நேபாளம்-இந்தியாவில் மீண்டும் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்பு: விஞ்ஞானிகள் அதிர்ச்சி தகவல்

331
நேபாளம் மற்றும் இந்தியாவில் மீண்டும் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

நேபாளத்தில் கடந்த ஏப்ரல் 25-ந்தேதி ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் 9 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர். இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் வட இந்திய மாநிலங்களிலும் எதிரொலித்தது. அதன்பிறகும், அவ்வப்போது லேசான நிலநடுக்கம் ஏற்பட்டு வரும் நிலையில், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக பேராசிரியர் ஜீன் பிலிப் ஆவோவாக் இதுதொடர்பான ஆராய்ச்சி முடிவை வெளியிட்டுள்ளார்.

மக்கள் தொகையின் அடர்த்தி அதிகமாக இருப்பதால் வட இந்தியாவின் கங்கை சமவெளி பகுதியிலும், நேபாளத்தின் மேற்கு பகுதியிலும் எதிர்காலத்தில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட அதிக வாய்ப்புள்ளதாக அவர் பி.பி.சி. செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்துள்ளார்.

நேபாள நிலநடுக்கத்திற்கு பிறகு காத்மண்டுவில் ஏற்பட்டு வரும் நில அதிர்வுகள் ஜி.பி.எஸ். நிலையங்கள், அக்ஸிலரோமீட்டர் வாயிலாகவும், உலகம் முழுவதும் நிறுவப்பட்டுள்ள முக்கிய புவிஆராய்ச்சி மையங்கள் வாயிலாகவும் ஆராய்ச்சி செய்யப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக, செயற்கைக்கோள் மூலம் சேகரிக்கப்பட்ட ரேடார் காட்சிகளையும் விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்து வருகின்றனர்.

அதனடிப்படையில், நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்திற்கு பிறகு இமாலயப்பகுதியில் உள்ள நிலப்பரப்பின் மேல் தட்டு நகர்ந்துள்ளதாகவும், இதில் பெரும்பகுதி ஒருபுறமாக இறுகியிருப்பதால் திடீரென எப்போது வேண்டுமானாலும் அந்த அழுத்தமானது விடுவிக்கப்படலாம் என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். இந்த அழுத்தமானது ஒரு பயங்கர நிலநடுக்கத்தை ஏற்படுத்தும் அளவிற்கு சக்தி வாய்ந்ததாக இருக்கும் எனவும் கூறப்படுகிறது. ஆனால், எப்போது இந்த நிலநடுக்கம் ஏற்படும் என்பதை அறுதியிட்டு கூற இயலாது என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்

SHARE