நாசாவில் மூன்று நாட்கள்

311

‘‘ஓமன், அமெரிக்கா, குஜராத் என எங்கே போனாலும், நம்ம தமிழ்நாட்டு மண்ணை மிதிக்கிறப்ப கிடைக்கும் சந்தோஷமே தனிதான். நாசாவில் மூன்று நாட்கள் இருந்தப்ப, எவ்வளவு சிலிர்ப்பு இருந்துச்சோ, அதைவிட பல மடங்கு சிலிர்ப்பு இப்போ இருக்கு” என்று புன்னகையோடு வரவேற்றார் ஸ்வர்ணமஞ்சரி. இவருக்கு சொந்த ஊர், திருவாரூர்.

அப்பாவின் வேலை காரணமாக, சிறு வயதிலேயே குஜராத் மாநிலம், சூரத்தில் குடியேறினார். பிறகு, ஓமன் நாட்டின் ‘சோஹார்’ எனும் ஊருக்கு மாற்றம். அங்கே உள்ள சோஹார் இந்தியன் பள்ளியில் 10-ம் வகுப்பு படிக்கிறார். சமீபத்தில், அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆராய்ச்சி மையத்துக்குச் சென்று திரும்பியிருக்கிறார்.

‘‘இந்த ட்ரிப் வித்தியாசமான அனுபவத்தைக் கொடுத்தது. இயற்கையைப் பற்றிய பாடங்களைப் படிக்கும்போது களப் பணியாக, மலைப்பிரதேசம், அருவி எனச் செல்வோம். அதுபோல விண்வெளி சம்பந்தமான பாடங்களை, அதுகுறித்து ஆராய்ச்சி நடக்கும் இடங்களுக்குச் சென்று கற்கும் திட்டம் இது.

நமது படிப்பு, திறமையோடு, அந்த இடத்தின் சீதோஷ்ண நிலைக்கு, நமது உடல்நிலை சமன்படுகிறதா என்ற சோதனையிலும் வெற்றிபெற வேண்டும். அவ்வாறு நாசாவுக்குச் செல்ல தேர்வுசெய்யப்பட்ட 32 பேர்களில் நானும் ஒருத்தி” என்கிறார் பெருமிதமாக.

அங்கே, மூன்று நாட்கள் விண்வெளி சம்பந்தமான பாடங்கள், பயிற்சிகள் நடந்தன.

‘‘மாணவர்களைத் தனித்தனிக் குழுக்களாகப் பிரித்தார்கள். ஒவ்வொரு குழுவும் விண்வெளியில் பயன்படுத்தக்கூடிய ஓர் அறிவியல் உபகரணத்தை உருவாக்க வேண்டும். நாங்கள் உருவாக்கிய உபகரணத்துக்கு ‘லெகோ’ (LEGO) என்று பெயர்.

இது, விண்வெளியில் குறிப்பிட்ட எல்லைக்குச் சென்ற பிறகு, ஸ்பை கேமரா போல செயல்படும். வளிமண்டலத்தில் உள்ளவற்றைப் பற்றிய தகவலை பூமிக்கு அனுப்பும். எங்களின் அறிவியல் மாதிரிகளைச் சோதித்த நாசா விஞ்ஞானிகள், பாராட்டி ஊக்கப்படுத்தியதோடு, அதில் இருக்கும் குறைகளையும் சுட்டிக்காட்டினார்கள். பரிசும் சான்றிதழும் அளித்தார்கள். விண்வெளியின் பிரமாண்டம் எத்தகையது என்பதும் புரிந்தது” என்றார் பிரமிப்புடன்.

விண்வெளிக்குச் சென்று திரும்பிய அட்லாண்டிக் விண்கலம் உட்பட, நாசாவில் பல இடங்களைச் சுற்றிப் பார்த்திருக்கிறார்கள்.

‘‘நாசாவில் இருந்து விண்வெளி சென்று திரும்பிய ஜெர்ரி எல்.ரோஸ் என்பவரோடு கலந்துரையாடியது மறக்க முடியாதது. விண்வெளியில் அவருக்கு ஏற்பட்ட அனுபவங்களை த்ரில்லர் படம் போல அவ்வளவு சுவாரஸ்யமாகச் சொன்னார்.

அதைக் கேட்கும் எவருக்கும், விண்வெளி வீரராக வேண்டும் என்ற எண்ணம் உருவாகும். எனக்கும் அந்த ஆசை இருக்கிறது. அப்படி விண்வெளி வீராங்கனையாக வானத்தில் மிதந்தாலும், ஆரம்பத்தில் சொன்ன மாதிரி, நம் தமிழ்நாட்டு மண்ணை மிதிச்சுட்டுத்தான் போவேன்” என்கிறார் புன்னகையோடு.

Nasa 01Nasa 02Nasa

SHARE