பயிற்சி மையத்தில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்து – பரிதாபமாக பலியான 43 பந்தய குதிரைகள்

278
கனடா நாட்டில் உள்ள பயிற்சி மையத்தில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் அங்கு அடைத்து வைக்கப்பட்டிருந்த 43 பந்தய குதிரைகள் உடல் கருகி உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஓண்டாரியோ மாகாணத்தில் உள்ள Puslinch என்ற நகரில் Classy Lane Stables என்ற பந்தய குதிரைகளுக்கான பயிற்சி மையம் ஒன்று அமைந்துள்ளது.

அதிவேக பந்தய குதிரைகளுக்கு இங்கு பயிற்சி அளிப்பதுடன், Mohawk, Woodbine மற்றும் Flamboro Downs ஆகிய பந்தய மைதானங்களில் இக்குதிரைகள் பங்கேற்று வந்துள்ளன.

இந்நிலையில், நேற்று இரவு 11 மணியவில் இந்த மையத்தில் திடீரென தீவிபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

குதிரைகள் உள்ளே தனித்தனி பகுதிகளில் கட்டி வைக்கப்பட்டிருந்ததால், மையத்தை விட்டு வெளியேற முடியவில்லை என தெரிகிறது.

மையம் முழுவதும் தொடர்ந்து தீ ஜுவாலைகள் வேகமாக பரவியதால், தீயணைப்பு வீரர்களுக்கு உடனடி தகவல்கள் கொடுக்கப்பட்டு தீயை அணைக்கும் பணி மும்முரமாக நடந்துள்ளது.

இந்த விபத்து குறித்து பேசிய மைய உரிமையாளரான பார்ப் மில்லர், தீ விபத்து எவ்வாறு ஏற்பட்டது என தெரியவில்லை. எனது கணவர் வெளியூரில் உள்ளதால் அவருக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.

தற்போது வரை சுமார் 43 குதிரைகள் வரை விபத்தில் பலியாகி இருக்கலாம் என தெரிவித்துள்ளார்.

2003ம் ஆண்டு நிறுவப்பட்ட இந்த மையத்தில் சுமார் 222 குதிரைகள் வரை பராமரிக்கப்பட்டு வந்துள்ளது. எனவே, பலியான குதிரைகளின் எண்ணிக்கை அதிகரிக்கவும் வாய்ப்புள்ளதாக தீயணைப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

SHARE