பெங்களூரு: ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில் மேல் முறையீடு செய்வது குறித்து கர்நாடக அமைச்சரவைக் கூட்டத்தில் வியாழக்கிழமை முடிவெடுக்க இருந்த நிலையில், இக்கூட்டம் திடீரென ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

346

 

பெங்களூரு: ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில் மேல் முறையீடு செய்வது குறித்து கர்நாடக அமைச்சரவைக் கூட்டத்தில் வியாழக்கிழமை முடிவெடுக்க இருந்த நிலையில், இக்கூட்டம் திடீரென ஒத்திவைக்கப்பட்டுள்ளது.  ஜெயலலிதா வருகிற 23 ஆம் தேதியன்று பதவியேற்க இருப்பதையொட்டியே இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கலாம் எனத் தெரிகிறது.

சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை விடுதலை செய்து கர்நாடக உயர் நீதிமன்ற சிறப்பு நீதிபதி குமாரசாமி தீர்ப்பு கூறினார். இந்த வழக்கில் அவரது தோழி சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோருக்கும் விடுதலை அளிக்கப்பட்டதோடு, அவர்களுக்கு விதிக்கப்பட்ட அபராதமும் ரத்து செய்யப்பட்டது.

இந்த தீர்ப்பில் கணக்கு பிழை இருப்பதாக கூறி, தீர்ப்பை எதிர்த்து கர்நாடக அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் என்று திமுக, தேமுதிக, பாமக, காங்கிரஸ், மார்க்சிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

இதனிடையே, மேல்முறையீடு குறித்து கருத்து தெரிவித்த கர்நாடக முதல்வர் சித்தராமையா, இந்த தீர்ப்பை எதிர்த்து கர்நாடக அரசு மேல் முறையீடு செய்வது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. இது மிகவும் முக்கியமான வழக்கு என்பதால் அவசரப்பட்டு எந்த முடிவும் எடுக்கமாட்டோம் எனக் கூறியிருந்தார்.

இந்த நிலையில் ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யலாம் என கர்நாடக  அரசின் தலைமை வழக்கறிஞர் ரவிவர்ம குமார்,  கர்நாடக சட்டத்துறை அமைச்சர் ஜெயசந்திராவுக்கு இரு தினங்களுக்கு முன்னர் பரிந்துரை கடிதம் அனுப்பினார்.

அமைச்சரவை கூட்டம் திடீர் ஒத்திவைப்பு

இந்த பரிந்துரை கடிதத்தின் மீது மே 21ஆம் தேதி ( நாளை) நடைபெறும் அமைச்சரவை கூட்டத்தில் விவாதித்து முடிவு எடுக்கப்படும்  என கர்நாடக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால்  முதலமைச்சர் சித்தராமையா மைசூர் செல்ல இருப்பதால் நாளைய கூட்டம் 25 ஆம்  தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் கர்நாடக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்க்கட்சித் தலைவர்கள் அதிர்ச்சி

கர்நாடக அரசின் இந்த திடீர் முடிவு தமிழக எதிர்க்கட்சி தலைவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

வருகிற 22 ஆம் தேதி நடைபெற உள்ள அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் ஜெயலலிதா, அதிமுக சட்டமன்ற தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவார் என்றும், அதனைத் தொடர்ந்து தற்போதைய முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் தனது பதவியை ராஜினாமா செய்வார் என்றும், அதன்பின்னர் மறுநாள் 23 ஆம் தேதி சனிக்கிழமையன்று ஜெயலலிதா முதலமைச்சராக பதவியேற்பார் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதுகுறித்த அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிடப்படவில்லை என்றபோதிலும், பதவியேற்புக்கான ஏற்பாடுகள் சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு மண்டபத்தில் நடைபெற்று வருகிறது. மேலும் ஜெயலலிதா 23 ஆம் தேதி முதலமைச்சராக பதவியேற்க உள்ளார் என்றும், அதில் மாற்றம் ஏதுமில்லை என்றும் அதிமுக செய்தி தொடர்பாளர் சி.ஆர். சரஸ்வதி தெரிவித்துள்ளார்.

ஒத்திவைப்புக்கு காரணம் என்ன?

இதனிடையே மேல்முறையீடு குறித்து முடிவெடுப்பதற்காக நடைபெற இருந்த கர்நாடக அமைச்சரவைக் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதற்கு, முதலமைச்சர் சித்தராமையா மைசூர் செல்ல இருப்பதுதான் காரணம் என அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளபோதிலும், ஜெயலலிதாவுக்கு ஆதரவாக மேற்கொள்ளப்பட்ட சில அரசியல் நடவடிக்கைகளே காரணமாக இருக்கலாம் என கர்நாடக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஜெயலலிதா 23 ஆம் தேதி பதவியேற்பது உறுதியாகிவிட்ட நிலையில், ஒருவேளை ஜெயலலிதா விடுவிக்கப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்வது என்று நாளைய அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டு, அதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் பட்சத்தில், அது ஜெயலலிதா பதவியேற்பதற்கு முன்னரே நெருடலை ஏற்படுத்தி, அது தொடர்பான விவாதங்களைக் கிளப்பக்கூடும்.

விடுதலை தீர்ப்பு அப்பீலுக்கு செல்லும்போது ஜெயலலிதா பதவியேற்பது சரியா? என்ற கேள்வியை தமிழக எதிர்க்கட்சிகள் கிளப்பலாம். எனவே இதனை தவிர்ப்பதற்காகவும், தற்போதைய விடுதலை தீர்ப்பு என்ற இமேஜுடனும்  ஜெயலலிதாவை பதவியேற்க அனுமதிக்க வேண்டும் என்பதற்காகவும் ஜெயலலிதாவுக்கு இன்னமும் விசுவாசமாக உள்ள சில காங்கிரஸ் தலைவர்கள் மூலம் லாபி செய்யப்பட்டு, கர்நாடக அரசின் முடிவு தள்ளிவைக்கப்பட்டிருக்கக் கூடும் என அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன

SHARE