நிலையான நல்லிணக்கத்திற்கு ஐ.சி.ஆர்.சி.யின் அறிக்கை ஆக்கபூர்வமானது-வரவேற்கிறார் சந்திரிக்கா

269
இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு போரின்போது காணமற்போனவர்கள் தொடர்பில் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் அறிக்கையும் அதன் பரிந்துரைகளும் ஆக்கபூர்வமானவையாகும். இதில் முன்னேற்றம் காண பொறிமுறைகள் அமைக்கப்பட்டு வருவதாக தேசிய ஒருமைப்பாட்டிற்கும் நல்லிணக்கத்திற்குமான அலுவலகத்தின் தலைவரும் முன்னாள் ஜனாதி பதியுமான சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
போரின்போது காணாமற்போனவர்களின் உறவுகளுக்கு உண்மை நிலையை  அறிய சந்தர்ப்பம் அளித்தல் மற்றும் அவர்களின் வாழ்வாதார உளவியல் முன்னேற்றங்களுக்கு ஒத்துழைப்பு வழங்குதல் போன்ற விடயங்கள் தொடர்பில் அரசாங்கம் பொறுப்புணர்வுடன் செயற்படுகின்றது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் உள்நாட்டுப்போரின்போது காணமற்போனவர்கள் தொடர்பான சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் அறிக்கை தொடர்பில் நேற்று வெள்ளிக்கிழமை தேசிய ஒருமைப்பாட்டிற்கும், நல்லிணக்கத்திற்குமான அலுவலகத்தின் சார்பில் அவர் வெளியிட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காணாமற்போனவர்கள் தொடர்பான சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் அறிக்கையை தேசிய ஒருமைப்பாட்டிற்கும், நல்லிணக்கத்திற்குமான அலுவலகம் வரவேற்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த அறிக்கையில் பல்வேறு பரிந்துரைகளும், முன்வைக்கபட்டுள்ளன. நிலையான நல்லிணக்கத்திற்கு தேவையான அந்த விடயங்களை சட்டபூர்வமாகவும், அடிப்படை உரிமைகள் மற்றும் சுதந்திரத்திற்கு மதிப்பளிக்கும் வகையில் தாம் முன்னெடுத்துவருவதாகவும் சந்திரிக்கா தெரிவித்துள்ளார்.
SHARE