பாகிஸ்தான் அரசு ஒரே நாளில் 12 பேருக்கு தூக்கு…

344

இஸ்லாமாபாத்:பாகிஸ்தான் அரசு, பயங்கரவாதம் மற்றும் கொலை உள்ளிட்ட கொடூர குற்ற செயல்களில் ஈடுபட்ட, 12 பேரை, நேற்று துாக்கிலிட்டது. மரண தண்டனைக்கான தடை நீக்கி கொள்ளப்பட்ட பின், நேற்று தான், முதன்முறையாக அதிகபட்ச குற்றவாளிகளுக்கு துாக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

இதன்படி, கராச்சி, லாகூர், ராவல்பிண்டி, ஜகங், முல்தான், மியான்வாலி, பெய்சலாபாத் மற்றும் குரன்வாலா சிறைகளில், துாக்கை எதிர்நோக்கியிருந்த கைதிகளுக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.பெஷாவரில் ராணுவ பள்ளியில், தலிபான்கள் நடத்திய தாக்குதலில், 150க்கும் மேற்பட்டோர் பலியாயினர். இதில், பெரும்பாலானோர் குழந்தைகள். இந்த தாக்குதலுக்கு பின், பாக்., அரசு, மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை உடனடியாக விலக்கி கொண்டது. இதுவரையில், 39 பேருக்கு துாக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும், 8,000 கைதிகள் துாக்கு தண்டனையை எதிர்நோக்கியுள்ளனர்.

 

முதலில், பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டு வந்தவர்களுக்கு மட்டுமே துாக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. தற்போது, கொடிய குற்றச் செயல்களில் ஈடுபட்ட அனைவருக்கும் துாக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டு வருகிறது.பாகிஸ்தான் அரசு, ஆறு ஆண்டுகளுக்கு பின், துாக்கு தண்டனைக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை விலக்கி கொண்டதற்கு, பல்வேறு அமைப்புகள் வரவேற்பு தெரிவித்துள்ளன. அதேசமயம், சில மனித உரிமை அமைப்புகள், இந்த செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

SHARE