கடமையில் ஈடுபட்டிருந்த கடற்படைவீரரொருவர், சந்தேகத்திற்கிடமான முறையில் நடந்துகொண்ட மூவரிடமிருந்த பையை சோதனைக்கு உட்படுத்த முயன்றபோதே அந்த வீரரை தாக்கிவிட்டு பையையும் அவ்விடத்திலேயே போட்டுவிட்டு தப்பியோடிவிட்டனர்.
வெருகல் ஆறு கடற்படை முகாமில் கடமையாற்றும் வீரரொருவரின் மீது தாக்குதல் நடத்தியதுடன் ரி-56 ரக துப்பாக்கியை அவ்விடத்திலேயே போட்டுவிட்டு தப்பியோடிய மூவரை கைது செய்யும் நோக்கிலேயே தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது என்று கடற்படை அறிவித்துள்ளது.
பொலிஸ்,இராணுவம் மற்றும் கடற்படை ஆகியன இணைந்தே இந்த தேடுதல் நடவடிக்கையை வெருகல் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள பல கிராமங்களில் முன்னெடுத்துள்ளதாக கடற்படையினர் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் கடற்படையினர் மேலும் தெரிவிக்கையில்,
அந்த பையை சோதித்தபோதே அதிலிந்த ரி-56 ரக ஆயுதம் மீட்கப்பட்டது என்றும் இதனையடுத்தே இந்த சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றது என்றும் கடற்படையினர் அறிவித்தனர். தமிழீழ விடுதலைப்புலிகளுடன் இடம்பெற்ற யுத்தத்தின் போது வெருகல் ஆறு பகுதி கருணா அம்மாவின் கட்டுப்பாட்டில் இருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
திருகோணமலை, வெருகல் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள பல கிராமங்கள் இன்று செவ்வாய் அதிகாலை முதல் படையினரால் சுற்றி வளைக்கப்பட்டு தேடுதல் நடத்தப்பட்டு வருகின்றது.
இன்று அதிகாலை 2 மணி தொடக்கம் இராணுவத்தினர் சுற்றி வளைத்து தேடுதலில் ஈடுபட்டு வருகின்றனர். 15 வயதிற்கு மேற்பட்டவர்களை தாங்கள் விசாரிக்கப்போவதாகவும் இதற்கு பொது மக்கள் தங்கள் ஒத்துழைப்பை வழங்குமாறும் படையினர் ஒலிபெருக்கி மூலம் அறிவித்தல் விடுத்ததன் பின்னர் இந்த சுற்றி வளைப்பு இடம்பெற்றுவருகின்றது.
இலங்கைத்துறை, ஈச்சிலம்பற்று, புன்னையடி, கல்லடி இலங்கைத்துறை முகத்துவாரம் போன்ற கிராமங்கள் இந்த சுற்றி வளைப்புக்கு உள்ளாகியுள்ளது.
இதேவேளை 15 வயதிற்கு மேற்பட்டவர்களையும் சந்தேகித்திற்குகிடமானவர்களையும் படையினர் தடுத்து வைத்து விசாரித்து வருவதாகத் தடுக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை நேற்று மாலை இலங்கைத்துறை கடற்கரைப் பகுதியில் சிலர் சந்தேகத்திற்கிடமாக நடமாடியதாகவும் உடனடியாக அந்தப் பகுதியை சுற்றி வளைத்து தேடுதல் நடத்தியபோது ரீ-56 ரக துப்பாக்கி ஒன்று, 2 மகஸின்கள், 78 தோட்டாக்கள் என்பனவும் கைப்பற்றப்பட்டதாகவும் கடற்படைத் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது