‘பீல்டிங்’ விதிமுறையில் மாற்றம்: ஐ.சி.சி., புது முடிவு

360

பெங்களூரு: ஒருநாள் போட்டிக்கான ‘பீல்டிங்’ கட்டுப்பாடு விதிமுறைகளில் மாற்றம் செய்யப்படலாம் எனத் தெரிகிறது.

பெங்களூருவில், கும்ளே தலைமையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.,) கிரிக்கெட் கமிட்டி கூட்டம் கடந்த இரண்டு நாட்களாக நடந்தது. இதில், ஒருநாள் போட்டிகளில் ‘பீல்டிங்’ கட்டுப்பாடு விதிமுறையில் மாற்றம் கொண்டு வர விவாதிக்கப்பட்டது.

கடந்த 2012ல் ஒருநாள் போட்டிகளில் ‘பீல்டிங்’ கட்டுப்பாடு விதிமுறை அறிமுகமானது. இதன்படி முதல் 10 ஓவரில் உள்வட்டத்துக்கு வெளியே 2 பீல்டர்கள் தான் நிற்க வேண்டும், ‘பேட்டிங் பவர் பிளே’ ஓவரில் உள்வட்டத்துக்கு வெளியே 3 ‘பீல்டர்கள்’  நிறுத்தலாம். ‘பவர் பிளே’ இல்லாத நேரங்களில் உள்வட்டத்துக்கு வெளியே 4 ‘பீல்டர்கள்’ தான் நிற்க வேண்டும் எனத் தெரிவித்தது. இது, பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக அமைந்தது. இதனால் சமீபத்திய உலக கோப்பை தொடரின் போது தோனி, சங்ககரா உள்ளிட்ட சில வீரர்கள், ‘பீல்டிங்’ கட்டுப்பாடு விதிமுறைகளில் மாற்றம் கொண்டு வர  வேண்டும் என விருப்பம் தெரிவித்தனர்.

இதுகுறித்து விவாதித்த போது, ஒருநாள் போட்டிகளில் இரண்டு இன்னிங்சின் கடைசி 10 ஓவரில் தலா 5 பீல்டர்களை உள்வட்டத்துக்கு வெளியே நிறுத்திக் கொள்ள முடிவு செய்திருப்பதாக தெரிகிறது. இது, பேட்ஸ்மேன், பவுலர்கள் இருவருக்குமே சாதகமாக இருக்கும். இதேபோல கிரிக்கெட் கமிட்டி கூட்டத்தில், பேட்ஸ்மேன்கள் பயன்படுத்தும் பேட்டின் எடை, ஒருநாள் போட்டிகளில் ஒரு இன்னிங்சில் இரண்டு புதிய பந்துகளை பயன்படுத்துவது, அம்பயர் தீர்ப்பை மறுபரிசீலனை செய்யும் டி.ஆர்.எஸ்., முறை குறித்தும் விவாதிக்கப்பட்டன. தவிர, ஒருநாள் போட்டியில் ஒரே ஒரு பவுலரை மட்டும் 12 ஓவர் வீச அனுமதிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதுகுறித்து இறுதி முடிவு எடுக்கப்படவில்லை.

இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து, பார்படாசில், வரும் ஜூன் 22–26ல் நடக்கவுள்ள ஐ.சி.சி., ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில் விவாதிக்கப்படும். அதன்பின், புதிய விதிமுறைகள் அறிமுகப்படுத்தப்படும் எனத் தெரிகிறது.

SHARE