போர்ட்சிற்றி திட்டம் திருத்திய ஆவணத்தில் கைச்சாத்திட சீனா செல்கிறார் பிரதமர்

267
கொழும்பு துறைமுக நகரத் திட்டத்தின் (போர்ட் சிற்றி) பணிகள் தொடர்பாக திருத்தியமைக்கப்பட்ட புதிய ஆவணத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அடுத்த வாரமளவில் கைச்சாத்திடவுள்ளார்.இதற்காக பிரதமர் ரணில் விக்கி ரமசிங்க அடுத்த வாரம் சீனாவுக்கான உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ள உள்ளதாக பிரதமரின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இதற்கமைய சீனாவிலுள்ள போர்ட் சிற்றி திட்டத்தை முன்னெடுக்கும் நிறுவனம் மற்றும் அரச அதிகாரிகளை எதிர்வரும் 15ஆம் திகதி சந்திக்கவுள்ள பிரதமர் திட்டத்தின் அடுத்தகட்டம் குறித்து பேச்சு நடத்தவுள்ளார்.
கொழும்பு துறைமுக நகரத் திட்டத்தின் பெயரை ஸ்ரீலங்கா முதலீட்டு நகரத் திட்டம் என்று பெயர்மாற்றம் செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியிருக்கின்றது.
குறித்த திட்டத்தின் நிர்மாணப் பணிகள் பல்வேறு காரணங்களினால் நிறுத்திவைக்கப்பட்டுள்ளதால் ஏற்பட்டுள்ள நஷ்டத்தை ஈடுசெய்யுமாறு சம்பந்தப்பட்ட நிறுவனம் அரசாங்கத்திடம் வலியுறுத்தியிருந்தது.
இதனைக் கருத்திற்கொண்ட அரசாங்கம், போர்ட் சிற்றி திட்டத்திற்கு மேலும் இரண்டு ஏக்கர் நிலப்பகுதியை வழங்குவதற்கு இணக்கம் வெளியிட்டிருந்தது.
கொழும்பு காலிமுகத்திடல் பகுதியில் துறைமுகத்திற்கு அண்மையில் சுமார் 233 ஏக்கர் பகுதியில் போர்ட் சிற்றி திட்டத்தை ஆரம்பிப்பதற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச சீனாவுடன் ஒப்பந்தம் செய்துகொண்டார்.
எனினும் கடந்த 2015ஆம் ஆண்டு ஏற்பட்ட ஆட்சிமாற்றத்தின் பின் ஆட்சிக்குவந்த நல்லாட்சி அரசாங்கம் அத்திட்டத்திற்கு எதிராக எழுந்த எதிர்ப்பலைகளினால் நிர்மாணப் பணிகளை இடைநிறுத்தியிருந்தது.
எனினும் குறித்த திட்டம் மீள ஆரம்பிக்கப்படும் என நல்லாட்சி அரசாங்கம் கூறிவந்த நிலையிலேயே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அதுகுறித்த பேச்சுக்களை நடத்தும்பொருட்டு சீனா செல்லவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
SHARE