் படுகொலைசெய்யப்பட்ட அனைத்து உறவுகளுக்குமானதாக அமைக்கப்படவேண்டும்.

 

இந்த அரசாங்கம் தடைவிதிக்காது அதனை அமைப்பதற்கு ஆதரவு வழங்கவேண்டும்.

வடக்கு கிழக்கு இணைந்த தீர்வு ஒன்றைப்பெற்றுக்கொள்ளும் வகையில் அனைவரும் இணைந்து செயற்படவேண்டும்.

SHARE