சிறுவர்கள் + பாலியல் வல்லுறவு பற்றி – திருமதி கனிமொழி + ‘ஹிந்து’ நாளிதழ் சொல்வது ஏற்கத்தகுந்ததா ?

343

 

.

ராஜ்ய சபா உறுப்பினர் திருமதி கனிமொழி நேற்றைய ஹிந்து ஆங்கில
நாளிதழில் சிறுவர்கள் பாலியல் வன்முறையில் ஈடுபடுவதற்காக,
அவர்களை தண்டனைக்கு உட்படுத்துவது குறித்து – ஒரு விரிவான கட்டுரை
எழுதி இருக்கிறார்.


20-kanimozhi-3-300
ஹிந்து நாளிதழும் திருமதி கனிமொழியின் இந்த கருத்தை வலியுறுத்தி,
புதிய சட்டத்தை கைவிட வேண்டுமென்று தலையங்கமே எழுதி இருக்கிறது.

அவர்கள் கூறுவது என்ன …?

தற்போதைய சட்டங்கள், 18 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் –
பாலியல் வன்முறை, கொலை உட்பட எத்தகைய கொடுங்குற்றங்களில்
ஈடுபட்டாலும் அவர்களை குழந்தைகளாகவே கருதி – சிறுவர் சீர்திருத்தப்
பள்ளிகளுக்கு அனுப்புவதோடு நிறுத்திக் கொள்கிறது.

டெல்லியில் நடைபெற்ற ‘நிர்பயா’ பாலியல் வன்முறையில் ஈடுபட்டவர்களில்
ஒரு சிறுவன் – கொடுமையான குற்றங்களில் ஈடுபட்டாலும், 18 வயது
நிரம்பாதவன் என்கிற காரணத்தால், கடும் தண்டனையிலிருந்து
தப்பிய காரணத்தால் பொது மக்களிடையே இந்த சட்டப்பிரிவிற்கு
கடும் எதிர்ப்பு எழுந்தது. எனவே, தற்போதைய பாஜக அரசு ஆகஸ்ட் 2014-ல்
16 முதல் 18 வயது வரையுள்ள குற்றவாளிகள், கொலை- கற்பழிப்பு போன்ற
கொடும் குற்றங்களில் ஈடுபடும்போது, அவர்களை பெரியவர்களாகவே
கருதி, பொது கிரிமினல் சட்டங்களுக்கு உட்படுத்தும் வகையில் ஒரு
சட்ட மசோதாவை Juvenile Justice (Care and Protection Bill) பாராளுமன்றத்தில்
அறிமுகப்படுத்தியது. தொடர்ந்து இது ஒரு பாராளுமன்ற நிலைக்குழுவின்
பரிசீலனைக்கு அனுப்பப்பட்டது. இந்த நிலைக்குழு, இந்த விதிகளை
ஏற்றுக் கொள்ள மறுத்து, தனது அறிக்கையை சமர்ப்பித்தது.

இருந்தாலும், மத்திய அமைச்சரவை இந்த குழுவின் பரிந்துரைகளை
ஏற்காமல், முதலில் சட்ட மசோதாவில் கூறிய விதிகளையே
(16 முதல் 18 வயது வரையுள்ள குற்றவாளிகள், கொலை- கற்பழிப்பு போன்ற
கொடும் குற்றங்களில் ஈடுபடும்போது, அவர்களை பெரியவர்களாகவே
கருதி, பொது கிரிமினல் சட்டங்களுக்கு உட்படுத்துவது ) சட்டமாக
இயற்ற ஒப்புதல் அளித்துள்ளது. இந்த மசோதா விரைவில் பாராளுமன்றத்தில்
விவாதத்திற்கும் வரவிருக்கிறது.

திருமதி கனிமொழி அவர்களும், ஹிந்து செய்தித்தாளும், இந்த சட்ட
மசோதாவை கடுமையாக எதிர்த்து, கட்டுரை – தலையங்கமும் எழுதி
இருக்கின்றனர். அவர்கள் கூற்று –

– புள்ளி விவரங்களின்படி 2013-ஆம் ஆண்டில் – 16 முதல் 18 வரையுள்ள
சிறுவர்களின் மீது மொத்தம் 1388 பாலியல் வன்முறை வழக்குகள் மட்டுமே (!!!)
பதிவு செய்யப்பட்டிருக்கிறதாம். இது அந்த ஆண்டு பதிவு செய்யப்பட்ட
மொத்த பாலியல் வன்முறை வழக்குகளில் 5 சதவீதம் மட்டுமே. எனவே,
இந்த சிறிய எண்ணிக்கை ( ?) யிலான வழக்குகளாக, சட்டத்தையே
திருத்துவது தவறான போக்கு….!!!

– சிறுவர்களை சீர்திருத்த முயற்சிக்க வேண்டுமேயன்றி, தண்டனைக்கு
உள்ளாக்கக் கூடாது….!!!

-வறுமை காரணமாகவும், கல்வியறிவு இன்மை காரணமாகவும் இத்தகைய
குற்றங்களில் ஈடுபடும் சிறுவர்களை தண்டனக்கு உட்படுத்துவது கொடுமை….!!!

– தான் பல சமூக நல அமைப்புகளிடமும் கலந்து பேசியதாகவும்,
அவைகளும் இந்த சட்ட திருத்தத்திற்கு எதிராகவே கருத்து
தெரிவித்திருப்பதாகவும் திருமதி கனிமொழி கூறி இருக்கிறார்.

மொத்தமாக இந்த புதிய சட்டம் கைவிடப்பட வேண்டும் என்பது
திருமதி கனிமொழி மற்றும் ஹிந்து நாளிதழின் கருத்து. தங்கள் கருத்திற்கு
பொது மக்களின் ஆதரவை அவர்கள் கோரி இருக்கிறார்கள்..

இந்த விஷயத்தில் நான் சில கருத்துக்களை முன்வைக்க விரும்புகிறேன் –

ஏற்கெனவே இந்த நாட்டில் குற்றங்கள் – குறிப்பாக பெண்களுக்கு எதிரான
பாலியல் வன்முறைகள் வயது வித்தியாசமே இல்லாமல் அரங்கேறிக்
கொண்டிருக்கின்றன. செய்தித்தாள்களின் மூலமும், தொலைக்காட்சி
ஊடகங்களின் மூலமும் இந்த செய்திகளுக்கு கிடைக்கும் விளம்பரங்களால்-
உலகமே நம்மை கேவலமாகப் பார்க்கிறது – இந்தியா காமக்கொடூரன்களால்
நிரம்பிய நாடு என்று நினைக்கிறார்கள்.

நாளுக்கு நாள், மணிக்கு மணி – இந்த வன்முறைகள் கூடிக் கொண்டே
போகின்றன.

இதற்கான முக்கிய காரணங்கள் – பல வழக்குகளில் குற்றவாளிகள்
பிடிபடுவதில்லை; பிடிபட்டாலும் பலமான சாட்சியங்கள் அமைவதில்லை;
அப்படி அமைந்தாலும், தாமதப்படும் வழக்குகளால், குற்றவாளிகள்
ஜாமீனில் வெளிவந்து – சம்பந்தப்பட்டவர்களையும், சாட்சிகளையும் மிரட்டி,
வழக்கை நீர்த்துப் போக செய்கிறார்கள். ஆண்டுக்கணக்கில் வழக்குகள்
நீடிக்கின்றன.

இறுதியில், தண்டிக்கப்படுபவர்களின் சதவீதம் மிகமிகக் குறைவாகவே
இருக்கிறது. இந்த லட்சணத்தில் – 18 வயதுக்கு உட்பட்டவர்கள்,
வயது காரணமாகவே சுலபமாக தண்டனையிலிருந்து தப்பி விடலாம்
என்கிற வசதி வேறு..!

குற்றங்கள் குறைய வேண்டுமானால் –

கடுமையான தண்டனைகள் விதிக்கப்பட வேண்டும்.
வழக்குகள் விரைவாக விசாரிக்கப்பட்டு தீர்ப்பு வழங்கப்பட வேண்டும்.
தப்பு செய்தவர் யாராக இருந்தாலும் தண்டனையிலிருந்து தப்ப முடியாது
என்பது உறுதி செய்யப்பட வேண்டும்.

இன்னொரு விஷயம் – இந்த 18 வயது உச்ச வரம்பு….

17 வயது 11 மாதங்கள் நிரம்பியவன் கற்பழித்தால் தண்டனை கிடையாது.
இரண்டு மாதங்கள் முன்னதாக பிறந்திருந்து, 18 வயது 1 மாதம் நிரம்பியவன்
கற்பழித்தால் தண்டனை உண்டு. இதென்ன பைத்தியக்காரத்தனம்…?

இதன் மூலம் கற்பழிப்பை 18 வயதுக்கு உட்பட்டவர்கள்
தாராளமாகச் செய்யலாம் என்பதை சட்டபூர்வமாக்க விரும்புகிறார்களா ?

நம் நாட்டில், 17 வயது வாலிபன் ஒருவனுக்கு – குற்றங்களின் தன்மையும்
தெரியும், அதனால் ஏற்படக்கூடிய விளைவுகளும் தெரியும்.
தெரிய வேண்டியது ஒன்றே ஒன்று தான். என்ன தான் பின்னணி
இருந்தாலும், தப்பு செய்தால் தண்டனையிலிருந்து தப்ப முடியாது
என்கிற உண்மை.

பாலியல் வன்முறையில், கொலைகளில் – ஈடுபடக்கூடிய அளவிற்கு
உடல் வலிமையும், மனதில் தைரியமும் இருப்பவன் – வயது வரம்பை
மட்டும் வைத்து எப்படி குழந்தையாக கருதப்பட முடியும் ?
கொடும் செயலை செய்யத் துணிந்தவனால் கடும் தண்டனையை
அனுபவிக்க முடியாதா …?

மேலும், இத்தகைய நபர்களை வெளியில் விடுவதால் – அவர்கள்
மேலும் மேலும் இத்தகைய குற்றங்களில் ஈடுபட்டு, சமூகத்தை
சீரழிக்கவே வாய்ப்புகள் அதிகம்.

இத்தகைய வன்முறைகளால் பாதிக்கப்பட்டவர்களின் மனநிலை,
குடும்ப நிலையைப் பற்றி – கட்டுரையாளர்கள் யோசிக்கிறார்களா ?
ஒரு வேளை தங்கள் குடும்பத்தில், மிக நெருங்கிய உறவுப் பெண்
ஒருவருக்கு இத்தகைய கொடுமை நிகழ்ந்தாலும், அவர்கள் இதே
கருத்தைத்தான் கொண்டிருப்பார்களா …?

5 % தானே என்று வக்காலத்து வாங்குபவர்கள் –
இவர்களை இப்படியே விட்டால், 5 இன்னும் 5 வருடங்களில்
பதினைந்து ஆக வாய்ப்பிருக்கிறதே என்பதை யோசித்தார்களா ?

உண்மையில் இவர்கள் யாருக்காக வக்காலத்து வாங்குகிறார்கள்..?
பொதுமக்களுக்காகவா அல்லது குற்றவாளிகளுக்காகவா ?

துணிவிருந்தால், மக்கள் மத்தியில் இவர்கள் கருத்துக்கு
வாக்கெடுப்பு நடத்தி முடிவு தெரிந்து கொள்ள தயாரா ?

பெரும்பாலான மக்களின் கருத்துக்கு எதிராக இவர்கள்
பேசுவது ஏன் ? செயல்படுவது ஏன் ? யாரை குளிர்விக்க ?
சமூக சேவை என்கிற போர்வையில் நாடகமாடிக் கொண்டிருக்கும்
சில மேல் தட்டு மக்களுக்காகவா ?

SHARE