மலையகத்தில் கடந்த காலங்களில் பத்துக்கும் அதிகமான தீ விபத்துக்கள் தொழிலாளர்கள் வாழும் லயன் தொடர் குடியிருப்புகளில் ஏற்பட்டுள்ளது.
இத் தீ விபத்துக்கள் பொதுவாக மின்சாரம் ஒழுங்கீனம் காரணமாகவே ஏற்பட்டுள்ளதாக அவ்வப்பகுதி பொலிஸ் நிலையங்களில் பதியப்பட்டுள்ளது.
இந்தவகையில் லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாகசேனை குட்டிமலை எனும் தோட்டத்தில் கடந்த 6 மாதங்களுக்கு மேலாக தீப்பற்றி முற்றாக எரிந்த லய தொடர் குடியிருப்பில் வாழ்ந்து வந்த தொழிலாளர் குடும்பங்களுக்கு இதுவரை வீடுகள் அமைத்துக் கொடுக்கப்படவில்லை என பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் புகார் தெரிவிக்கின்றார்கள்.
தீ விபத்து ஏற்பட்டு 6 மாதங்களுக்கு மேலாகியும் வாழ்வதற்காக தற்காலிகமாக குடிமனைகளை அமைத்து வசித்து வருகின்ற இந்த தொழிலாளர்கள் எவ்விதமான வீட்டு சடங்குகளையும் மேற்கொள்ள முடியாத துர்ப்பாகிய நிலைக்கு தள்ளிவிடப்பட்டுள்ளனர்.
கால் நீட்டி நித்திரைக்கொள்ள முடியாத அளவிலான தற்காலிக குடிமனைகளை தோட்ட நிர்வாகத்தின் உதவியுடன் அமைத்துக் கொண்டு வாழும் இந்த மக்கள் தங்களுடைய பிள்ளைகளின் கல்வி நடவடிக்கைளை கூட முன்னெடுக்க முடியாத நிலையில் உள்ளனர்.
அத்தோடு பருவம் அடைந்த பெண் பிள்ளைகளை பராமரிக்கும் சூழ்நிலைகளை இழந்துள்ள நிலையில் திருமணம் வயதுக்குட்பட்ட ஆண், பெண் பிள்ளைகளுக்கு உரிய வேளையில் திருமண வைபவங்களை நிகழ்த்த முடியாத அவல நிலைக்கு தள்ளிவிடப்பட்டுள்ளனர்.
நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்த காலப்பகுதிகளில் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் வாழ்கின்ற குடியிருப்பாளர்களுக்கு புதிய கிராம உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சின் மூலமாக அமைத்துக் கொடுத்து வரப்படும் புதிய வீடமைப்பு திட்டத்தில் குட்டிமலை தொழிலாளர்களும் உள்வாங்கப்பட்டு மழுங்கடிக்கப்பட்ட உரிமையில் இருந்து மீட்டெடுக்க வழிசமைக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட இத்தோட்ட தொழிலாளர்கள் அங்கலாகின்றனர்.
இவர்களின் நிலை உணர்ந்து விரைவில் தனி வீடுகளை அமைத்து இவர்களின் வசிப்பிட உரிமையை மலையக தமிழ் தலைவர்கள் உறுதி செய்ய வேண்டும் என கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளில் பாதிக்கப்பட்ட 20 குடியிருப்பளார்களை சேர்ந்த 100ற்கும் அதிகமானோர் இன்று தற்காலிக குடிமனைகளில் அனுபவிக்கும் குடிநீர் பிரச்சினை, மின்சார ஒழுங்கீன பிரச்சினை மற்றும் ஏனைய அடிப்படை பிரச்சினைகளிலிருந்து விடுப்பட்டு வாழக்கூடிய நிலை உருவாகும் என்பது குறிப்பிடதக்கது.