நிஜத்தில் ஒரு ‘இறுதிச் சுற்று’ பாக்ஸர்… மேரி கோமுடனே மல்லுக்கட்டிய தமிழ் பெண்!

370

 

“பொண்ணுங்களோட பிரசவ வலியை விட, இந்த பாக்ஸிங் ஒண்ணும் கஷ்டமில்லை. மனசுல தில், நல்ல பயிற்சி, தெளிவான வியூகம் இருந்தா… களத்தில் கலக்கலாம்!’’ என பேச்சிலும் தடதடக்கிறார், சென்னையைச் சேர்ந்த பாக்ஸர் துளசி ஹெலன். சர்வதேச பாக்ஸிங் போட்டிகளில் விளையாடிவரும் சென்னை பெண்.

“என் அக்கா பாக்ஸிங் கத்துக்கிட்டா, இப்போ போலீஸா இருக்கா. அவள் பாக்ஸிங் பண்ணுவதை பார்த்துதான் எனக்கு பாக்ஸிங்கில் ஆர்வம் வந்தது. ஆர்வம் படிப்படியா லட்சியமா மாறி, இப்போ பாக்ஸிங்தான் என் வாழ்க்கைனு ஆயிடுச்சு.

நான் இப்போ புரொஃபஷனல் பாக்ஸர். சில சினிமா பிரபலங்களுக்கு ஃபிட்னஸ் டிரெயினராவும் இருக்கேன்’’ எனும் ஹெலன், உலக தமிழ் வர்த்தக சங்கம் வழங்கும் சாதனைத் தமிழச்சி என்ற  விருதை,   உலக தமிழர் திருநாள் விழாவில் ஆளுநரிடமிருந்து சமீபத்தில் வாங்கியிருக்கிறார்.

“இப்போ எனக்கு 29 வயசு. 12 வயசில் பாக்ஸிங் ஆரம்பிச்சேன். இந்த 16 வருஷ பாக்ஸிங் பயணத்துல மாநில அளவில் 32 மெடல்கள் ஜெயிச்சிருக்கேன்.

தேசியளவில் மூன்று  முறை வெண்கலப் பதக்கமும், சர்வதேச அளவில் ஒரு தங்கம் மற்றும் ஒரு வெண்கலப் பதக்கமும் வாங்கியிருக்கேன். என் அடுத்த இலக்கு, உலக நாடுகளில் நடக்க இருக்கும் புரொஃபஷனல் பாக்ஸிங்கில் ஜெயிக்கணும். என் திறமை, வெற்றியெல்லாம் ஒருபக்கம் இருக்கட்டும். என் தினசரி வாழ்க்கை பத்தியும் கொஞ்சம் தெரிஞ்சுக்கோங்க’’ எனும்போது, துளசியின் வார்த்தைகள் வேகமாகின்றன.

‘‘என்னை நானே காப்பாத்திக்க வேண்டிய சூழல். என் ஏழ்மை காரணமாவும், நான் கீழ்நிலையில் இருந்து மேல் வந்தவள் என்பதாலும் என் திறமைக்கான அங்கீகாரம் கிடைக்காம நான் நிராகரிக்கப்பட்ட இடங்கள் நிறைய. அது இன்னும் தொடருது. ஆனாலும், ஒரு சுயம்புவா இவ்வளவு தூரம் வந்திருக்கேன். இப்பவும்கூட அடுத்தடுத்த போட்டிகளுக்கான ஸ்பான்ஸர்களுக்கு உயிர் வெறுக்க அலையுறது தொடர்கதையாதான் இருக்கு’’ என்று தன் பாரம் சொன்ன துளசி,

‘‘இந்தியாவுக்குள்ள விளையாடுறதுக்கும், உலக அளவில் விளையாடுறதுக்கும் ஒரு முக்கியமான வேறுபாடு இருக்கு. உலக அரங்குகளில் என் திறமையைத்தான் பார்ப்பாங்க. ஆனா, இந்தியாவில் நான் ஜெயிக்கவேண்டிய சில மேட்ச்களில், பணம் விளையாடி, தோற்க வேண்டியவரை வெற்றியாளரா உலகத்துக்கு அறிமுகப்படுத்தினப்போ நான் அனுபவிச்ச வலியை, எந்த வார்த்தைகளில் சொல்லியும் உங்களுக்குப் புரியவைக்க முடியாது. ஏழைங்களை கைதூக்கிவிடக்கூட வேண்டாம். ஆனா, நாங்களா முட்டிமோதி பிடிச்சு ஏறும் ஏணியையும் பறிச்சா, என்னதான் செய்வோம்?

இன்னைக்கு எத்தனை நல்ல பாக்ஸர்கள் ஆட்டோ ஓட்டறாங்க தெரியுமா? காய்கறிக் கடையில வேலை செய்றாங்க தெரியுமா? நானும் எல்லா வேலைகளும் செய்திருக்கேன். கறிக்கடை, பெட்ரோல் பங்க், பிட்சா கடை என பல இடங்களில் வேலை பார்த்துருக்கேன். திறமை இருந்தும் அதுக்கான அங்கீகாரம் தட்டிப்பறிக்கப்பட, குடும்பச்சூழலுக்காக கிடைக்கிற வேலையை செய்துட்டு வாழ்க்கையை ஓட்டுற சர்வதேச விளையாட்டு வீரர்கள் நிறையப் பேர். அரசாங்கம் கொஞ்சமாவது திறமைசாலிகளுக்கு வாய்ப்புக் கொடுங்க. ஸ்பான்ஸர் செய்யுறவங்க, தயவுசெஞ்சு எங்க திறமைமேல நம்பிக்கைவெச்சு, கீழ இருக்குறவங்களுக்கும் கைகொடுங்க’’ என வேண்டுகோள் விடுக்கிறார்.

” உங்க எல்லாருக்கும் மேரி கோம் வாழ்க்கையை அடிப்படையாக கொண்ட பிரியங்கா சோப்ரா நடிச்ச ‘மேரி கோம்’ படம் பற்றித் தெரியும். நானும் ‘’Light Fly. Fly High’’ என்ற ஒரு ஆவணப்படத்துல நடிச்சிருக்கேன். அது உலக அளவில் 7 விருதுகள் வாங்கிச்சு’’ என்று ஆச்சர்ய செய்தி சொன்னவர், ‘‘என்னைப் பேட்டி எடுக்க வந்த நார்வேயை சேர்ந்த Beathe Hofreth, Susann otigaard  என் கதையைக் கேட்டுட்டு, என்னை வெச்சு டாக்குமென்ட்ரி எடுத்தாங்க. 2010 முதல் 2013 வரை தயாரான அந்தப் படத்தில் நான் அழுதது, சிரிச்சது எல்லாமே உண்மை. இந்தியாவில் சில காரணங்களால் அந்தப் படத்தை நான் வெளியில் விட விரும்பல. யுடியூபில் கூட அந்தப் படத்தின் டிரைலர் மட்டும்தான் இருக்கும். ஆனா, அந்தப் படம் சர்வதேச அரங்குகளில் விருதுகள் குவிச்சதில் எனக்கு ரொம்பவே சந்தோஷம்’’ எனும் துளசி, இப்போது toneez fitness சென்டரில் பயிற்சியாளராக இருக்கிறார்.

‘‘அகாடமியின் எம்.டி. ஸ்ரீராம் சார்தான் இப்போ எனக்குப் போட்டிகளுக்கான உதவிகள் செய்துட்டு இருக்கார். என் தோழி சுபாதான் ரொம்ப உதவியா கூடவே இருக்கா. இவங்க ரெண்டு பேருக்கும் எவ்வளவு நன்றி சொன்னாலும் பத்தாது. ஸ்பான்ஸர்கள், எனக்குத் தேவை. நிராகரிப்பு, அவமானம், புறக்கணிப்பை எல்லாம் பற்றிக் கவலைப்படாம, என் கால்கள் வெளிச்சம் நோக்கி நடந்துட்டேதான் இருக்கும்’’ துளசியின் கண்களில் வலியும், ஒளியும்.

’’அமெச்சூர் இப்போ என்னால் விளையாட முடியல. நேரு ஸ்டேடியத்துக்குள்ள போயி பிராக்டீஸ் பண்ண முடியல. உள்ளே போனா  வாச்ட்மேனை வைச்சு அனுப்புவாங்க. இதுக்கு காரணம், சில வருசத்துக்கு முன்னாடி அங்கே சிலர் மேல நான் கொடுத்த பாலியல் தொல்லை புகார். அதுனால பல விதங்களில் முடக்கப்பட்டு முடங்கி கிடந்து இப்போ எழுந்திருக்கேன்.

நான் பண்ணாத தப்புக்கு , தப்பை எதிர்த்ததுக்கு தண்டனை நிறைய அனுபவிச்சேன். பாக்ஸிங்தான் வாழ்க்கைனு இருந்த எனக்கு அதையே விளையாட விடாம செய்றது கொடூரம்.

2005, 2008ல் ரெண்டு முறை, 2009, 2010 அமெச்சூர் குவாட்டர் பைனலில் மேரி கோம் கூட,  ஐந்து முறை போட்டி போட்டு இருக்கேன். ஐந்து முறையும் போட்டியில் நான்தான் அதிக பாயின்ட்ஸ் வாங்கினேன்.

ஆனா, அவங்க சாம்பியன்னு அவங்களைத்தான் ஜெயிச்சவங்களா அறிவிச்சாங்க. அவங்க பண்ணது பட் பஞ்ச்தான். அதாவது விதிமுறைகள் தாண்டி தப்பா அடிக்கிறது. ஆனா, அதைத்தான் கரெக்ட் பஞ்ச்னு சொல்வாங்க. இந்தியாவுக்கு கப் வாங்கிகொடுத்ததுக்காக அவுங்களை மேலும் மேலும் தூக்கிவிட்டுகிட்டே இருந்தா.. மத்த யாரும் கப் வாங்கி தர முடியாது.

உலகளவில் நடக்கும் தொழில்முறை குத்துச்சண்டையாளர்களுக்குள் நடக்கும் போட்டியில், இது போல எதுவும் செய்ய முடியாது. உலகமே அந்த போட்டியைக் கண்காணிக்கும். கோடிக்கணக்கில் பணம் புரளும் போட்டிகளில், ’ஒண்ணு நீ சாகனும்… இல்ல நான் சாகணும்’ அப்படி இருக்கும். அதில் கண்டிப்பா ஜெயிச்சு.. எந்த அமெச்சூரிலிருந்து என்னை அனுப்பினாங்களோ.. அதுக்கு மீண்டும் வருவேனு நம்பிக்கை இருக்கு. எந்த இடத்திலும் தேங்கிக் கிடக்க மாட்டேன்!’’

இறுதிச்சுற்று’ படம் என் வாழ்க்கைதான்

’’சமீபத்துல வெளியான ‘இறுதிச் சுற்று’ படத்தின் பல சம்பவங்கள் என் நிஜ வாழ்க்கைல நடந்திருக்கு. அந்தப் பட இயக்குநர் சுதா மேடம் என் வாழ்க்கைக் கதையை படமா எடுக்கலாம்னு சொன்னாங்க. நானும் அவங்கிட்ட என் வாழ்க்கையை சொன்னேன். அதை அப்படியே படமா ரொம்ப நல்லா கொண்டு வந்துருக்காங்க. சினிமாவுக்காக ஹீரோ, காதல் போன்ற சில பகுதிகள் சேர்த்திருக்காங்க. ஆனா, பட வேலைகள் ஆரம்பிச்சப்ப என்கிட்ட பேசிட்டு இருந்தாங்க. அப்புறம் அந்த படம் தயாரிக்கும் போதோ, வெளிவரும்போதோ என்கிட்ட எதுவும் சொல்லலை. படம் பார்த்த சிலர் ’ஹேய்… இது உன் வாழ்க்கை மாதிரியே இருக்கு’னு சொன்னப்பிறகுதான், இப்படி ஒரு படம் வந்திருக்குன்னே எனக்குத் தெரியும். நான் சுதா மேடம்கிட்ட போன் பண்ணிப் பேசினேன். ஆனா, ஒரு நாலு வார்த்தை பேச அவங்களுக்கு நேரம் இல்லை. என்கிட்ட சுதா மேடம் இந்தப் படத்தைப் பற்றிச் சொல்லியிருக்கலாம். அதான் வருத்தமா இருக்கு!’’

லேடி முகமது அலி

‘‘தினமும் சத்துமாவுக் கஞ்சி குடிப்பேன். முளைகட்டிய பயறு, ஓட்ஸ், பீஃப், முட்டை, காய்கறிகள்னு சாப்பிடுவேன். கார்போஹைட்ரேட் உணவுகளை குறைச்சுக்குவேன். தண்ணீரும் அளவாத்தான் குடிப்பேன். அப்போதான் தசைகள் எல்லாம் இறுகும். பிரபல அமெரிக்க பாக்ஸர் முகமது அலி பாணியில் என் பாக்ஸிங் ஸ்டைல் இருப்பதால, பாக்ஸிங் சர்க்கிளில் என்னை ‘லேடி முகமது அலி’னு சொல்வாங்க!’’ என்கிறார் துளசி, சிரிப்புடன்.

தன் வாழ்க்கை கதைதான் ‘இறுதிச்சுற்று’ படம் என துளசி சொல்வது குறித்து அப்படத்தின் இயக்குநர் சுதாவிடம் கேட்டேன்.

 

‘‘பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த சின்னச் சின்னப் பெண்களை, கிடைக்கும் பரிசு, பணம் மற்றும் அதனால கிடைக்க வாய்ப்பிருக்கிற அரசு வேலைக்காக அவங்க பெற்றோரே குத்துச்சண்டைப் போட்டிகளுக்கு அழைச்சுட்டு வர்றதை நியூஸ் பேப்பரில் நான் படிச்ச நாளில் ஆரம்பிச்சது, இந்தப் படத்துக்கான என் வேலை. அப்போதான், பாக்ஸிங் உலகின் அரசியல் மற்றும் அசிங்கமும், லேடி பாக்ஸர்களின் துயரமான நிலையும் தெரியவந்தது. இதுக்காக மேரி கோம், சரித்திரா தேவியில் ஆரம்பிச்சு துளசி ஹெலன்வரை கிட்டத்தட்ட 100 பாக்ஸர்களைச் சந்திச்சேன். அவங்களோட கோச்கள், பெற்றோர்கள்னு எல்லார்கிட்டயும் பேசினேன்.

என் படம், ஒட்டுமொத்த லேடி பாக்ஸர்களின் வலிகளை உள்ளடக்கியது. ரெண்டு வருசத்துக்கு மேல ஆராய்ச்சி பண்ணி உருவான கதை. அவ்வளவு ஏன்… படத்துல மைக் டைசன் கதை கூட இருக்கு. அவர் ஒருதடவை சொல்லியிருப்பார்… ‘என்னிக்கு என் கோச்சின் பேச்சை கேட்கிறனோ,எனக்கு வெற்றி நிச்சயம். எப்போ அவர் பேச்சை கேட்கலையோ அப்போ தோல்வி நிச்சயம்’னு. அவர் சொன்னதுதான் என் படத்தின் கருவே. அதனால அவர், ’இது என் வாழ்க்கை படம்னு சொல்ல முடியாதே… சொல்லவும் கூடாது!’’ என்கிறார் கேஷூவலாய்.

SHARE