“தலைவர் பிரபாகரனின் ஒரு முடிக்கு கூட சிறீலங்கா ஜனாதிபதி பெறுமதியற்றவர் ” சரத்பொன்சேகாவின் ஒப்புதல் வாக்குமூலம் சொல்லும் செய்தி என்ன?

444

 

“விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு ஒரு கொள்கை இருந்தது. அவர் எமது குடும்பங்களை பழி தீர்க்கவில்லை. அவர் எமது குடும்பங்களின் பிள்ளைகளை பழி வாங்கவில்லை. மகிந்த ராஜபக்ச பிரபாகரனின் உடம்பில் இருக்கும் ஒரு முடிக்கே பெறுமதியற்றவர்.” என்று முன்னாள் ராணுவத் தளபதி சரத் பொன்சேகா கூறியிருக்கிறார்.

இவர் போன்ற இனக்கொலையாளிகள் கூறித்தான் புலிகளது போராட்டமும் தலைவரது மேன்மையும் அறியப்பட வேண்டும் என்றில்லை. காகம் கறுப்பு, பால் வெள்ளை என்று சொல்வதற்கு நமக்கு வெளியாட்கள் தேவையில்லை.

ஆனாலும் மிக முக்கியமான காலகட்டத்தில் இவர் இதை கூறியிருப்பதை நாம் இங்கு கவனிக்க வேண்டும். ஒரு மேம்போக்கான பேச்சாகவோ, திட்டமிட்டோ அவர் பேசவில்லை என்பதும் உணர்வுபூர்வமாக ஆத்மார்த்தமாக அவர் அதை கூறியிருப்பதைத்தான் நாம் இங்கு கவனிக்க வேண்டும்.

இது பல வதந்திகளுக்கும் சர்ச்சைகளுக்கும் உள்ளுரில் மட்டுமல்ல அனைத்துலக மட்டத்திலும்; முடிவுரை எழுதப்போகும் ஒரு வரலாற்று பதிவாகவே நாம் பார்க்க வேண்டும்.

இறுதிப்போரை வழி நடத்தியவர் என்பது மட்டுமல்ல நடந்த இனஅழிப்பின் முதன்மை குற்றவாளி என்று கருதப்படும் ஒருவரின் வாக்குமூலமாகவே நாம் இதை ஆவணப்படுத்த வேண்டும்.

அவரது பேச்சிலிருந்து எமக்கு கிடைக்கும் முடிவுகள் பின்வருமாறு..

பல இருந்தாலும் நாம் முக்கியமான அம்சங்களை மட்டும் பார்ப்போம்.

01. தலைவர் பிரபாகரனது போராட்டம் ஒரு நியாயத்தின்பாற்பட்டது என்கிறார்.

02. பலர் குறிப்பாக மேற்குலகம் மற்றும் இந்தியா குறி;ப்பிடுவதுபோல் அது ஒரு பயங்கரவாத போராட்டம் இல்லை என்ற கருத்துபட பேசியிருப்பது கவனிக்த்தக்கது. இராணுவ இலக்குகளை தவிர்த்து தனிப்பட்ட பழிவாங்கலையோ சிங்கள மக்களையோ தலைவர் பிரபாகரன் குறிவைக்கவில்லை என்கிறார். மிக முக்கியமான ஒரு வரலாற்றுப் பதிவு இது.

Theepan_Wijesuriya
புலிகளை பயங்கரவாதிகள் என்று சேர்ந்து அழிக்க துணைபோன மேற்குலகம் இந்த இராணுவத்தளபதியின் கருத்துக்கு என்ன பதில் வைத்திருக்கிறது?

நோக்கங்களால், செயற்பாடுகளால் “தலைவர் பிரபாகரனின் ஒரு முடிக்கு கூட சிறீலங்கா ஜனாதிபதி பெறுமதியற்றவா”; என்ற கருத்து நடந்த போர்முறையின் தன்மையை அழித்தொழிப்பை மறு பார்வைக்கு – மறுவிசாரணைக்கு உட்படுத்தும் தன்மையை கொண்டது.

இதற்கு அனைத்துலகத்தின் பதில் என்ன?

இனியும் புலிகள் பயங்கரவாதிகள், அவர்கள் போராட்டம் தவறானது என்று எமக்கு வகுப்பு எடுக்கப்போகிறார்களா?

எதிரியே உண்மையைப் பேசும் தருணம் இது.

நடக்கப்போகும் போர்க்குற்ற – இனப்படுகொலை விசாரணைகளில் தமிழர் தரப்பு இதை ஆவணப்படுத்தி ஒரு முக்கிய ஆவணமாகச் சமர்ப்பிக்க வேண்டும். சரத்பொன்சேகாவின் இந்த கூற்றிற்கு அனைத்துலகம் விளக்கத்தை கோர வேண்டும். ஏனென்றால் அவர் பல்டி அடிக்க கூடும். ஆனால் குறுக்கு விசாரணை செய்யும்போது உண்மையை ஏற்றுக்கொள்ள நேரிடலாம்.

இவற்றை விட தமிழர் தரப்புக்குள் பரப்பிவிடப்பட்ட ஒரு வதந்திக்கு சரத்பொன்சேகா முடிவுரை எழுதியதுதான் இங்கு சுவாரஸ்யமான விடயம்.

தலைவர் பிரபாகரன் சரணடைந்து சரத்பொன்சேகாவின், மகிந்தவின் காலில் விழுந்து உயிர்ப்பிச்சை கேட்டு மண்டை பிளந்து கொல்லப்பட்டதாக ஏகப்பட்ட வதந்தி. ஒரு இனத்தின் போராட்டத்தின் மீது வக்கிரம் பிடித்த மனநோயாளிகள் நடத்திய உளவியல்த் தாக்குதல்கள் இவை. ஆனால் இன்று சரத்பொன்சேகா எல்லாவற்றையும் போட்டு உடைத்து விட்டார்.

ltte32
சரணடைந்து உயிர்ப்பிச்சை கேட்ட ஒரு போர்வீரனை இன்னொரு போர்வீரன் என்றைக்கும் புகழ மாட்டான். தலைவர் பிரபாகரன் கடைசிவரை “எப்படி களத்தில் நின்றார்” என்பதை மகிந்த ராஜபக்ச பிரபாகரனின் உடம்பில் இருக்கும் ஒரு முடிக்கே பெறுமதியற்றவர் ஒற்றை வாக்கியத்தினூடாக உலகிற்கே பறைசாற்றியிருக்கிறார் சரத்பொன்சேகா.

இறுதிப்போரை வழி நடத்திய ஒரு இராணுத்தளபதியின் ஒப்புதல் வாக்குமூலம் இது. இனியாவது வக்கிரம் பிடித்த மனநோயாளிகள் உளறிக்கொட்டுவதை நிறுத்திக் கொள்வது நல்லது.

ஒருவன் எப்போது உண்மையான மக்கள் தலைவனாக – போராளியாக வரலாற்றில் இடம் பிடிக்கிறான் என்றால் அவனை எதிர்கொண்ட எதிரிகளே வியந்து புகுழும்போதுதான். தலைவர் பிரகாரனுக்கான அங்கீகாரத்தை சிங்களமே தரும் தருணம் இது.

SHARE