தேசிய பாதுகாப்பு குறித்த பாதுகாப்பு தரப்பினரின் கோரிக்கைகளையும் மீறி ஜனாதிபதி மைத்திரி யாழ்.விஜயம்

307

 

தேசிய பாதுகாப்பு குறித்த விமர்சனங்கள் மற்றும் வடக்கு விஜயத்தை தவிருங்கள் என பாதுகாப்பு தரப்பு முன்வைத்த கோரிக்கைகள் அனைத்தையும் மீறி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்றைய தினம் யாழ்.மாவட்டத்திற்கான விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் சாவகச்சேரி – மறவன்புலவு பகுதியில் தற்கொலை அங்கி உள்ளிட்ட வெடிபொருட்கள் மீட்கப்பட்டிருந்தன.

இந்தநிலையில் தென்னிலங்கையில் உள்ள இனவாத சக்திகள் தேசிய பாதுகாப்பிற்கு குந்தகம் விளைந்துள்ளதாக விமர்சனங்களை முன்வைத்தனர்.

மறுபக்கம் இந்த தற்கொலை அங்கி உள்ளிட்ட வெடிபொருட்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை இலக்கு வைத்திருக்கலாம் என்ற கோணத்தில் ஜனாதிபதி வடக்கு விஜயத்தை தவிர்க்க வேண்டும் என பாதுகாப்பு தரப்பினர் கோரியிருந்தனர்.

இந்நிலையில் ஜனாதிபதியின் வடக்கு விஜயம் நிறுத்தப்படும் என முன்னதாக கூறப்பட்டிருந்தது.

இவற்றுக்கு மத்தியில் இன்றைய தினம் வடக்கு விஜயத்தை மேற்கொண்ட ஜனாதிபதி யாழ்.மாவட்டத்திற்கு வருகைதந்துள்ளார்.

குடாநாட்டில் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் யாழ்.நகரில் புதிதாக அமைக்கப்பட்ட உல்லாச விடுதி ஒன்றை ஜனாதிபதி காலை 11.30 மணிக் கு திறந்து வைத்துள்ளார்.

இதற்காக யாழ். மாவட்டத்தில் நேற்றைய தினம் இரவு தொடக்கம் பொலிஸார், மற்றும் விசேட அதிரடிப் படையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

இன்றைய தினம் காலையும் 3 அடுக்கு பாதுகாப்பு மற்றும் விமானத் தாக்குதல்களை தடுப்பதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் கவச வாகனங்களின் பாதுகாப்பு உள்ளிட்ட அதியுச்ச பாதுகாப்புடன் ஜனாதிபதி வருகை தந்துள்ளார்.

மேலும் விடுதியை திறந்து வைத்த ஜனாதிபதி சுமார் ஒரு மணித்தியாலங்களின் பின் திரும்பியுள்ளார். இந்நிகழ்வில் அமைச்சர்கள் சிலரும் கலந்து கொண்டனர்.

SHARE