தோல்விக்கு நான் பொறுப்பேற்றுக் கொள்கிறேன்: விரக்தியில் டோனி

338

இந்திய அணியின் தோல்விக்கு தான் பொறுப்பேற்றுக் கொள்வதாக அணித்தலைவர் டோனி தெரிவித்துள்ளார்.

இந்தியா- தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி நேற்று கான்பூரில் நடந்தது.

முதலில் விளையாடிய தென் ஆப்பிரிக்கா நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 303 ஓட்டங்கள் குவித்தது.

பின்னர் விளையாடிய இந்திய அணியால் 50 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 298 ஓட்டங்களே எடுக்க முடிந்தது. இதனால் தென் ஆப்பிரிக்கா 5 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.

கடைசி ஓவரில் இந்திய அணியின் வெற்றிக்கு 11 ஓட்டங்கள் தேவை என்ற நிலையில், டோனி களத்தில் இருந்தார். அவர் சிக்சரும், பவுண்டரியுமாய் ஆட்டத்தை முடிப்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால்  4வது பந்தில் அவர் ஆட்டம் இழந்தார்.

இந்திய அணியின் வெற்றிக்கு நல்ல வாய்ப்பு இருந்தும் கடைசி நேர சொதப்பலில் இந்திய அணி தோல்வியை தழுவியது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

இந்த கடைசி நேர நெருக்கடி பற்றி இந்திய அணித்தலைவர் டோனி கூறுகையில், “தென் ஆப்பிரிக்காவை 260 முதல் 270 ஓட்டங்களுக்குள் கட்டுப்படுத்தி இருக்க வேண்டும். ஆனால் பந்து வீச்சு கடைசி நேரத்தில் சரியாக அமையவில்லை.

மேலும், நெருக்கடியான நிலையில் அதிக போட்டிகளில் வெற்றி தேடிக் கொடுத்திருக்கிறோம். இருப்பினும் தோல்வி அடைந்த ஆட்டத்தை தான் மக்கள் எப்போதும் நினைவில் வைத்திருப்பார்கள்.

பின் வரிசையில் களம் இறங்கும் போது பொறுப்பை ஏற்றுக் கொள்ள தயாராக இருக்க வேண்டும். இறுதி நேர ஆட்டம் சூதாட்டம் போன்றது.

சில நேரங்களில் கை கொடுக்கும். சில சமயம் கை கொடுக்காது. இருப்பினும் அணியின் இந்த பொறுப்பை நான் ஏற்று இருக்கிறேன்” என்று கூறியுள்ளார்.

 

SHARE