போர்க்குற்றச்சாட்டுக் குள்ளாகியுள்ள சுமேதா பெரேராவை அரசியலில் களமிறக்க மஹிந்தஅணி முயற்சி

240

 

போர்க்குற்றச்சாட்டுக் குள்ளாகியுள்ள  சுமேதா பெரேராவை அரசியலில் களமிறக்க  மஹிந்தஅணி முயற்சி:-

இராணுவ சேவையிலிருந்து ஓய்வுபெற்றுள்ள- போர்க்குற்றச்சாட்டுக்குள்ளாகியுள்ள மேஜர் ஜெனரல் சுமேதா பெரேராவை அரசியலில் களமிறக்குவதற்குரிய முயற்சியில் மஹிந்த அணி இறங்கியுள்ளது என அறியமுடிகின்றது.

இலங்கை இராணுவத்தில் உள்ள முக்கிய ஆறு இராணுவ தளபதிகளில் ஒருவரான மேஜர் ஜெனரல் சுமேதா கடந்த வெள்ளியுடன் (30) இராணுவ சேவையிலிருந்து ஓய்வுபெற்றார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, முன்னாள்   பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோருடன் இவர் நெருக்கமான தொடர்பை வைத்திருந்தவர்.

சர்வதேச சமூகத்தினால் யுத்தக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்ட தளபதிகளில் மேஜர் ஜெனரல் ஜகத் டயஸ், மேஜர் ஜெனரல் நந்தன உடவத்த பட்டியலில் இவரும் இடம்பெற்றுள்ளார்.

அது மட்டுமல்லாது ஜனாதிபதி தேர்தலில் தோல்வியுற்ற மஹிந்த ராஜபக்ஸ  ராணுவ சதி புரட்சி மேற்கொள்ள திட்டமிட்டதாக வெளியான செய்திகளில் மேஜர் ஜென்ரல் சுமேதா பெரேராவின் பெயரும் இடம்பெற்றிருந்தது.

தற்போதைய இராணுவ தளபதி கிரிஷாந்த டி சில்வாவின் பதவிக்காலம் கடந்த ஒகஸ்ட் 21ஆம் திகதியுடன் நிறைவடையவிருந்தது. இந்நிலையில் அவருக்கு பாதுகாப்பு அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி   மைத்திரிபால சிறிசேன ஒருவருடம் பதவி நீடிப்பு வழங்கி இராணுவ தளபதி பதவியை நீடித்திருந்தார்.

எனினும், அவருக்கு பதவி நீடிப்பு வழங்க முன்னர் அடுத்த இராணுவத்தளபதியாக வருவதற்குரிய அதிக சாத்தியக் கூறுள்ளவர்களாக மேஜர்ஜென்ரல் சுமேதா ஜயசிங்க, மேஜர் ஜென்ரல் கமால் குணரட்ன, மேஜர் ஜென்ரல்  மிலிந்த பீரிஸ், மேஜர் ஜென்ரல் பொனிபஸ் பெரேரா மற்றும் மேஜர் ஜென்ரல் நந்தன உடவத்த ஆகியோர் கருதப்பட்டனர்.

எனினும் இவர்கள் 5 பேரும் இவ்வருடம் 55 வயதை பூர்த்தி செய்து இராணுவ சேவையிலிருந்து ஓய்வு பெறவிருந்தமையாலும், இவர்களுக்கு மஹிந்த தரப்பினரது உறவு வலுவாக இருந்தமையாலும் ஜனாதிபதி இவர்களுக்கு இராணுவத் தளபதி வழங்கவே  ஒருவருட பதவி நீடிப்பை வழங்கவே விரும்பவில்லை.

இதனால், மேஜர் ஜென்ரல்  மிலிந்த பீரிஸ்  கடந்த ஓகஸ்ட் மாதத்துடனும், மேஜர் ஜென்ரல் கமால் குணரட்ன கடந்த செப்டம்பர் மாத ஆரம்பத்திலும் இராணுவ சேவையிலிருந்து ஓய்வு பெற்றிருந்தனர். அதில் கமால் குணரட்னஅண்மையில் புத்தகமொன்றை வெளியிட்டு ராஜபக்ஷர்களுக்கு பெரும் ஆதரவை திரட்டிக் கொடுத்திருந்ததுடன் மறைமுகமாக பல அரசியல் விடயங்களிலும் கலந்து கொண்டு வருகின்றார்.

அத்துடன், நவம்பர் மாதத்தில் மேஜர் ஜென்ரல் பொனிபஸ் பெரேரா மற்றும் மேஜர் ஜென்ரல் நந்தன உடவத்த ஆகியோரும் 55 பூர்த்தி செய்யவுள்ளனர். இவர்களுக்கும் பதவி நீடிப்பு வழங்கப்பட மாட்டாது என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

கடந்த வெள்ளியன்று இராணுவ சேவையிலிருந்து ஓய்வு பெற்ற சுமேதாவுக்கு அண்மையில் நியுயோர்க்கிலுள்ள ஐ.நா.வின் இலங்கை வதிவிட பிரதிநிதியின் பணியகத்துக்கான புதிய இராணுவ இணைப்பதிகாரி பதவி வழங்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், இராணுவ வீரர்களை இணைத்துக் கொண்டு  புது வியூக அரசியலை மேற்கொண்டு வரும் மஹிந்த ஆதரவு பொது எதிரணியினர், மேஜர் ஜென்ரல் சுமேதா பெரேராவையும் தங்களது பயணத்தில்  இணைந்து கொள்ளுமாறு அழைப்பு விடுத்துள்ளது. எனினும், இதற்கு சுமேதா இதுவரை பதில் அளிக்கவில்லை என தெரியவருகின்றது

SHARE