நுவரெலியாவில் பதற்றம்..!!

264

 

புஸ்ஸல்லாவயில் நேற்று பொலிஸ் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த கைதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருந்தார்.

புஸ்ஸல்லாவ ரொத்சைல்ட் தோட்டத்தை சேர்ந்த நடராஜா ரவிசந்திரன் வயது 28 என்ற இளைஞன் புஸ்ஸல்லாவ பொலிஸ் நிலையத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் மரணமடைந்துள்ளார்.

எனினும் அவர் தூக்கில் தொங்கியதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளதாகவும் இது கொலையாக இருக்கலாம் என்று பிரதேச வாசிகள் சந்தேகம் தெரிவித்து பொலிஸாருக்கு எதிராக பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றிலும் ஈடுபட்டனர்.

4 அடி உயரமான சிறைக் கதவில் 6 அடி உயரமுள்ள ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது எவ்வாறு என பலத்த சந்தேகம் ஏற்பட்டதை தொடர்ந்து நுவரெலியா மக்கள் ஒன்று திரண்டு பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றினை இன்று முன்னெடுத்தனர்.

பகல் 12 மணிமுதல் 3.00 மணிவரை சுமார் 1000 தோட்ட தொழிலாளர்கள் கண்டி நுவரெலியா பிரதான பாதையை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

 

இதன் போது மரணத்திற்கு காரணமாக இருந்த பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளை உடனடியாக இடமாற்றம் செய்யுமாறும், பிரச்சினைக்கு காரணமாக இருந்த பொலிஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்யுமாறும். இடம்பெற்றது தற்கொலை அல்ல கொலை அதற்கு நியாயமான நீதி கிடைக்க வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதேவேளை ஆர்ப்பாட்ட மக்களின் பிரச்சினைக்கு தீர்வை பெற்றுக் கொடுக்கும் நோக்கில் அமைச்சர் பழனி திகாம்பரம், கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலு குமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வருகை தந்தனர்.

 

அத்தோடு மக்களின் கோரிக்கையை பொலிஸ்மா அதிபர் பூஜித்த ஜயசுந்தர அவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

பொலிஸ்மா அதிபரின் தலையீட்டினை அடுத்து இந்த கோரிக்கையை பொலிஸ்மா அதிபர் தீர்த்து வைப்பதாக உறுதியளித்தற்கு இணங்க இவற்றை பழனி திகாம்பரம், வேலு குமார் ஆகிய இருவரும் ஆர்ப்பாட்ட மக்களிடம் எடுத்து கூறியதற்கு பின்னர் ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டது.

மேலும் பொலிஸ்மா அதிபர் பூஜித்த ஜயசுந்தர விஷேட கவனத்திற்கு கீழ் மேலதிக விசாரணைகள் இடம் பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

SHARE