பெண்களின் தொடைகள் ஒரு பிரச்சனை… கமலா வாசுகி:-

394

 

பெண்களின் தொடைகள் ஒரு பிரச்சனை... கமலா வாசுகி:-

பெண்களின் தொடைகள் ஒரு பிரச்சனை
மார்பகங்களோ பாரிய பிரச்சனை
யோனிகள் பற்றிச்
சொல்லவே தேவையில்லை
அதனுள்ளிருந்து வடியும் இரத்தமோ
கேவலத்திலும் கேவலம்.
இவற்றைப் பார்ப்பது பாவம்
இவற்றைப் பற்றிப் (பெண்கள்) பேசுவதோ பெரும்பாவம்
ஒளித்து மறைத்துப் பொத்திப் பொத்தி வைத்து
பேசக்கூடாத விடயமாய் – அசுத்தமாய்
பெண்ணின் உடல் – எனில்
ஆண்டவ(னி)ன் அதியற்புத படைப்பு
தூய்மையின் உறைவிடங்கள்,
ஆண்கள்
அதனுள்ளிருந்து வராதிருக்கட்டும்!!
பெண்ணுள்ளிருந்து பிறக்காதிருக்கட்டும்!!!
பல்லாயிரம ; கோடி மைல்களுக்கு அப்பாலுள்ள
மனிதர் வாழும் இன்னொரு கிரகத்தைக்
கண்டு பிடிப்பதற்கு முன்னர்
இந்த அதியற்புத விஞ்ஞானிகள்
தாங்கள் வாழும் கருப்பை ஒன்றைக் கண்டுபிடிக்கட்டும்
கருப்பையில் தங்காமல்,
யோனிவாய் நுளைந்து – பெண்ணின்
தொடை தொட்டு வெளிவராமல்
மாதவிடாய் இரத்தத்தில் நனையாமல்
வியர்வை மணக்கும் தாயின் மார்பகங்களைச் சூப்பாமல்
தம்மைப் படைத்துக் கொள்ளட்டும்
பெண்ணின் கர்ப்பம் தங்காத
பெண்ணின் கர்ப்பவலி தேவையற்ற
பெண்ணின் இரத்தத்தை சூலகத்திலும் மார்பகத்திலும்
உறுஞ்சாத
ஆணினமொன்று உருவாகச் சபிப்பேன்!
கமலா வாசுகி – 28.12.2015

SHARE