நிருபரை திட்டிய கோஹ்லி மீது ஐ.சி.சி-யிடம் புகார்.. வழக்கு தொடரவும் முடிவு

390
நிருபர் ஒருவரை தகாத வார்த்தைகளால் திட்டிய விவகாரத்தில் இந்திய அணியின் துணை அணித்தலைவர் கோஹ்லி மீது சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலில் (ஐ.சி.சி) புகார் செய்யப்பட்டுள்ளது.நேற்று முன்தினம் பெர்த்தில் பயிற்சியில் ஈடுபட்டு விட்டு வீரர்கள் அறைக்கு திரும்புகையில், கோஹ்லி அங்கு நின்று கொண்டிருந்த ஆங்கில பத்திரிகை நிருபரை நோக்கி தகாத வார்த்தைகளால் சரமாரியாக திட்டியுள்ளார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

தன்னையும், தனது காதலியும், இந்தி நடிகையுமான அனுஷ்கா சர்மா குறித்து செய்தி வெளியிட்ட நிருபர் அவர் தான் என்று நினைத்து திட்டியதாக கூறப்பட்டது.

பின்னர் அவர் வேறு நிருபர் என்று தெரிந்ததும் விராட் கோஹ்லி வருத்தம் தெரிவித்தார்.

இந்நிலையில் விராட் கோஹ்லி பொது இடத்தில் நிருபரிடம் அநாகரீகமாக நடந்து கொண்ட விதம் குறித்து அந்த பத்திரிகை சார்பில் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் ஜக்மோகன் டால்மியாவுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது.

மேலும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி) கவனத்திற்கும் கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக இந்திய கிரிக்கெட் வாரியத்தின் புதிய செயலாளர் அனுராக் தாகூர் கூறுகையில், இந்த பிரச்சனை குறித்து விராட் கோஹ்லி விளக்கம் அளித்துவிட்டார்.

தவறான புரிந்து கொள்ளுதலால் நடந்த இந்த சம்பவத்துக்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டு உலகக்கிண்ணத்தில் இந்திய அணி கவனம் செலுத்துவது அவசியம். வருங்காலங்களில் இதுபோன்ற சம்பவங்களை தவிர்க்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில் அந்த ஆங்கில பத்திரிக்கை, அவுஸ்திரேலிய சட்டப்படி பத்திரிகையாளரிடம் தரக்குறைவாக நடந்து கொண்டதற்கு எதிராக வழக்கு தொடர முடியுமா என்பது பற்றி ஆய்வு செய்து வருவதாகவும் செய்தி வெளியாகியுள்ளது.

SHARE