போரை காட்டி திருடியவர்களை காப்பாற்ற விரும்பவில்லை

249

 

போர் நடைபெற்ற காலத்தில் போர் என்ற போர்வைக்குள் இருந்து கொண்டு கொள்ளையிட்டவர்களை தற்போதைய அரசாங்கம் காப்பற்ற தலையீடுகளை மேற்கொள்ளாது என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் தெரிவித்துள்ளார்.

கொலன்னாவ பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

2009 ஆம் ஆண்டு மே மாதம் 19 ஆம் திகதி யுத்தத்தை முற்றாக முடிவுக்கு கொண்டு வந்ததாக கடந்த அரசாங்கத்தில் அங்கம் வகித்தவர்கள் கூறுகின்றனர்.

யுத்தம் முற்றாக முடிவுக்கு கொண்டு வரப்பட்டது என்று நம்பினால், சத்தமிட தேவையில்லை.

குறிப்பாக உதய கம்மன்பில புலி வருகிறது புலி வருகிறது என சத்தமிடுகிறார். படையினர் வேட்டையாடப்படுகின்றனர் என்கிறார்.

2015 ஆம் ஆண்டு ஜனவரி 9 ஆம் திகதிக்கு பின்னர் விடுதலைப்புலிகள் அமைப்புடன் மோதலில் ஈடுபட்டனர் என்பதற்காகவா படையினர் கைது செய்யப்பட்டனர்?.

அல்லது புலிகளின் ஆயுதங்களை எரித்து, வடக்கு கிழக்கை படையினர் கைப்பற்றினர் என்பதற்காக எமது அரசாங்கம் படையினரை கைது செய்ததா என கேட்கவிரும்புகிறேன்.

தற்போதைய அரசாங்கம் போரில் ஈடுபட்ட படையினருக்கு கௌரவத்தை வழங்கும் அரசாங்கம். ஆனால், போருக்கு மத்தியில் கொள்ளையிட்டவர்களை காப்பற்ற அரசாங்கம் விரும்பவில்லை.

போர் என்ற போர்வையில் லசந்த, பிரகீத், தாஜூடீன் போன்றவர்களை கொன்றவர்கள், மற்றும் கடத்தியவர்கள் இருக்கின்றனர்.

தங்கத்தை திருடிவர்கள் உள்ளனர். மிக் விமான கொடுக்கல் வாங்கலில் ஈடுபட்டவர்கள் உள்ளனர்.

யுத்தம் என்ற போர்வையில் கொள்ளையில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காவிட்டால், உண்மையில் யுத்தம் செய்த படையினருக்கு செய்யும் அவமதிப்பாகும் எனவும் எஸ்.எம். மரிக்கார் குறிப்பிட்டுள்ளார்.

SHARE