இந்தக் குழுவினர், ‘புரசீடிங்ஸ் ஆப் தி நேஷனல் அகாடமி ஆப் சயின்சஸ்’ இதழில் வெளியிட்டுள்ள ஆய்வுக் கட்டுரையின்படி, 140 கோடி ஆண்டுகளுக்கு முன், பூமியில் ஒரு நாளின் கால அளவு வெறும், 18 மணி, 41 நிமிடங்களாகத்தான் இருந்தது.
பிறகு, ஒவ்வொரு ஆண்டும், ஒரு நாளின் நீளம் என்பது, ஒரு நொடியில், 74 பகுதி அளவுக்கு கூடிக்கொண்டே வந்துள்ளது. அப்படியே கூடிக்கொண்டும் இருக்கிறது. ஏனெனில் பூமி சுழலும் வேகம், மெதுவாக, ஆனால் உறுதியாக குறைந்து வருகிறது.
விண்ணியலில் முன்வைக்கப்பட்டுள்ள புதிய கருத்துகள் மற்றும் புவி வேதியியல் முறைகளைப் பயன்படுத்தி இந்த கணக்கைப் போட்டிருக்கின்றனர் விஞ்ஞானிகள். இந்த ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ள இன்னொரு ஆச்சரியம் நிலாவைப் பற்றியது.
பூமியைச் சுற்றிவரும் ஒரே துணைக்கோளான சந்திரன், கடந்த, 140 கோடி ஆண்டுகளில், பூமியிலிருந்து, 44 ஆயிரம் கி.மீ., தொலைவுக்கு விலகிப் போயிருக்கிறது. இந்த விலகல், மேலும் தொடர்வதாகவும் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.