நைஜீரியாவில் தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு பெண்கள் குழந்தைகள் உட்பட 38 அப்பாவி பொதுமக்கள் பலி

331
கிறிஸ்தவர்களும், இஸ்லாமியர்களும் சரிசமமாக வாழும் நைஜீரியா நாட்டில் முஸ்லிம் ஆட்சியை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் இங்குள்ள போகோஹாரம் தீவிரவாதிகள் நாசவேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஏராளமான மாணவிகள், சிறுமிகள் மற்றும் இளம்பெண்களை கடத்தி வைத்துள்ள இவர்கள் அரசுக்கு நிபந்தனை விதித்துள்ளனர். இது தவிர நாட்டின் பல பகுதிகளில் அடுக்கடுக்காக மனித வெடிகுண்டு தாக்குதல்களையும் நடத்தி பொதுமக்களை கொன்று குவித்து வருகின்றனர்.

நைஜீரியாவின் புதிய அதிபராக சமீபத்தில் பொறுப்பேற்றுள்ள முஹம்மது புஹாரி இந்த தீவிரவாதிகளை வேட்டையாடும் நடவடிக்கையை விரைவுப்படுத்தியுள்ளார். இருப்பினும் தீவிரவாதிகளின் தாக்குதல்களால் பல அப்பாவி மக்கள் பலியாகி வருவது தொடர் கதையாகியுள்ளது.

இந்நிலையில், கடந்த புதன் கிழமை இரவு முழுவதும் வடகிழக்கு நைஜீரியாவின் டிஃபா மாகாணத்தில் உள்ள லமானா மற்றும் கவுமோ கிராமங்களில் போகோ ஹராம் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல்களில் 14 ஆண்கள், 14 பெண்கள், 10 குழந்தைகள் உட்பட அப்பாவி பொதுமக்கள் 38 பேர் பலியானதாக அந்நாட்டு உள்துறை அமைச்சர் வானொலியில் நேற்று தெரிவித்தார்.

கடந்த ஒருமாதத்தில் போகோஹாரம் தீவிரவாதிகள் நடத்திய வெடிகுண்டு மற்றும் தற்கொலைப்படை தாக்குதலில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர். கடந்த ஆறாண்டுகளில் சுமார் 13 ஆயிரம் கொல்லப்பட்டுள்ளனர். 15 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தங்களது வசிப்பிடத்தை விட்டு வெளியேறியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

SHARE