சுழலில்’ அச்சறுத்துவாரா தாகிர்: கங்குலி எச்சரிக்கை

331

‘தென் ஆப்ரிக்க அணி வீரர் தாகிர், இந்திய ஆடுகளத்திற்கு ஏற்ப செயல்படுவார். இவர் இந்திய அணிக்கு அச்சுறுத்தலாக இருப்பார்,’’ என, இந்திய அணி முன்னாள் கேப்டன் கங்குலி தெரிவித்தார்.

அடுத்த மாதம் இந்தியா வரும் தென் ஆப்ரிக்க அணி 3 ‘டுவென்டி–20’, 5 ஒரு நாள், 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் ‘டுவென்டி–20’ போட்டி அக்டோபர் 2ம் தேதி தர்மசாலாவில் நடக்கவுள்ளது. டெஸ்ட் தொடருக்கான தென் ஆப்ரிக்க அணியில் இம்ரான் தாகிர் உட்பட 3 ‘சுழல்’ வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.

இது குறித்து கங்குலி கூறியது: தென் ஆப்ரிக்க அணி சுழற்பந்துவீச்சாளர் தாகிர், இந்திய ஆடுகளத்திற்கு ஏற்ப செயல்படுவார். இவர், நமது அணிக்கு அச்சுறுத்தலாக இருப்பார். இந்திய வீரர்கள் 4 டெஸ்ட் போட்டியிலும் மோசமாக செயல்பட வாய்ப்பு இல்லை. எனவே, தென் ஆப்ரிக்கா தொடரை வெல்வது கடினமானது. இந்திய ஆடுகளங்களில், போட்டியின் 4வது நாளில் விக்கெட் அடுத்தடுத்து சரியும். இந்திய அணி 500 ரன்களுக்கு அதிகமான ரன்களை குவிப்பது அவசியம்.

விருப்பம்:

அனைத்து போட்டியிலும் வெற்றி பெற வேண்டும் என எண்ணக்கூடியவர் கோஹ்லி. ஆக்ரோஷமாக செயல்படும் இவர், சில நேரங்களில் எல்லை மீறுவார். இவரது எண்ணங்களை நான் விரும்புகிறேன். வியக்கத்தக்க பேட்ஸ்மேனான இவர், சமீபத்தில் இலங்கை டெஸ்ட் தொடரை வென்று காட்டினார்.

இவ்வாறு கங்குலி கூறினார்.

SHARE