தமிழருக்கு எதிராக 242 தடவைகள் இனப்படுகொலை! – ஆதாரம் உள்ளது எம்.பி. சிவமோகன்

271

 

இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிராக 242 தடவைகள் இனப்படுகொலை இடம்பெற்றுள்ளன எனவும், அதற்கான ஆதாரங்கள் உள்ளன எனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் தெரிவித்துள்ளார்.dcp646434

வவுனியாவில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தாயகம் இல்லத்தில் நேற்று நடைபெற்ற தந்தை செல்வா நினைவு தின நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

“1947ஆம் ஆண்டு இந்தியாவுக்கு சுதந்திரம் வழங்கியபோது ஜின்னாவால் தனிநாடு கேட்கப்பட்டு பாகிஸ்தான் உதயமாகியது. அதுபோல் இலங்கை சுதந்திரமடைந்த போது தமிழ் மக்களுக்கான தனியாட்சியை பிரிட்டன் வழங்கியிருக்க வேண்டும்.

அந்த வரலாற்றுத் தவறைத் தொடர்ந்து எமக்கான சுதந்திரம் கோரி போராடத் தொடங்கினோம். தேசியக் கொடியில் சிங்களவர்களின் அடையாளத்தை சேர்த்துக் கொண்டார்கள். எமது அடையாளத்தை சேர்ப்பதற்காக தமிழ்த் தலைவர்கள் போராடினார்கள். இறுதியில் சிங்கக் கொடியே பறந்ததது.

தமிழர்கள் நந்திக் கொடியுடன் நாடாளுமன்றம் சென்ற வரலாறு கூட உள்ளது. ஆகையால் சுதந்திரம் முதல் நாம் போராட வேண்டி ஏற்பட்டது. சுதந்திரம் பெற்று 6 மாத்திற்குள்ளேயே 10 இலட்சம் இந்தியத் தமிழர்களின் வாக்குரிமையைப் பறித்து வாழ்வுரிமையைப் பறித்தார்கள். அதன்பின் இராஜதந்திரம் என்ற நரித்தந்திரம் ஊடாக தமிழர்களை உடைத்தார்கள். நாங்கள் அன்றிலிருந்து அஹிம்சைப் போராட்டத்தை நடத்தினோம். அதன் மூலம் தீர்வு எட்டாத நிலையே ஆயுதப் போராட்டத்திற்குச் சென்றது.

எமக்கு எதிரான இனப்படுகொலை என்பது இன்று நாம் ஏற்றுக்கொள்கின்ற வசனமாகவுள்ளது. என்னிடம் ஒரு பதிவுள்ளது. இலங்கையில் 242 தடவைகள் தமிழ் மக்கள் இனப்படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள். இங்கினியாகல கரும்புத் தொழிற்சாலை படுகொலைதான் முதலாவது இனப்படுகொலை.

1983இல் பாரிய இனப்படுகொலை நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டார்கள். ஒரு ஜூலையில் குட்டிமணி, தங்கத்துரை உட்பட 37 தமிழர்கள் கொல்லப்பட்டனர். காவலாக இருக்க வேண்டிய இராணுவமே இனப்படுகொலையை அரங்கேற்றியது.

1986இல் ஒதியமலையில் 36 தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டார்கள். அதன்பின் 1985இல் வல்லைவெளியில் ஒரு தடவை 70 பேரும், ஒரு தடவை 50 பேரும் கொலை செய்யப்பட்டுள்ளார்கள்.

இந்த வரலாறுகளின் பின்னர் தான் எங்களது ஆயுதப் போராட்டம் வலுப்பெற்றது. இந்த ஆயுதப் போராட்டம் மௌனித்த நிலையில் கூட தமிழ் மக்களுக்கான சுய கௌரவமான தீர்வு கிடைக்கவில்லை.

இன்று இந்த நாடாளுமன்றம் ஒரு அரசமைப்பு சபையாக மாற்றப்பட்டிருக்கின்றது. அரசியல் யாப்பு சபையாக மாற்றப்பட்ட பின்னர் அது கேள்விக்குறியாக்கப்பட்டு படுதோல்வி அடையுமாக இருந்தால் இந்த இலங்கையின் வரலாறு மீண்டும் ஒரு மாற்றத்தை அடைந்தே தீரும் என நான் கருதுகின்றேன்.

தொடர்ச்சியாக ஒரு இனத்தை இன்னொரு இனம் அடக்கிக்கொண்டு இருக்க முடியாது. நிச்சயமாக அந்த இனம் விடுதலை பெறும் வரை போராடிக் கொண்டே இருக்கும். உலகத்தில் இதுதான் வரலாறு. அடக்கப்பட்ட இனம் தமக்கான போராட்டத்தை தொடங்கிய பின் அடங்கிப் போனதாக வரலாறு எங்குமே இல்லை.

தனது இலக்கை அடையும் வரை அந்த இனம் போராடிக் கொண்டே இருக்கும். அது ஏதோவொரு வடிவில் மீண்டும் மீண்டும் உருவாகிக் கொண்டே இருக்கும்.

இன்று நாம் முக்கியமான கட்டத்தில் இருக்கின்றோம். வன்னியில் நிலங்கள் பறிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. முல்லைதீவில் இராணுவத்தின் காணி சுவீகரிப்புக்கு எதிராக ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம் எனப் போராடவுள்ளோம்.

இந்த அரசியல் யாப்பு நடைமுறைப்படுத்த முன்னதாகவே தமக்கான காணியை சுவீகரிக்க முனைகிறார்கள். இந்த இராணுவத்திற்கு எதிராக போராட்டத்தை ஜனநாயக ரீதியில் நடத்த வேண்டியுள்ளது.

எமக்கு எதிராக அடக்குமுறை இருக்கும் வரை அதற்கு எதிரான எமது போராட்டங்களும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கப் போகின்றது”

SHARE