திருடர்கள் கையில் சிக்கிய பசுமாடு…. எஜமானவரை அடையாளம் கண்டு கதறிய பரிதாபம்!….

369

ஐந்தறிவு ஜீவன்களுக்கு எப்போதுமே தன்னை வளர்க்கும் எஜமானரிடம் தனி விசுவாசம் இருக்கும். அது நாய்களுக்கு அதிகம் என்பதை பல்வேறு சம்பவங்கள் மூலம் நாம் அறிந்திருப்போம். ஆனால் பசு மாடு ஒன்று திருட்டு போய் மீண்டும் தன் எஜமானரிடம் சேர்ந்துள்ள சுவாரஸ்யம் நடந்துள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டையை சேர்ந்தவர் பிரேமா. இவர் செல்லமாக பசுமாடு ஒன்றை வளர்த்து வந்தார். ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள அந்த பசுமாட்டை தன் பிள்ளையை போல் பராமரித்து வந்தார். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டில் கட்டியிருந்த பசு மாடு திடீரென மாயமானது. இதனால் பிரேமா மிகவும் சோகமானார்.

தனது மாட்டை பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. அப்போது சிலர் அவரிடம், மாடுகளை திருடும் மர்மக்கும்பல் சந்தைகளில் விற்பது வழக்கம் என்று கூறினர். இதைத்தொடர்ந்து பிரேமா திருமயம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நடக்கும் மாட்டு சந்தைக்கு சென்று தனது பசு மாட்டை தேடினார்.

நேற்று மணப்பாறையில் மாட்டு சந்தை நடந்தது. இந்த சந்தைக்கு வந்த பிரேமா மாடு வாங்குவது போல் வியாபாரிகளிடம் இருந்த மாடுகளை பார்வையிட்டார். அப்போது ஒரு பசு மாடு பிரேமாவை கண்டு ‘அம்மா’ என்று பாசக்குரலோடு கத்தியது. பசிக்காக கத்துகிறது என்று அதனை விற்க கொண்டு வந்தவர் நினைத்த நேரத்தில் அது பாசத்தோடு பிரேமாவை பார்த்து கூக்குரலிட்டது. இதனை பிரேமா அறிந்து கொண்டார்.

உடனடியாக மாடு அருகே சென்ற பிரேமாவை கண்டதும் அந்த பசு மாடு துள்ளிக்குதித்து பிரேமாவை உரசியது. இந்த பாச போராட்டம் சுமார் ஒரு மணி நேரம் நீடித்தது. அந்த மாடு தன்னுடையது தான் என்று கண்டுபிடித்த பிரேமா கண் கலங்கினார். அந்த மாட்டை விற்க கொண்டு வந்தவரிடம் விசாரித்தார்.

அது ஒரு வியாபாரியிடம் வாங்கியதாக அவர் கூறினார். இதைத்தொடர்ந்து மணப்பாறை போலீசில் பிரேமா புகார் செய்தார். புகாரின் பேரில் சந்தைக்கு சென்ற போலீசார் பசு மாட்டை பறிமுதல் செய்து காவல் நிலையத்தில் கொண்டு வந்து கட்டினர்.

பின்னர், பசு மாட்டை விற்க முயன்ற அறந்தாங்கியை சேர்ந்த வியாபாரியிடமும், அதனை வாங்க முயன்ற கந்தர்வக்கோட்டை வியாபாரியிடமும் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் மாடு திருடிய கும்பலை பிடிக்கவும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

 

SHARE