ஜோடி மாறினாலும் அசத்தும் இந்திய வீரர்கள்: கடைசி 5 போட்டிகளில் வரிசையாக சதம் விளாசி சாதனை

349
இந்திய அணியின் தொடக்க ஜோடி மாறினாலும் கடைசி 5 போட்டிகளில் தொடர்ச்சிய தொடக்க வீரர்களில் ஒருவர் சதம் அடித்து சாதித்துள்ளனர்.பொதுவாக தொடக்க வீரர்கள் மாற்றப்படுவதில்லை. ஆனால் காயம் காரணமாக கடந்த சிலப் போட்டிகளில் தொடக்க ஜோடி பாதிப்படைந்தது.இருப்பினும் தொடக்க வீரர்களாக களமிறங்கிய வீரர்கள் சிறப்பாக செயல்படுகின்றனர்.

இந்திய டெஸ்ட் அணியில் தவான் மற்றும் முரளிவிஜய் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கி வருகிறார்கள்.

கடந்த ஆண்டு இறுதியில் இந்தியா அவுஸ்திரேலியா சுற்றுப் பயணம் செய்திருந்தது.

அந்த தொடரில் முதல் மூன்று போட்டிகளில் தவான் மோசமாக விளையாடியதால் அவர் நீக்கப்பட்டு 4வது போட்டியில் லோகேஷ் ராகுல் தொடக்க வீரராக களம் இறங்கினார்.

இந்நிலையில் சிட்னியில் நடைபெற்ற அந்த டெஸ்டின் முதல் இன்னிங்சில் முரளி விஜய் டக்- அவுட் ஆனார். ஆனால் மற்றொரு தொடக்க வீரர் லோகேஷ் ராகுல் அபாரமாக விளையாடி சதம் அடித்தார்.

இதனையடுத்து வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரர்களான தவான் (173), முரளிவிஜய் (150) சதம் அடித்து அசத்தினர்.

இதைத் தொடர்ந்து தற்போது நடைபெற்று வரும் இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில், காலேவில் நடைபெற்ற முதல் போட்டியில் முரளி விஜய் காயம் காரணமாக களம் இறங்கவில்லை.

இதனால், தவான் உடன் ராகுல் தொடக்க வீரராக களம் இறங்கினார். இதில் தவான் சதம் அடித்தார். ஆனால் காயம் காரணமாக தவான் தொடரில் இருந்து திடீரென்று விலகினார்.

இதனால் அவருக்கு பதிலாக விஜய் களம் 2வது போட்டியில் இறங்கினார். இந்த போட்டியில் ராகுல் சிறப்பாக விளையாடி சதம் அடித்ததுடன் ஆட்ட நாயகன் விருது பெற்றார்.

இந்நிலையில் முரளிவிஜய் காயம் காரணமாக தொடரில் இருந்து விலகினார். இதனால் 3வது போட்டியில் புஜாரா தொடக்க வீரராக களமிறங்கினார். இதில் சிறப்பாக விளையாடிய புஜாரா சதம் அடித்துள்ளார்.

இப்படி கடைசி 5 போட்டிகளில் தொடக்க வீரர்கள் மாறி மாறி இறங்கியுள்ளனர். இருப்பினும் தொடக்க வீரர்களின் ஒருவர் சதம் அடித்து அசத்தியிருக்கின்றனர்.

SHARE