டெல்லி அணியில் பட்டையை கிளப்பும் யுவராஜ் சிங் – கேரி கிர்ஸ்டன் நம்பிக்கை

734
நடைபெறவுள்ள ஐபிஎல் தொடரில் டெல்லி அணி சாதிப்பதற்கு யுவராஜ்சிங், ஜாகீர்கான் கைகொடுப்பார்கள் என்று அவ்வணியின் பயிற்சியாளர் கிர்ஸ்டன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.ஐபிஎல் கிரிக்கெட் சுற்றுத்தொடர் எதிர்வரும் 8ம் திகதி ஆரம்பமாகவுள்ளது. இதில் 8 அணிகள் பங்கேற்கவுள்ளன.

இதில் டெல்லி டேர்டெவில்ஸ் அணி தனது தொடக்க லீக்கில் சென்னை சூப்பர் கிங்ஸை 9ம் திகதி சென்னை சேப்பாக்கத்தில் சந்திக்கிறது.

ஐபிஎல் போட்டிகளில் மோசமான சாதனைகளை பெற்றுள்ள ஒரு அணி டெல்லி டேர்டெவில்ஸ்.

இதுவரை ஒருமுறை கூட இறுதிப்போட்டிக்கு முன்னேறாத டெல்லி அணி கடந்த ஆண்டு 14 ஆட்டங்களில் 12ல் தோற்று கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டது.

இதையடுத்து இந்த முறை டெல்லி அணிகளில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. புதிய தலைவராக டுமினி நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த சுற்றுத்தொடருக்காக 16 கோடி ரூபாவுக்கு யுவராஜ்சிங்கும், 4 கோடி ரூபாவுக்கு மூத்த வேகப்பந்து வீச்சாளர் ஜாகீர்கானும் வாங்கப்பட்டுள்ளனர்.

இதனால் இந்த சீசனில் டெல்லி அணி தாக்கத்தை ஏற்படுத்தும் என்று பயிற்சியாளர் கேரி கிர்ஸ்டன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இது குறித்து கேரி கிர்ஸ்டன் கூறுகையில், ஐபிஎல் போட்டியில் சிறப்பாக செயல்படுவதை ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளோம்.

இந்த முறை எங்கள் அணிக்கு சர்வதேச அரங்கில் அனுபவம் வாய்ந்த வீரர்களும், சாதிக்க துடிக்கும் இளம் வீரர்களும் வந்திருக்கிறார்கள்.

மகிழ்ச்சி அளிக்கும் வகையில் அணியும் சரியான கலவையில் அமைந்துள்ளது.

இந்திய அணிக்கு பயிற்சியாளராக இருந்த போது யுவராஜ்சிங்குடன் இணைந்து செயல்பட்டுள்ளேன். அது சிறந்த அனுபவமாகும். எப்போதையும் போல் யுவராஜ்சிங் முழு உடல்தகுதியுடன் இருக்கிறார்.

என்னை பொறுத்தவரை அவர் டெல்லி அணிக்கு கட்டாயம் வேண்டும் என்று விரும்பினேன். அவரை விட அதிக உத்வேகம் கொண்ட வீரர் வேறு யாரும் இருக்க முடியாது என்று நினைக்கிறேன். அவரது வருகை அணிக்கு கூடுதல் பலமாகும் என்று கூறியுள்ளார்.

SHARE