தமிழ் அரசியல் கைதிகளை மனிதாபிமான அடிப்படையில் விடுதலை செய்யுங்கள் – விக்னேஸ்வரன்

416

இலங்கையின் சிறைகளில் தமிழ் அரசியல் கைதிகள் மிக நீண்டகாலமாக விசாரணைகள் எவையுமில்லாமல், தடுத்து வைக்கப்பட்டிருக்கும் நிலையில் மனிதாபிமான அடிப்படையில் அவர்களுடைய விடுதலை தொடர்பில் நாம் மேற்கொண்ட நடவடிக்கைகளும் பயனற்றவையாக்கப்பட்டுள்ளதாக வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இவர்களுடைய விடுதலை தொடர்பில் ஜனாதிபதி மற்றும் சட்டமா அதிபர் ஆகியோருடன் பல தடவைகள் நான் பேசியிருக்கிறேன். அப்போது அது தொடர்பில் சிந்திப்போம், நடவடிக்கை எடுப்போம் என கூறியவர்கள் பின்னர் நடவடிக்கை எடுத்தார்களா? என்பது எமக்கு தெரியவில்லை.

நாங்கள் எடுத்த அனைத்து முயற்சிகளும் பயனற்றுப்போயுள்ளது எனவும் கூறியுள்ளார். வடமாகாணத்தில் போர் நடைபெற்றுக் கொண்டிருந்த காலப்பகுதியில் சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்டு சிறைகளில் விசாரணைகள் எவையுமில்லாமல் நீண்டகாலம் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகள் தமது விடுதலை தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறு வடமாகாண முதலமைச்சர் மற்றும் அவைத்தலைவர் ஆகியோருக்கு கடிதம் அனுப்பியுள்ளனர்.

இந்நிலையில் மேற்படி கடிதத்தை அடிப்படையாகக் கொண்டு நேற்றய தினம் நடைபெற்ற மாகாணசபையின் 19வது அமர்வில் அவை தலைவர் சீ.வி.கே.சிவஞானம் முன்மொழிந்த தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை செய்யக்கோரும் பிரேரணை தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது. அது தொடர்பில் கருத்துக் கூறுகையிலேயே முதலமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

விடயம் தொடர்பில் மேலும் அவர் குறிப்பிடுகையில்,

இவ்வாண்டு ஜனவரி மாதம் 13ம், 14ம் திகதிகளில் வெலிக்கடை சிறைச்சாலைக்குச் சென்று அங்கிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளுடன் நான் பேசியிருக்கின்றேன். அவர்களுடைய நிலமைகள் தொடர்பாக நான் கேட்டறிந்திருக்கின்றேன்.

அதற்கு முன்னதாக ஜனவரி மாதம் 2ம் திகதி, ஜனாதிபதியை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியபோது நான் கூறியிருக்கிறேன். சிறைகளில் நீண்டகாலம் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளை மனிதாபிமான அடிப்படையில் விடுதலை செய்யுங்கள் என, அப்போது அவர்கள் எமக்கு கூறினார்கள்.

அந்த விடயத்தை நாங்கள் கருத்தில் எடுக்கிறோம். நடவடிக்கை எடுப்பது தொடர்பிலும் சிந்திக்கிறோம். என ஆனால் இன்றுவரை அதற்கான நடவடிக்கை அவர்கள் எடுத்ததாக நான் அறிந்திருக்கவில்லை.

இதற்கும் மேலாக நான் கொழும்பில் சட்டமா அதிபரை சந்தித்துப் பேசியபோதும். தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் பேசியிருக்கிறேன். அப்போது அவர் எனக்கு கூறிய விடயம், விடுவிக்க முடிந்தவர்களை விரைவில் விடுதலை செய்வதற்கு ஆவண செய்யப்படும் என கூறியிருந்தார்.

ஆனால் அவ்வாறு விடுவிக்கப்பட்டதாக எனக்கு தெரியவில்லை. அதன் பின்னர் சட்டமா அதிபர் ஓய்வு பெறுவதற்கு முன்னர் யாழ்ப்பாணம் வந்து என்னை சந்தித்த போதும் நான் இந்த விடயத்தை கேட்டிருந்தேன்.

அப்போது அவர் எனக்கு வருத்தத்துடன் கூறிய விடயம் அரசியல் கைதிகளின் விடுதலை விடயத்தில் அரசியல் தலையீடுகள் இருப்பதாக. எனவே நாங்கள் தொடர்ச்சியாக தமிழ் அரசியல் கைதிகளின் விடயத்தில் முயற்சித்துக் கொண்டேயிருக்கின்றோம். ஆனால் நாங்கள் எடுத்துக்கொண்ட அத்தனை முயற்சிகளும் பயனற்றவையாக்கப்பட்டுள்ளது என்றார்.

இதயைடுத்து மாகாணசபை உறுப்பினர் கே.சயந்தன் மேற்படி விடயம் தொடர்பாக கருத்துக் கூறியதுடன் வடக்கில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளின் முழுமையான விபரக்கொத்து வடமாகாண சபையினால் தயாரிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார். அவர்களுக்காக சட்ட உதவிகள் மற்றும் குடும்பங்களுக்கான உதவிகள் தொடர்பில், வடமாகாண சபையினால் தயாரிக்கப்பட்டுள்ள வினாக்கொத்து படிவத்தைப் பெற்று வடமாகாண சபை உறுப்பினர்கள் ஊடாக அரசியல் கைதிகளின் குடும்பங்களிடம் பெற்று அவர்களுக்கு சட்ட உதவிகளையும், அவர்களுடைய குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவிகளையும் வழங்க மாகாண சபை நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் சயந்தன் கூறினார்.

இதேவேளை இவ்வாறான உதவியினை வடமாகாணத்துடன் நிறுத்தி விடாமல் கிழக்கு மாகாணத்திலும் மேற்கொள்ள வேண்டும். அங்கும் பாதிக்கப்பட்ட அநேகர் உள்ளதாக மாகாணசபை உறுப்பினர் திருமதி அனந்தி சசிதரன் சுட்டிக்காட்டினார்.

இதனையடுத்து தமிழ் அரசியல் கைதிகளின் விடயத்துடன், விடுவிக்கப்பட்ட முன்னாள் போராளிகளுடைய உயிருக்கு பாதுகாப்பினை தேடிக் கொடுக்கும் நடவடிக்கையினையும் மாகாணசபை மேற்கொள்ளவேண்டும் என மாகாணசபை உறுப்பினர் சிராய்வா கோரிக்கை விடுத்தார்.

 

SHARE