நேபாளம் நிலநடுக்கத்தின் உண்மை காரணம்

364
நேபாளத்தில் நேற்று 7.9 ரிக்டர் அளவுகோலில் ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கம் அந்நாட்டை மட்டுமல்ல, அண்டை நாடுகளையும் நடுக்கத்திற்குள்ளாக்கியுள்ளது.

ஆயிரத்திற்கும் மேற்பட்ட உயிர்களைக் காவுகொண்ட இந்த நிலநடுக்கமானது, கோடிக்கணக்கில் பொருட்சேதத்தினையும் ஏற்படுத்தியுள்ளது. அப்பகுதிகளில் இவ்வாறான நிலநடுக்கம் ஏற்படக் கூடிய சாத்தியக் கூறுகள் இருந்ததாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

இயற்கையின் கோரத்தாண்டவத்தில், யுனெஸ்கோ நிறுவனத்தினால் பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்ட ராஹா கோபுரமும் தப்பவில்லை.

இந்த நிலையில், நேபாள நிலநடுக்கமானது பேரழிவுகளைத்தரக் கூடியதாக ஏன் இருந்தது என்பது குறித்து விஞ்ஞானிகள் விளக்கியுள்ளனர்.

இது குறித்து இங்கிலாந்தின், ஓபன் பல்கலைக்கழகத்தின் புவியியல் பேராசிரியர் டேவிட் ரோத்ரி கருத்து வெளியிடுகையில்,

இமயமலைப் பகுதியில் சக்தி வாய்ந்த நிலடுக்கம் ஏற்படக் கூடிய வாய்ப்பிருப்பதாகவும் பல ஆண்டுகளுக்கு முன்பே பல விஞ்ஞானிகள் இது குறித்து எச்சரிக்கை செய்துள்ளனர்.

நேபாளத்தில் சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்படுவதற்கு இந்திய-யுரேசியத் தட்டுக்கள் ஒன்றுடன் ஒன்று மோதுவதே காரணமாகும்.

நேபாளத்தில் உள்ள செயற்திறன் வாய்ந்த தட்டுக்களில் நில அதிர்வு ஏற்படுவதற்கு வரலாற்று ரீதியாக பல ஆதாரங்கள் உள்ளன.

ஆண்டொன்றுக்க 45 சென்ரிமீற்றர் அளவிற்கு பூமியின் இரு அடுக்குகள் மனிதர்கள் உணரமுடியாத நிலையில் இப்பகுதியில் நகர்கின்றன.

nebalam 2

எவரெஸ்ட் சிகரத்தில் இருக்கும் சிறிய குன்றுகளில் நில அதிர்வு ஏற்பட இன்றும் அதிக வாய்ப்புக்கள் உள்ளன. அவ்வாறு நில அதிர்வு ஏற்படுமாயின் கடுமையான சேதத்தினை ஏற்படுத்தும் அபாயம் காணப்படுகிறது.

இந்தியத் தட்டுக்களில் இமாலயப் பகுதித் தட்டுக்கள் மிகவும் செயற்திறன் மிக்கவை. அதிலும் இரண்டு அல்லது மூன்றிற்கும் மேற்பட்ட செயற்திறன் வாய்ந்த அடுக்குகள் உள்ளன.

இந்த அடுக்குகள் நகரும் போது கடுமையான நில அதிர்வுகள் ஏற்படும்.

இமாலயப் பகுதியில் வெளி உலகு உணரமுடியாத அளவிற்கு பூமிக்குள்ளே அவ்வப்போது சிறிய நில அதிர்வுகள் ஏற்படுவதுண்டு. அதில் ஏற்படும் சக்திகள் ஒன்றாகத் திரட்டப்பட்டு, இது போன்ற நேரங்களில் சக்தி வாய்ந்த நிலநடுக்கமாக ஏற்படக் கூடும் என்றார்.

இதற்கு முன்னர் ஆய்வுகளை மேற்கொண்ட விஞ்ஞானிகளின் கருத்துப்படி, ரிக்டர் அளவு கோலில் 8 புள்ளிவரை நிலநடுக்கம் ஏற்படும் வாய்ப்பு இருந்தது.

SHARE