பேராசையால் தீ விபத்தை ஏற்படுத்திய தீயணைப்பு வீரர்

290
பிரித்தானியாவில் போலியான தீ விபத்தை ஏற்படுத்தி ஊதியம் பெற தீயணைப்பு வீரர் ஒருவர் திட்டமிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.பிரித்தானியாவில் ஸ்ரோப்ஷைர் பகுதியில் பகுதி நேர தீயணைப்பு மற்றும் மீட்புப்படை வீரராக பணியாற்றியவர் 32 வயதான டேவிட்.

இவரும் இவரது உடன்பணியாளருமான Kingsley Tolly என்பவரும் இணைந்து சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து 6 வாரங்கள் தீ விபத்தை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது.

இவர்கள் ஏற்படுத்திய தீ விபத்தை இவர்களே சென்று கட்டுக்குள் கொண்டு வந்து அதனால் கிட்டும் ஊதியத்தை பங்கிட்டு எடுத்துள்ளனர்.

பகுதி நேர பணியாளர்களானதால் அதிக வருவாய் ஈட்டுவதற்காக இவர்கள் ஏற்படுத்திய தீவிபத்தினால் விலை உயர்ந்த கார்கள் மற்றும் கேரவன்கள் முற்றாக சேதமடைந்துள்ளது.

இதனால் வாகங்களின் உரிமையாளர்களுக்கு ஆயிரக்கணக்கிலான பவுண்ட் இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இச்சம்பவம் குறித்து சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட அதிகாரிகள் தீவிபத்தை ஏற்படுத்தியது தீயணைப்பு அதிகாரிகளே என கண்டுபிடித்தனர்.

இதனையடுத்து இருவரையும் கைது செய்த பொலிசார் தனியார் சொத்துக்கு சேதம் விளைவித்த குற்றத்திற்காக 5 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றுத் தந்துள்ளனர்.

இதனிடையே Kingsley Tolly நீதிமன்ற விசாரணை, தண்டனைக்கு பயந்து தனது வீட்டின் அருகாமையிலேயே தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

வழக்கு விசாரணையின்போது, தீவிபத்தினை தடுக்கவே பணியில் அமர்த்தப்பட்டவர்கள், அரசால் தங்கள் மீது வைக்கப்பட்டிருந்த நம்பிக்கையை சிதைத்துள்ளதாக நீதிமன்றம் குற்றம் சாட்டியுள்ளது.

கடந்த ஆண்டு இறுதியில் துவங்கி பல கட்ட விசாரணை நடந்து முடிவுக்கு வந்தபின் நீதிமன்றம் 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளது.

SHARE