ஜெனிவாவில் ஐ.நா. சபை தேனீர்ச்சாலையில் நேரத்தை கழிக்கும் தமிழ் அரசியல்வாதிகள்.

402

 

suresh in genevaஜெனிவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை கூட்டத்தொடர் வருடத்தில் மூன்று தடவைகள் நடைபெறும்.   1980களின் பின்னர் தமிழ் ஆயுதக்குழுக்களை அடக்குவதற்காக சிறிலங்கா படைகள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள், மற்றும் பயங்கரவாத தடைச்சட்டம் கொண்டுவரப்பட்ட பின்னரும், இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் 1988ஆம் ஆண்டு காலப்பகுதியில் தென்னிலங்கையில் ஜே.வி.பியை அடக்குவதற்காக அரச படைகள் மேற்கொண்ட மனித உரிமை மீறல் தொடர்பாக சிறிய அளவில் ஐ.நா.மனித உரிமை பேரவையில் பேசப்பட்டாலும் இலங்கை தொடர்பான தீர்மானங்கள் நிறைவேற்றப்படுவது 2009ஆம் ஆண்டுக்கு பின்னரான காலப்பகுதியில் தான்.

1988களின் பின்னர் எதிர்க்கட்சி வரிசையில் இருந்த நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராசபக்சவும், 1990களின் பின்னர் குமார் பொன்னம்பலம் போன்றவர்களும் ஐ.நா.மனித உரிமை பேரவை கூட்டத்தொடர்களில் கலந்து கொண்டிருக்கின்றனர். அவர்கள் அரசசார்பற்ற நிறுவனங்களின் ஊடக அவர்களின் பிரதிநிதிகளாகவே கலந்து கொண்டனர்.

1995ஆம் ஆண்டுகளின் பின்னர் பிரான்ஸ் தமிழர் மனித உரிமை அமைப்பின் பொதுச்செயலாளர் ச.வி.கிருபாகரன் உட்பட மிகச்சிலரே இக்கூட்ட தொடர்களில் கலந்து கொண்டனர்.
2009ஆம் ஆண்டுகளின் பின்னரே ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் கூட்டத்தொடர்கள் இலங்கையின் தமிழ் அரசியல்வாதிகள் மட்டத்திலும் சரி புலம்பெயர்ந்த நாடுகளில் உள்ள தமிழர் அமைப்புக்களிலும் சரி பேசு பொருளாக மாறியிருக்கின்றன.

நாங்கள் ஜெனிவா செல்கிறோம் என பத்திரிகைகளில் அறிக்கை வெளியிட்டு விட்டு இங்கு வரும் தமிழ் அரசியல்வாதிகள் எதை சாதித்தார்கள் என்றால் அது வெறும் பூச்சியமாகவே காணப்படுகிறது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை கூட்டத்தொடரில் மூன்று தரப்புக்கள் மட்டுமே கலந்து கொள்ள முடியும்,

ஓன்று ஐக்கிய நாடுகள் பொதுச்சபையில் அங்கம் வகிக்கும் நாடுகள், மனித உரிமை பேரவையில் அங்கத்துவம் வகிக்கும் நாடுகள்.

இரண்டு அரசசார்பற்ற நிறுவனங்கள்.

மூன்று ஊடகத்துறை பிரதிநிதிகள்.

இந்த மூன்று தரப்பையும் தவிர வேறு எவரும் இக்கூட்டத்தொடரில் கலந்து கொள்ள முடியாது. நாடுகளின் அரச பிரதிநிதிகள் மட்டுமே பிரேரணைகள் மீது விவாதத்தில் பேச முடியும். வாக்களிக்க முடியும்.

அரச பிரதிநிதிகளை தவிர இலங்கையிலிருந்து வரும் ஏனையவர்கள் அரச சார்பற்ற நிறுவனங்களின் ஊடாகவே கலந்து கொள்கின்றனர்.   இலங்கையிலிருந்து வரும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் மாகாணசபை உறுப்பினர்களும் ஏனையவர்களும் அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகளாகவே கலந்து கொள்ள முடியும். நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்றோ மாகாணசபை உறுப்பினர்கள் என்ற ரீதியில் ஐ.நா.மனித உரிமை பேரவை கூட்டத்தொடரில் கலந்து கொள்ள முடியாது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் பிரதான கூட்டம் நடைபெறும் சமகாலத்தில் இக்கட்டிட தொகுதியில் முறைசாரா கூட்டங்களும் நடைபெறுவது வழமை.

இக்கட்டிட தொகுதியில் சுமார் 40 சிறிய மண்டபங்கள் ஒலிஅமைப்பு மற்றும் சகல வசதிகளுடன் உள்ளன. கையில் பணம் இருந்தால் எத்தனை மண்டபங்களையும் எத்தனை தடவைகளும் பதிவு செய்து தமக்கு வேண்டியவர்களை அழைத்து கூட்டங்களை நடத்த முடியும்.

சில நாடுகள் முறைசாரா கூட்டங்களை நடத்துவது வழமை, அமெரிக்கா இலங்கை தொடர்பான பிரேரணை நகலை உறுப்பு நாடுகளுக்கு வழங்கி அந்நாட்டு பிரதிநிதிகளை அழைத்து கூட்டங்களை நடத்தியிருந்தன. நாடுகள் ஏற்பாடு செய்யும் கூட்டங்களுக்கு நாடுகளின் பிரதிநிதிகளும் இராஜதந்திரிகளும் மனித உரிமை அமைப்புக்களின் பிரதிநிதிகளும் பத்திரிகையாளர்களும் செல்வார்கள்.

ஆனால் தமிழர் அமைப்புகள் சில ஏற்பாடு செய்யும் கூட்டங்களுக்கு தமிழர்களும் அரச சார்பற்ற நிறுவனங்களின் ஒரு சில வெளிநாட்டவர்களும் மட்டும் கலந்து கொள்வார்கள். புலம்பெயர்நாடுகளில் உள்ள தமிழர் தரப்பு ஏற்பாடு செய்யும் கூட்டங்களுக்கு 20பேருக்கு உட்பட்டவர்களே கலந்து கொள்வார்கள், அவற்றில் பெரும்பாலானவர்கள் தமிழர்கள் தான்.

இந்த கூட்டங்களில் தான் மாகாணசபை உறுப்பினர்களான சிவாஜிலிங்கம், அனந்தி சசிதரன், போன்றவர்கள் உரையாற்றுவார்கள். இந்த கூட்டங்களில் தமிழிலும் உரையாற்றலாம். ஏனெனில் இக்கூட்டங்களை ஏற்பாடு செய்பவர்களும் தமிழர்கள் தான், அங்கு சமூகமளிப்பவர்களும் தமிழர்கள் தான். கடந்த முறை இவ்வாறான ஒரு கூட்டத்தில் உரையாற்றியதை தான் மாகாணசபை உறுப்பினர் அனந்தி தமிழில் உரையாற்றி சாதனை என தமிழ் இணையத்தளங்கள் செய்திகளை வெளியிட்டன.

கடந்த வியாழக்கிழமை ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவைக்கு சென்ற போது காலையில் இலங்கையிலிருந்து வருகை தந்திருந்த மாகாணசபை உறுப்பினர்கள் உட்பட சில தமிழ் அரசியல்வாதிகளை மனித உரிமை பேரவையின் கீழ் தளத்;தில் உள்ள தேனீர்ச்சாலையில் கண்டேன். பின்னர் நண்பகல் உணவிற்காக நான் அங்கு சென்ற போது தேனீர்ச்சாலையில் அதேகதிரைகளில் தான் இருந்து பேசிக்கொண்டிருந்தனர். பின்னர் 5.30மணியளவில் எனது நண்பர் ஒருவரை சந்திக்க அந்த தேனீர்ச்சாலைக்கு சென்ற போது அப்போதும் அங்குதான் இருந்து பேசிக்கொண்டிருந்தனர்.
ஜெனிவா செல்கிறோம், ஐ.நா.மனித உரிமை ஆணையாளரை சந்திக்கிறோம், கூட்டத்தொடரில் பேசுகிறோம், சர்வதேச நாடுகளின் இராஜதந்திரிகளை சந்திக்கிறோம் என கூறிவிட்டு வரும் தமிழ் அரசியல்வாதிகள் இங்கு இவ்வாறு தேனீர்ச்சாலைகளில் காலம் கழிப்பதைத்தான் காணமுடிகிறது.

இது அவர்களின் தவறு அல்ல, அவர்கள் ஜெனிவாவில் ஏதோ சாதிக்கப்போகிறார்கள் என்ற பிம்பத்தை வளர்ப்பதுதான் தவறு.

ஜெனிவாவுக்கு வரும் மாகாணசபை உறுப்பினர்கள் மற்றும் அரசியல்வாதிகள் சிலர் எந்த இராஜதந்திரிகளையும் சந்திப்பது கிடையாது. சந்திப்பதற்கான வாய்ப்பும் கிடையாது.   ஜெனிவாவில் உள்ள ஐ.நா.மனித உரிமை ஆணையாளரும் சரி, தூதுவர்கள் இராஜதந்திரிகளும் சரி, இலங்கை என்று வரும் போது இரு தரப்பைத்தான் சந்திக்கிறார்கள். ஒன்று அரச தரப்பு பிரதிநிதியாக வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர அல்லது ஜெனிவா தூதுவர் ரவிநாத் ஆரியசிங்க,

இரண்டாவது தரப்பாக தமிழர்களின் சார்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளாக நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனை மட்டுமே சந்தித்திருக்கின்றனர். இம்முறை ஜெனிவாவில் பிரித்தானிய தூதுவர், சுவிட்சர்லாந்து ஜனாதிபதி, வெளிநாட்டு தலைவர்கள் அரசதரப்பில் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவையும் தமிழர் தரப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனையும் மட்டுமே சந்தித்தனர்.

அதன் பின்னர் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் நோர்வேக்கு சென்று அரச பிரதிநிதிகளை சந்தித்ததுடன் நியூயோர்க் சென்று அமெரிக்க வெளிவிவகார அமைச்சு அதிகாரிகளை சந்தித்திருக்கிறார்.
இதைத்தவிர ஜெனிவா செல்வதாக கூறிவிட்டு வந்த தமிழ் அரசியல்வாதிகள் யாரும் இராஜதந்திரிகளை அல்லது நாடுகளின் தூதுவர்களை ஐ.நா.மனித உரிமை ஆணையாளரை சந்தித்ததாக எந்த தகவலும் இல்லை.

இது தவிர இன்னொன்றையும் ஐ.நா.மனித உரிமை பேரவை அரங்கில் அவதானிக்க முடிந்தது.

இலங்கையில் இருந்து வந்தவர்களும் சரி, புலம்பெயர்ந்த நாடுகளில் இருந்து வந்தவர்களும் சரி ஒருவர் முகத்தை ஒருவர் பார்க்காது நவக்கிரகங்களாகவே இருந்ததை அவதானிக்க முடிந்தது.
சுரேஷ் பிரேமச்சந்திரன், அனந்தி, சிவாஜிங்கம் ஆகியோர் ஒரு தரப்பாகவும், செல்வம் அடைக்கலநாதன் தலைமையிலான குழுவினர் ஒரு தரப்பாகவும், மாவை சேனாதிராசா, சிறிதரன் ஒரு தரப்பாகவுமே காணப்படுகின்றனர். குறிப்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களில் ஒருவரான சுரேஷ் பிரேமச்சந்திரன் ஏனைய தலைவர்களான மாவை சேனாதிராசா , செல்வம் அடைக்கலநாதன் ஆகியோரை நேருக்கு நேர் சந்தித்து பேசியதையும் காணமுடியவில்லை,

இன்னொரு வேடிக்கை என்ன வென்றால் தமிழ் தேசியக் கூட்டமைப்பை தோற்கடிக்க வேண்டும் என கங்கணம் கட்டி செயற்பட்ட புலம்பெயர் நாடுகளில் உள்ளவர்களுடனேயே சுரேஷ் அனந்தி போன்றவர்கள் சுற்றி திரிந்ததையும் அவதானிக்க முடிந்தது.

என்னதான் கருத்து முரண்பாடுகள் இருந்தாலும் சிங்கள தரப்பினர் அனைவரும் ஒரு அணியில் இருந்து செயற்படுவதை பார்த்தாவது தமிழர் தரப்பு தங்கள் இராஜதந்திர நகர்வுகளை மேற்கொள்ள வேண்டும்.
ஜெனிவா செல்கிறோம், சாதித்து வருகிறோம் என மக்களுக்கு பிரசாரம் செய்பவர்கள் தாங்கள் ஜெனிவாவில் எதைத்சாதித்தோம் என்பதையும் சொல்ல வேண்டும்.

( ஜெனிவாவிலிருந்து இரா.துரைரத்தினம்)suresh in genevaun-03

SHARE