ஜனாதிபதிக்கு எதிராக விசாரணை நடத்த வேண்டும்!- முன்னாள் பிரதம நீதியரசர்

313

 

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் குடும்ப நண்பியான லஞ்ச ஆணைக்குழுவின் பணிப்பாளர் திலக்ருக்ஷி டயஸ் விக்ரமசிங்க, அரசியல் ஒப்பந்தங்களை நிறைவேற்றாமல், நேர்மையான சேவையை செய்ய வேண்டுமாயின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிரான லஞ்ச குற்றச்சாட்டு குறித்து சுயாதீன விசாரணைகளை ஆரம்பிக்க வேண்டும் என முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா தெரிவித்துள்ளார்.

இதற்கு தேவையான அனைத்து அதிகாரங்களும் 19 வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தின் மூலம் கிடைத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

குருணாகலில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அமைச்சராக பதவி வகித்த காலத்தில் அவரது பிரதிநிதி ஒருவர் லஞ்சம் கோரியதாக அவுஸ்திரேலிய ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.

2011ம் ஆண்டு உலக வங்கியின் உதவியுடன் இலங்கையில் செயற்படுத்தப்படவிருந்த 30 கோடி ரூபா செலவிலான திட்டத்திற்கான ஒப்பந்தத்திற்கு அனுமதியை பெற வேண்டுமாயின் அரசியல் அனுசரணைக்காக பணம் வழங்கப்பட வேண்டும் என அமைச்சராக இருந்த மைத்திரிபால சிறிசேனவின் பிரதிநிதி ஒருவர் ஊடாக அவுஸ்திரேலியாவின் ஸ்னோ மவுண்டன் இஞ்சினியரிங் என்ற நிறுவனத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து சாட்சியமளித்து நிறுவனத்தின் முகாமையாளர் ஒருவர், தான் அமைச்சர் மைத்திரிபால சிறிசேனவை சந்தித்ததாக நிறுவனத்தின் உயர் அதிகாரிகளுக்கு மின்னஞ்சல் மூலம் அறிவித்துள்ளார்.

ஒப்பந்தத்தை வழங்கும் அமைச்சரவை பத்திரத்தில் கையெழுத்திட வேண்டுமாயின் அனுசரணை பணம் தேவை என தெரிவிக்கப்பட்டதாக முகாமையாளர் தனது உயர் அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தியுள்ளார்.

மேலும் திட்டத்தில் எந்தளவு சதவீதத்தை அமைச்சருக்கு வழங்க முடியும் என அந்த முகாமையாளர் கேட்டுள்ளார்.

தம்மிடம் இப்படியான கோரிக்கை முன்வைக்கப்பட்டதாக ஸ்னோ மவுண்ட் இஞ்சினியரிங் நிறுவனம் அவுஸ்திரேலியா அரசாங்கம் மேற்கொண்ட விசாரணைகளின் போது கூறியுள்ளது.

எனினும் இது குறித்து ஜனாதிபதியிடம் கேள்வி எழுப்பிய போது அது பற்றி தனக்கு எதுவும் தெரியாது, குற்றச்சாட்டுக்கு பதிலளிக்குமாறு சட்டமா அதிபருக்கு பணித்துள்ளதாக கூறியுள்ளார்.

நாட்டில் உண்மையான நல்லாட்சி நடக்குமாயின் லஞ்சம் கோரியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள ஜனாதிபதியினால், சட்டமா அதிபர் திணைக்களத்தின் உதவியை நாட முடியாது.

லஞ்ச ஆணைக்குழுவும் சட்டமா அதிபர் திணைக்களமும் செய்ய வேண்டியது, ஜனாதிபதிக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்வதாகும் எனவும் முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா குறிப்பிட்டுள்ளார்.

SHARE