நடுக்கடலில் உடைந்த அகதிகள் கப்பல்: வெவ்வேறு நாடுகளுக்கு பிரிந்து சென்ற இளம் காதலர்கள்

282

 

பிரித்தானியாவில் குடியேற பயணம் செய்தபோது நடுக்கடலில் கப்பல் உடைந்த விபத்துக்குள்ளானதால், காதலன் பிரான்ஸ் நாட்டிற்கும் காதலி சுவீடன் நாட்டிற்கு பிரிந்து சென்ற சோக சம்பவம் உருக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.எரித்தியா நாட்டிலிருந்து கடந்த ஏப்ரல் மாதம் 100 ஆப்பிரிக்கர்கள் அடங்கிய கப்பல் துருக்கி வழியாக ஐரோப்பாவிற்கு பயணம் செய்துள்ளது.

இதில் எரித்தியா நாட்டை சேர்ந்த காதலர்களாகிய மக்டா(29) என்ற பெண்ணும் ஜோன்(24) என்ற ஆணும் பயணம் செய்துள்ளனர்.

இவர்களின் ஒரு நோக்கம் பிரித்தானியாவில் குடியேறுவது. இதற்காக இருவரும் சுமார் 2,350 பவுண்ட் பணத்தை செலுத்தி கப்பலில் பயணம் செய்துள்ளனர்.

இந்நிலையில், கிரேக்க தீவான ரோட்ஸ் பகுதியில் வந்தபோது பாறை மீது மோதி கப்பல் பெரும் விபத்துக்கு உள்ளானது.

இந்த சம்பவத்தில் 3 பேர் பலியாயினர். இந்த துயரமான சம்பவத்திற்கு பிறகு காதலர்களின் எண்ணம் மாறியுள்ளது.

‘இதே கடல் சீற்றத்துடன் தொடர்ந்து பயணம் செய்தால், கடலிலேயே இறக்க நேரிடும், பிரித்தானியாவிற்கு சென்று திருமணம் செய்து வாழ முடியாது’ என தீர்மானித்துள்ளனர்.

பின்னர், 2,000 பவுண்ட் கொடுத்து கள்ள கடவுச்சீட்டு பெற்று காதலி சுவீடன் நாட்டிற்கும், காதலன் பிரான்ஸ் நாட்டிற்கும் சென்றுள்ளனர்.

இந்த நாள் முதல் கேலைஸ் பகுதி வழியாக பிரித்தானியாவிற்கு நுழைய ஜோன் தீவிர முயற்சி எடுத்தும் தோல்வியை மட்டுமே சந்தித்து வருகிறார்.

சுவீடன் நாட்டில் உள்ள Gallivare நகரில் காதலிக்கு ஒரு அடுக்குமாடி குடியிருப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும், இலவச பேருந்து சேவைகளையும் அவர் பயன்படுத்திக்கொள்ளலாம்.

இது மட்டுமில்லாமல், அவரது தினச்செலவுகளுக்கு அரசு தினமும் 7 பவுண்ட் பணத்தை அவரது வங்கி கணக்கிற்கு செலுத்தி வருகிறது.

எனினும், காதலனை பிரிந்து வாழ்வது பெரும் ஏமாற்றமாக இருக்கிறது என்றும், எப்போதாவது ஒரு நாள் நாங்கள் இருவரும் பிரித்தானியா நாட்டில் குடியேறி ஒன்றாக வாழ்வோம் என மட்கா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

SHARE