டி20 கிரிக்கெட்: 2-வது போட்டியில் தென்ஆப்பிரிக்காவை வீழ்த்தி நியூசிலாந்து தொடரை சமன் செய்தது

320
தென்ஆப்பிரிக்கா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டி20 தொடரின் 2-வது போட்டி இன்று செஞ்சூரியனில் நடைபெற்றது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்த தீர்மானித்தது.

அதன்படி அந்த அணியின் தொடக்க வீரர்களாக குப்தில், வில்லியம்சன் களம் இறங்கினார்கள். இருவரும் சிறப்பாக விளையாடினார்கள். குப்தில் 35 பந்தில் 6 பவுண்டரி, 3 சிக்சருடன் 60 ரன்கள் குவித்தார். வில்லியம்சன் 17 பந்தில் 4 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 25 ரன்கள் எடுத்தார்.

அதன்பின் வந்த எலியாட் 20, நீஷம் 28, முன்றோ 7 பந்தில் 18 ரன்களும் எடுக்க நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 177 ரன்கள் குவித்தது.

178 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென்ஆப்பிரிகாவின் அம்லா, வான் வைக் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். இருவரும் சொதப்பினார்கள். அம்லா 13 பந்தில் 14 ரன்களும், வைக் 5 பந்தில 3 ரன்கள் எடுத்தும் அவுட் ஆனார்கள்.

அதன்பின் வந்த டி வில்லியர்ஸ் 9 பந்தில் 15 ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்பினார். டி வில்லியர்ஸ் அவுட் ஆனதும் தென்ஆப்பிரிக்காவின் தோல்வி உறுதியானது. மற்ற வீரர்கள் விளையாடினாலும் அவர்களால் அதிரடியாக ரன் சேர்க்க முடியவில்லை.  ரசோவ் 23 பந்தில் 26 ரன்களும், பெஹார்டியன் 27 பந்தில் 36 ரன்களும், மில்லர் 20 பந்தில் 29 ரன்களும் எடுத்து அவுட் ஆனார்கள். இதனால் தென்ஆப்பிரிக்கா அணியால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 145 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.

இதனால் நியூசிலாந்து  32 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் இரண்டு போட்டிகள் கொண்ட டி20 தொடரை நியூசிலாந்து சமன் செய்துள்ளது. முதல் போட்டியில் தென்ஆப்பிரிக்கா வெற்றி பெற்றிருந்தது

SHARE