சுழலில் மிரட்டி 6 விக்கெட்டுகளை அள்ளிய ஹேராத்: முதல் இன்னிங்சில் மேற்கிந்திய தீவுகள் 251 ஓட்டங்களுக்கு சுருண்டது

306

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் மேற்கிந்திய தீவுகள் அணி 251 ஓட்டங்களுக்கு சுருண்டது.

இலங்கை- மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி காலே மைதானத்தில் நடந்து வருகிறது.

இதில் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடியது. முதல் நாள் ஆட்டநேர முடிவில் இலங்கை 2 விக்கெட்டுக்கு 250 ஓட்டங்கள் எடுத்திருந்தது.

கருணாரத்னே 135 ஓட்டங்களுடனும், சந்திமால் 72 ஓட்டங்களுடனும் களத்தில் இருந்தனர்.

2வது நாள் ஆட்டத்தில் தொடர்ந்து நிதானமாக ஆடிய சந்திமால் சதம் அடித்தார். தொடக்க வீரரான திமுத் கருணாரத்னே 186 ஓட்டங்களில் ஆட்டமிழந்து இரட்டை சதத்தை தவறவிட்டார்.

இதைத் தொடர்ந்து சிறப்பாக விளையாடிக் கொண்டிருந்த சந்திமால் 151 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.

அணித்தலைவர் மேத்யூஸ் தன் பங்கிற்கு 48 ஓட்டங்கள் எடுத்தார். அறிமுக வீரரான சிறிவர்த்தனே (1) ஏமாற்றினார். குஷால் பெரேரா (23), தமிங்க பிரசாத் (13) நிலைக்கவில்லை.

ஹேராத் (0), நுவன் பிரதீப் (0) டக்-அவுட் ஆக, இலங்கை முதல் இன்னிங்சில் 484 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது.

தரிந்து கவுஷால் (9) ஆட்டமிழக்காமல் இருந்தார். மேற்கிந்திய தீவுகள் சார்பில், பிஷூ 4 விக்கெட்டை கைப்பற்றினார்.

பின்னர் மேற்கிந்திய தீவுகள் அணி தனது முதல் இன்னிங்சை தொடங்கியது. தொடக்க வீரர்களான பிராத்வெய்ட் (19), சாய் கோப் (23) ஹேராத் சுழலில் வீழ்ந்தனர்.

2வது நாள் ஆட்டநேர முடிவில் மேற்கிந்திய தீவுகள் அணி 2 விக்கெட்டுக்கு 66 ஓட்டங்கள் எடுத்திருந்தது. சாமுவேல்ஸ் (7), டேரன் பிராவோ (15) ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

இந்நிலையில் இன்று தொடங்கிய 3வது நாள் ஆட்டத்தில் சாமுவேல்ஸ், பிளாக்வுட்  தலா 11 ஓட்டங்களில் வெளியேறினர்.

டேரன் பிராவோ (50) அரைசதம் கடந்தார். அணித்தலைவர் ஹோல்டர் (19), ராம்தின் (23) நிலைக்கவில்லை.

இதன் பிறகு ரோச் (22), டெய்லர் (31), கப்ரில் (0) என வரிசையாக ஆட்டமிழக்க, 251 ஓட்டங்களுக்கு சுருண்டது மேற்கிந்திய தீவுகள் அணி. பிஷூ (23) ஆட்டமிழக்காமல் இருந்தார்.

சுழலில் மிரட்டிய ஹேராத் 6 விக்கெட்டுகளை அள்ளினார். பிரசாத் 2, பிரதீப், கவுஷால் தலா 1 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

‘பாலோ- ஆன்’ வாங்கிய மேற்கிந்திய தீவுகள் தொடர்ந்து 2வது இன்னிங்சை விளையாடி வருகிறது.

SHARE