பயங்கரவாதிகள் எனக் கூறி புலம்பெயர் தமிழர்களை ஒதுக்கத் தாம் தயாரில்லை- வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர,

348

 

புலம்பெயர் தமிழர்கள் பயங்கரவாதிகள் அல்லர்; கொம்பு முளைத்த பேய்களும் அல்லர்; சிவப்புக் குள்ளர்களும் அல்லர் எனக் கூறி எதிர்க்கட்சியின் குற்றச்சாட்டுகளை நேற்று சபையில் அடியோடு நிராகரித்த வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, பயங்கரவாதிகள் எனக் கூறி புலம்பெயர் தமிழர்களை ஒதுக்கத் தாம் தயாரில்லை என்றும் உறுதிபடத் தெரிவித்தார். இலங்கையின் நல்லிணக்கத்தையும், இறைமையையும் பாதுகாத்து ஒன்றுபட்ட நாட்டைக் கட்டியெழுப்ப புலம்பெயர் தமிழர்கள் உள்ளிட்ட அனைத்து புலம்பெயர்ந்தோரும் தயாராக உள்ளனர் எனத் தெரிவித்த வெளிவிவகார அமைச்சர், இலங்கைக்கு வந்து நாட்டைக் கட்டியெழுப்பும் செயற்றிட்டத்துக்கு ஆதரவளிக்கவேண்டும்.

g19 ITI-london-Meeting-300x200

என்றும் பகிரங்க அழைப்பு விடுத்தார். புலம்பெயர் தமிழர்களுடன் இணைந்து செயற்படுவதற்கு எதிர்க்கட்சியினர் தமது ஒத்துழைப்பையும் ஆதரவையும் வழங்கவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார். எதிர்க்கட்சித் தலைவர் நிமால் சிறிபால டி சில்வா நேற்றுமுன்தினம் வியாழக்கிழமை 23/2 ஆம் இலக்க நிலையியற் கட்டளையின்கீழ் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்தபோதே மேற்கண்டவாறு தெரிவித்த அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:- “புலம்பெயர் நாடுகளிலுள்ள இலங்கையர்கள், இங்கு பாடசாலைகளை அமைப்பதற்கும், வீடுகளை நிர்மாணிப்பதற்கும், சுகாதார வசதிகள், வாழ்வாதார நடவடிக்கைகள் ஆகியவற்றை அர்த்தமுள்ளதாக்குவதற்கும் ஒத்துழைப்புடன் செயற்படுவதற்கான காலம் கனிந்துள்ளது. சிங்களம், தமிழ், முஸ்லிம், பேகர் என எமது நாட்டிலிருந்து மக்கள் புலம்பெயர் நாடுகளில் வாழ்கின்றனர்.

புலம்பெயர் தமிழர்கள் என்று கூறப்படுபவர்கள் கொம்பு முளைத்த பேய்களும் அல்லர். ஒரு நாட்டிலிருந்து வெளியேறி வேறொரு நாட்டுக்குச் சென்று குடியேறுபவர்களைத்தான் புலம்பெயர்ந்தோர் என்று கூறுவர். அயர்லாந்து, கிரேக்கம் உள்ளிட்ட பல நாடுகளிலும் புலம்பெயர் சமூகங்கள் உள்ளன. அதுபோல இலங்கையின் மிகப் பிரபலமான – முக்கிய புலம்பெயர் மக்கள் இருக்கின்றனர். இவ்வாறாக, 15 இலட்சம் பேர் புலம்பெயர்ந்தவர்களாக இருக்கின்றனர். சிங்களம், தமிழ், முஸ்லிம் என அனைவரும் இதில் உள்ளடங்குகின்றனர். இலங்கையைச் சேர்ந்த புலம்பெயர்ந்தோர்களில் நாஸா விண்வெளி ஆய்வு மையத்தில் 10 விஞ்ஞானிகள் இருக்கின்றனர். பல நாடுகளிலும் ஆசிரியர்கள், பாடகர்கள், வங்கிகளின் பிரதிநிதிகள் என உயர்பதவிகளை வகிக்கின்றனர். இவர்களைத் தேடிக் கண்டுபிடித்து எமது நாட்டின் அபிவிருத்தியில் பங்கேற்கச் செய்யவேண்டும். மாரவிலவில் வீதியோரத்தில் தையல் கடை வைத்திருந்த இளைஞர் ஒருவர் இன்று பிரான்ஸ் தலைநகர் பரிஸில் 12 மாடிக் கட்டடத்துக்கு உரிமையாளராக இருக்கின்றார். பிரான்ஸின் உத்தியோகபூர்வ ஆடையை வடிவமைக்கும் பிரபல வியாபாரியாகவும் இருக்கின்றார். அதுபோல நியூயோர்க் நகரில் பிரபல ஹோட்டல் விடுதிகளில் தலைமை சமையல்காரர்களாகவும் இலங்கையைச் சேர்ந்த புலம்பெயர்ந்தோர்கள் இருக்கின்றனர். இவ்வாறான நிலையில், புலம்பெயர் தமிழர்களை பயங்கரவாதிகள் எனக் கூறி ஒதுக்குவதற்கு நாம் தயாரில்லை. 3, 4 தடவைகள் புலம்பெயர் தமிழர்களுடன் நாம் பேச்சு நடத்தியுள்ளோம்.

சிறு தரப்பினர் இன்னும் அந்த பிரிவினைவாத நிலைப்பாட்டில்தான் இருக்கின்றனர். ஆனால், பெரும்பான்மையானோர் பிரிக்கப்படாத இலங்கைக்குள் வரவேண்டும் எனக் கூறுகின்றனர். இலங்கையின் நல்லிணக்கம், இறைமையைப் பாதுகாத்து உறுதிப்படுத்தி புனர்நிர்மாண நடவடிக்கைகளை மீளக் கட்டியெழுப்பி, மக்கள் நலனுக்காக அர்ப்பணிப்புடன் செயற்பட புலம்பெயர் இலங்கையர்கள் தயாராக இருக்கின்றனர். அவர்களை அன்புடன் வரவேற்க நாமும் தயாராக இருக்கின்றோம். அனைவரும் இணைந்து இலங்கையை முன்னோக்கிக் கொண்டுசெல்வோம்”

SHARE