போராளிகள் சோதனைக்குட்படுத்த வேண்டும் – சந்திரநேரு சந்திரகாந்தன்

255

இறுதி யுத்தத்தில் புனர்வாழ்வின் பின்னர் விடுவிக்கப்பட்ட அனைத்து முன்னாள் போராளிகளினதும் பரிசோதனையை மூன்றாம் தரப்பு (வெளிநாட்டு) பிரசன்னத்துடன் அரசாங்கம் செய்து முடித்து, அந்த அறிக்கையை பகிரங்கப்படுத்தப்பட வேண்டும் என்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சந்திரநேரு சந்திரகாந்தன் இன்று தெரிவித்தார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள விஷ ஊசி விவகாரம் தொடர்பிலும் அது தொடர்பான விரைந்த செயற்பாட்டின் முக்கியத்துவம் குறித்து கருத்துத் தெரிவிக்கையிலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சந்திரநேரு சந்திரகாந்தன் கூறினார்.

தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர்,

“விஷ ஊசிகள் விவகாரம் என்பது வெறுமனே விட்டுப் போகக் கூடியதல்ல. நல்லிணக்க அரசாங்கத்தில் வடக்கு கிழக்கில் இராணுவம் கையகப்படுத்தியிருந்த காணி விடுவிக்கப்படுவது, மக்களது பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பதற்காக முயற்சிப்பது, மக்கள் மீதான அடக்கு முறைகள் இல்லாமல் செய்யப்பட்டு வருகின்றமை போன்றவற்றினால் மக்கள் நிம்மதியாக வாழ்கின்றனர் இதை பாராட்டுகிறோம்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அரசாங்கம் மேற்கொள்ளும் மீள்நல்லிணக்கச் செயற்பாடுகள், அரசியலமைப்பு மாற்றம் போன்ற விடயங்களில் கவனம் செலுத்துவதனால் எதிர்காலத்தில் மக்களுக்கு நன்மைகள் இருந்தாலும், பல விடயங்களை முக்கியமாகவும் உன்னிப்பாகவும் கவனிக்க வேண்டிய காலகட்டத்திலேயே இருக்கிறோம்.

அரசாங்கம் உண்மையில் நல்லிணக்கத்தினை வெளிக்காட்ட வேண்டுமாக இருந்தால் வெறுமனே அரசியல் ரீதியாக, அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர் ஒருவர் ஊடகங்களுக்குச் சொல்வதல்ல.

விடுதலைப்புலிகளின் முன்னாள் போராளிகள் போராட்டத்தின் ஒரு அங்கமாக, நீண்டகாலமாக உறுதுணையாக இருந்தவர்கள், அரசியல் ரீதியாகவும் அங்கமாக இருந்தவர்கள். இப்போது உருவாகியுள்ள விஷ ஊசிச் சமாச்சாரம் என்பது வெறுமனே விட்டுப் போகக் கூடியதல்ல.

2009ஆம் ஆண்டு இறுதி யுத்தத்தின் பின்னர் வவுனியாவுக்கு வந்து புனர்வாழ்வு முகாம்களில் தங்க வைக்கப்பட்டு 12 500 வரையான போராளிகள் புனர்வாழ்வின் பின்னர் விடுவிக்கப்பட்டிருந்தனர். அவர்களில் பெரும்பாலானோர் வடக்கு கிழக்கிலும் நாட்டின் பலபகுதிகளிலும் வாழ்ந்து வருகின்றனர்.

விஷ ஊசி என்பது மாவட்ட ரீதியாக ஒவ்வொரு பிரதேச செயலக ரீதியாக மருத்துவப் பரிசோதனை செய்யப்பட வேண்டும். வெறுமனே கவனிப்போம். அவதானிப்போம் என்று சொல்வதனையும் விட அனைத்து போராளிகளது பரிசோதனையையும் மூன்றாம் தரப்பு (வெளிநாட்டு) பிரசன்னத்துடன் அரசாங்கத்தினால் செய்யப்பட வேண்டும்.

போராளிகள் புனர்வாழ்வு, மறுவாழ்வு, வீடுகளைக் கொடுத்துப் பிரயோசமனமில்லை. அவர்களது உயிரைக் காப்பாற்றுவதற்காக, கடந்த அரசாங்கத்தின் மகிந்த தரப்பு செய்த மிகமோசமான செயற்பாட்டினை வெளிக் கொணர்வதற்கும், உண்மையை வெளிப்படுத்துவதற்கும் நல்லிணக்க அரசாங்கம் முன்வர வேண்டும்.

இதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். ஒவ்வொரு பிரதேச செயலாளரிடமும், இராணுவப் புலனாய்வுப் பிரிவினரிடம் என்று அனைவரிடமும் இவர்களுடைய விபரங்கள் இருக்கின்றன. எல்லோரையும் ஒன்று சேர்த்து இரத்தப் பரிசோதனை செய்யப்பட வேண்டும்.

இதன் அறிக்கை பகிரங்கப்படுத்தப்பட வேண்டும். தனிப்பட்ட ரீதியாக பூட்டிய அறைக்குள் செய்யப்படுவதில் பலன் இல்லை. ஒவ்வொரு போராளியும் ஏதோ ஒரு வகையில் மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

மகிந்த தரப்பு மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றிக் கொள்ள சகல விதமான முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது. இந்த இடத்தில் அவர்களது முயற்சிக்கான முறியடிப்பு, அரசியலமைப்புத் திருத்துதல் எவ்வளவுக்கு முக்கியமோ அதனைவிடவும் இந்த போராளிகளின் விஷ ஊசி விவகாரமும் முக்கியத்துவம் மிக்கதாகும்.

திருகோணமலை மாவட்டத்தின் குமரபுரம் பகுதியில் கடந்த 1996ஆம் ஆண்டு இடம்பெற்ற படுகொலையில் 26 பேர் உயிரிழந்தனர். ஆனால் அதில் குற்றம் சாட்டப்பட்டிருந்தவர்கள் தற்போது விடுவிக்கப்பட்டிருக்கிறார்கள்.

இவ்வாறிருக்கின்ற நிலையில் போராளிகள் மீது புனர்வாழ்வு என்ற பெயரில் விஷ ஊசி ஏற்றப்பட்டிருக்கலாம் என்று எழுந்துள்ள சந்தேகம் நிவர்த்தி செய்யப்பட வேண்டும். அதுவெளிப்படையாக மேற்கொள்ளப்பட்டு அறிக்கை வெளியிடப்படுவது காலத்தின் கட்டாயமாகும்.

கடந்த அரசாங்கம் பல மறைமுகமான நாசகார வேலைகளை செய்திருக்கிறது. பல மூத்த போராளிகளை மறைமுகமாக கொலை செய்திருக்கிறது. ஆகையினால் உடனடியாக விசாரணை நடத்தி உண்மைத் தன்மையினை உலகத்திற்கு வெளிப்படுத்த வேண்டியது அரசாத்தின் கடமை.

குறைந்த பட்சம் செஞ்சிலுவைச் சங்கத்தின் உதவியுடனாவது மருத்துவ முகாம் அமைத்து இதன் உண்மையைக் கண்டறிவதற்கான வேலைத்திட்டத்தினை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்றார்.

SHARE