தங்கம் வெல்வாரா ஜிது ராய்?

287

ரியோ ஒலிம்பிக்கில் சனிக்கிழமை நடைபெறும் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் ஆடவர் 10 மீ. ஏர் பிஸ்டல் பிரிவில் இந்தியாவின் ஜிது ராய், குருபிரீத் சிங் ஆகியோர் களம் காண்கின்றனர்.

இதில் 29 வயது ராணுவ வீரரான ஜிது ராய், தங்கப் பதக்கம் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்ப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி அவர் வெல்லும்பட்சத்தில் தனிநபர் பிரிவு மற்றும் துப்பாக்கிச் சுடுதலில் தங்கம் வென்ற 2-ஆவது இந்தியர் என்ற பெருமையைப் பெறுவார்.

உலக சாம்பியன்ஷிப், ஆசிய விளையாட்டுப் போட்டி, காமன்வெல்த் போட்டி, உலகக் கோப்பை ஆகியவற்றில் இதுவரை மொத்தம் 7 பதக்கங்களை வென்றுள்ளார் ஜிது ராய். ஸ்பெயினில் நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டியில் 199.5 புள்ளிகளைப் பெற்று வெள்ளி வென்றதன் மூலம் ரியோ ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்றார் ஜிது ராய்.

சர்வதேச தரவரிசையில் 50 மீ. பிஸ்டல் பிரிவில் 2-ஆவது இடத்திலும், 10 மீ. ஏர் பிஸ்டல் பிரிவில் 3-ஆவது இடத்திலும் உள்ளார். கடந்த இரண்டு ஆண்டுகளாக சர்வதேச துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் தூள் பறத்தி வரும் ஜிது ராய், ரியோ ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு முதல் பதக்கத்தைப் பெற்று தருவார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

SHARE