தமிழர் தலைவர் அமிர்தலிங்கத்தின் துணைவியார் மங்கயற்கரசியின் இழப்பு ஈடுசெய்ய முடியாதது- மாவை சேனாதிராசா

337

 

mangayarkarasiதமிழர் போராட்ட வரலாற்றில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக தம்மை முழுமையாக அர்ப்பணித்து தமிழ்ப் பேசும் மக்களினதும், தமிழர் தேசத்தினதும் விடுதலைக்காக உழைத்தவர், போராடியவர் திருமதி மங்கையர்க்கரசி அமிர்தலிங்கம். அன்னார் லண்டனில் காலமாகிவிட்டார் என்ற செய்தி எமக்கு மிகுந்த அதிர்ச்சியையும் துயரத்தையும் தந்துள்ளது.

தமிழர் தலைவரான எம் தலைவர் அமிர்தலிங்கம் அவர்களின் துணைவியாக விளங்கியதிலிருந்து தமிழர் விடுதலைப் போராட்டத்தில் தலைவருடன் இணைந்து போராடியவர், தலைவருடன் சிறை சென்றவர் மங்கையர்க்கரசி எனும் மாதர் தலைவி.

தந்தை செல்வநாயகம் இலங்கைத் தமிழரசுக் கட்சியை ஆரம்பித்திலிருந்து தளபதியாய் நின்று தமிழரசுக் கட்சியை கட்டியெழுப்பியவர் தலைவர் அமிர்தலிங்கம்.

அந்நாளில் கோப்பாய் கோமான் வன்னியசிங்கம், டாக்டர் ஈ.எம்.வி.நாகநாதன், மட்டக்களப்பு இராசதுரை, இராசமாணிக்கம், திருமலை இராஜவரோதயம், வன்னி சுப்பிரமணியம், அம்பாறை ஆர்.டபிள்யூ.அரியநாயகம் முதலானோர் தமிழரசுக் கொள்கையை, இலட்சியத்தை பற்றி நின்றுழைத்தவர்கள்.

அந்தத் தலைவர்கள் வரிசையில் கோமதி வன்னியசிங்கம், இராஜபூபதி அருணாசலம், மங்கையர்க்கரசி அமிர்தலிங்கம் திருமதி வேலுப்பிள்ளை முதலான மாதரசிகள் தமிழினத்திற்கும் ஜனநாயக, அஹிம்சைப் போராட்டங்களுக்கும் தலைமை தாங்கியவர்கள். இவை வரலாற்றில் பதியப்பட்டனவாகும்.

தலைவர், தளபதி அமிர்தலிங்கம் தமிழரசுக் கட்சிக்காக தமிழர் நிலமெங்கும் சென்ற பொழுது மங்கையர்க்கரசியும் துணை நின்றார்.

தமிழ் மக்களிடத்தில் மங்கையர்க்கரசியின் வளமான, இனிய குரலில் கேட்போரை ஈர்க்கும் தமிழரசு தேசியகீதம், பாரதியார் விடுதலைப் பாடல்கள், போராட்டக் காலங்களிலும் விடுதலைப் போர்ப் பரணி;களைப் பாடி மக்களை ஈர்த்தவர்.

மக்களைக் குறிப்பாக இளைஞர் சமுதாயத்தை அணிதிரட்டியவர். அப்பொழுது பள்ளி மாணவர்களாயிருந்த நாமெல்லாம் அமிர் அண்ணர் உணர்வுமிக்க, கருத்தாளமிக்க அரசியல், இலக்கிய பேச்சுக்களையும், மங்கையர்க்கரசியின் எழுச்சி மிகு பாடல்களையும் கேட்கக் கூட்டங்களில் கூடியிருந்த காலங்களை எண்ணிப்பார்க்கிறோம்.

குறிப்பாக 1961ஆம் ஆண்டுகாலத் தொடர் சத்தியாக்கிரகங்களில் மாணவர்களாய் நாம் மட்டுமல்லாது பெருமளவில் தமிழ் முஸ்லிம் மாநிலங்களில் முஸ்லிம் மக்களும், முஸ்லிம் மாதர்களும் கலந்து கொண்டிருந்தனர்.

தலைவர் அமிர்தலிங்கம் அவர்கள் வழக்கறிஞராய் செல்வாக்குமிக்க தலைவராய் விளங்கியபொழுதும் பெரும் வசதி படைத்தவராய் இருக்கவில்லை.

ஆனால் மங்கையர்க்கரசியின் தந்தையார் பெரும் வர்த்தகராயிருந்தார். அவர் கொடுத்த சொத்துக்கள் எல்லாம் அமிர்தலிங்கம் அவர்கள் அரசியல் ஈடுபாட்டில் கரைந்து போயின.

இருப்பினும் மங்கையர்;க்கரசி மனதார அனைத்துத் துன்பங்களையும் ஏற்றுக் கொண்டிருந்தார். இறுதிவரை அவர்கள் வாழ்வு அவ்வாறேயிருந்தது. வடக்கு கிழக்கு தமிழ், முஸ்லிம் மக்கள் மத்தியில் மட்டுமல்ல தமிழர் எங்கிருந்தனரோ அங்கெல்லாம் மதிப்புப் பெற்றிருந்தார்.

ஆனால் பாராளுமன்றத்திலும் வெளியிலும் இனவாத அரசியல் சக்திகளும் அமைச்சர்களும் அவரை மிக மோசமாக அவமானப்படும் வகையில் திட்டித் தீர்த்து வந்தனர்.

தலைவர் அமிர்தலிங்கம் அவர்கள் 1989 யூலை 13ம் திகதி சுட்டுக் கொல்லப்பட்டபோது துணைவியார் மங்கையர்க்கரசி அவ்வீட்டிலேயே இருந்தார்.

அவர் பட்ட துன்பத்தையும், துயரத்தையும், கண்ணீரையும் நேரில் கண்டு இன்றும் கண்ணீர் விட்டுக் கொண்டிருக்கிறோம். அவர் தனிமையிலிருந்து தாங்கமுடியாத துயரத்தை லண்டனிலிருக்கும் தன் பிள்ளைகள் காண்டீபன், டாக்டர் பகீரதன் குடும்பத்தினருடனிருந்து அனுபவித்தார்.

ஆறுதல் பெற்றார். தம்பி பகீரதன் அரசியலில் ஈடுபடவாய்ப்புக் கொண்டிருக்கவில்லையாயினும் பொதுத் தொண்டில், போரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதில் தாயாருடனும் பெரும் பங்களிப்புச் செய்து வந்திருக்கிறார்.

திருமதி மங்கையர்க்கரசி எந்தத் தமிழ் மண்ணினதும் மக்களினதும் விடுதலைக்காக அர்ப்பணித்தாரோ, போராடினாரோ அந்த மண்ணை விட்டு ஆறுஆயிரம் மைல்களுக்கப்பால் லண்டனில் இருந்தபொழுதும், அவர் தன் மண்ணையும் மக்களையும் ஒரு பொழுதும் மறந்துவிடவில்லை.

அதற்கும் மேலாக தமிழகத் தலைவர்கள் பெரியார், எம்.ஜீ.ஆர், கலைஞர், வீரமணி, வைகோ, ராமதாஸ் முதலானோரிடத்திலும் அதற்கும் மேலாக இந்தியத் தலைவர்கள் பிரதமராயிருந்த இந்திராகாந்தி, பார்த்தசாரதி, ராஜீவ் காந்தி, ஜனாதிபதி வெங்கட்ராமன் முதலானோரிடத்திலும் மிகுந்த மதிப்பை பெற்றிருந்தார்.

இறுதிக்காலத்திலும் தான் பிறந்து வாழ்ந்த யாழ்ப்பாணம் மூளாயில், வீட்டில் வந்து வாழ வேண்டுமென்ற இதயத் துடிப்பும், பற்றும் கொண்டிருந்த பொழுதிலும் அவ் ஆதங்கம் நிறைவேறமுடியாமற் போய்விட்டது.

தலைவர் அமிர்தலிங்கம் தமிழர் வரலாற்றில் எத்தகைய மதிப்பையும் மாண்பையும் பெற்றிருந்தாரோ, திருமதி மங்கையர்க்கரசியும் அம்மாண்பின் பங்காளியாகவே இருந்து வந்துள்ளார்.

தமிழரசுக் கட்சியின் வளர்ச்சியிலும், தமிழர் வரலாற்றிலும் நிறைவான பங்களிப்பையும் அர்ப்பணிப்பையும் நிறைவு செய்த பெருமையும் அவருக்குண்டு.

அன்னார் விடுதலைக்கு அளித்த பங்களிப்பும், அவர் வாழ்வில் பட்ட துயரங்களையும் தாங்கி நின்ற காலங்களும் தமிழர் வரலாற்றிலும், மனங்களிலும் என்றும் பதிந்திருக்கும், நீங்காத நினைவுகளாய் நிலைத்திருக்கும் எனும் செய்தியோடு எமது இதயம் நிறைந்த அஞ்சலியையும் செலுத்தி நிற்கின்றோம்.

இவ்வாறு பாராளுமன்ற உறுப்பினர் மாவை. சோ. சேனாதிராசா வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

SHARE