போலீஸ் கையில் சிக்காமல் திருடிய கணவன்–மனைவி.

341

சென்னையில் பட்டப்பகலில் வீடுபுகுந்து கொள்ளை அடித்த கணவன்–மனைவி 400 சவரன் நகைகளுடன் கைது செய்யப்பட்டனர். 5 வருடங்கள் போலீஸ் கையில் சிக்காமல், அவர்கள் மிகவும் சாதுர்யமாக செயல்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக தென் சென்னை இணை கமிஷனர் அருண் நேற்று மாலை நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:–

தொடர் கொள்ளை
தென் சென்னைக்குட்பட்ட சைதாப்பேட்டை,குமரன்நகர்,தியாகராயநகர், மாம்பலம்,விருகம்பாக்கம் ஆகிய பகுதிகளில் பகல் நேரங்களில் பூட்டை உடைத்து தொடர் கொள்ளைச்சம்பவங்கள் அடிக்கடி நடந்தது.

குறிப்பாக சைதாப்பேட்டை கவரை தெரு,பெருமாள் கோவில் தெரு,கொத்தவால் சாவடி தெரு ஆகிய இடங்களில் கடந்த வாரம் செவ்வாய்,புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் தொடர்ச்சியாக 4 வீடுகளில் பகல் நேரத்தில் திருட்டு நடந்தது.அந்த 4 வீடுகளிலும் ஒரே நபரின் கைரேகை பதிவாகி இருந்தது.

மேலும் அந்த வீடுகளில் திருட்டு நடந்த முறை எங்களுக்கு ஆச்சரியத்தை கொடுத்தது.அந்த வீடுகளில் நகைகள்,ரொக்கப்பணம்,வெள்ளி பொருட்கள்,பெண்கள் பயன் படுத்தும் சேலை,பவுடர், லிப்ஸ்டிக் மற்றும் டி.வி போன்ற பொருட்கள் கொள்ளை போய் இருந்தது.ஒரு வீட்டில் சமையல் கியாஸ் சிலிண்டர் கூட திருடப்பட்டு இருந்தது. திருட்டு நடைபெற்ற வீட்டின் அருகில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவில் ஒரு ஆணும்,பெண்ணும் வீட்டுக்குள் இருந்து வருவது போன்ற காட்சி பதிவாகி இருந்தது.

வாகன சோதனை
இதனால் இந்த திருட்டு சம்பவங்களில் ஒரு ஆணும்,பெண்ணும் சம்பந்தப்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகம் வந்தது.பகல் நேரத்தில் திருட்டு நடந்ததால் அந்த பகுதியில் 8 இடங்களில் வாகன சோதனை நடத்த ஏற்பாடு செய்தோம். சைதாப்பேட்டை கவரை தெரு,பெருமாள் கோவில் தெரு சந்திப்பில் சப்–இன்ஸ்பெக்டர் ஆரோக்கியம் தலைமையில் பெண் போலீஸ் ஏட்டு சோபனா உள்ளிட்ட தனிப்படை போலீசார் வாகன சோதனை நடத்தினார்கள். இந்த வாகன சோதனையின் போது மோட்டார் சைக்கிளில் வந்த கணவன்–மனைவியை மடக்கி சந்தேகத்தின் பேரில் விசாரணை நடத்தினார்கள்.

விசாரணையில் அவர்கள் முரணான தகவல்களை தெரிவித்தனர். அவர்கள் வந்த மோட்டார்சைக்கிள் பெட்டியை திறந்து சோதனை போட்டபோது. அதற்குள் பூட்டை உடைக்க பயன்படும் பேட்டரியில் இயங்கும் கட்டிங் மெஷின், ஸ்குரு டிரைவர் போன்ற பொருட்கள் இருந்தன. எனவே அவர்கள் இருவரையும் பிடித்து விசாரணை நடத்திய போது, அவர்கள்தான் பகல் நேரத்தில் பூட்டை உடைத்து வீடு புகுந்து திருடிய கொள்ளையன் மற்றும் கொள்ளைக்காரி என்று தெரிய வந்தது.

கர்ணபிரபு–சவுமியா
அவர்கள் பெயர் கர்ணபிரபு (வயது 30),சவுமியா(30) என்று தெரிய வந்தது.கணவன்–மனைவியான அவர்கள் காதல் திருமணம் செய்தவர்கள் என்று கண்டறியப்பட்டது.

கர்ணபிரபு ஆந்திர மாநிலம் விஜயவாடாவை சேர்ந்தவர்.10–வது வகுப்பு வரை படித்துள்ளார்.சவுமியா சென்னையில் பிறந்தவர்.பிளஸ்–2 படித்தவர்.இவர்கள் நீலாங்கரை இஸ்கான் கோவிலில் சந்தித்து காதலை வளர்த்துள்ளனர்.இவர்களுக்கு அரவிந்தன் என்ற 4–வது வகுப்பு படிக்கும் மகன் இருக்கிறான்.

இவர்கள் ஆரம்பத்தில் ஊதுவத்தியை வீடு,வீடாக எடுத்துச்சென்று விற்பனை செய்து பிழைப்பு நடத்தி இருக்கிறார்கள்.கடந்த 2010–ம் ஆண்டில் தியாகராயநகரில் ஒரு வீட்டில் ஊதுவத்தி விற்க சென்ற போது,அந்த வீடு கதவு பூட்டாமல் திறந்து கிடந்துள்ளது.வீட்டில் ஆள் இல்லை.உடனே அந்த வீட்டுக்குள் இருந்த பை ஒன்றை திருடி வந்துள்ளனர்.அந்த பைக்குள் 7 சவரன் நகைகள் மற்றும் ரூ.35 ஆயிரம் ரொக்கப்பணம் இருந்துள்ளது.

இதுதான் இவர்கள் நடத்திய முதல் திருட்டு.அதில் இருந்து ஊதுவத்தி விற்பது போல சென்று பூட்டிக்கிடக்கும் வீடுகளில் புகுந்து கொள்ளை அடிப்பதை ஒரு தொழிலாக செய்யத்தொடங்கி விட்டனர்.இதுவரை 22 வீடுகளில் திருடி இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

மகனை பள்ளியில் விட்டுவிட்டு…
இவர்கள் திருட்டு தொழிலில் சம்பாதித்த பணத்தில் சென்னை ராமாபுரம்,பாலாம்பிகா நகரில் மாதம் ரூ.11,500 வாடகையில் ஆடம்பர வீட்டில் வாழ்ந்தனர். காலை 8 மணிக்கு மகனை கான்வென்ட் பள்ளியில் படிக்க விட்டு,விட்டு கொள்ளை தொழிலுக்கு கணவன்–மனைவி இருவரும் புறப்பட்டு விடுவார்கள்.

கட்டிங் மெஷின் மூலம் பூட்டை உடைத்து கர்ணபிரபு வீட்டுக்குள் சென்று திருடுவார்.சவுமியா வீட்டுக்கு வெளியில் நின்று கண்காணிப்பார்.ஆள் யாராவது வந்தால் செல்போன் மூலம் பேசி,வீட்டுக்குள் திருடிக்கொண்டிருக்கும் கர்ணபிரபுவை,சவுமியா உஷார்படுத்துவார்.

திருடிய பொருட்களை சாக்கு மூட்டையாக கட்டித்தான் இவர்கள் எடுத்து செல்வார்கள்.இவர்கள் மீது விசாரணை நடத்த,துணை கமிஷனர் கண்ணன்,உதவி கமிஷனர் தம்புசாமி, இன்ஸ்பெக்டர்கள் விஜயராமுலு,கோதண்டராமன்,கங்கேஸ்வரன்,கோவிந்தராஜ் ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

தனிப்படை போலீசார் கர்ணபிரபு,சவுமியா வசிக்கும் வீட்டில் சோதனை போட்டனர்.அங்கு கட்டில் மெத்தைக்கு அடியிலும்,டி.வி.பெட்டிக்கு பின்புறமும் பதுக்கி வைத்திருந்த 210 சவரன் தங்க நகைகளை மீட்டனர்.மேலும் 11 விலை உயர்ந்த செல்போன்கள்,10 கிலோ வெள்ளிப்பொருட்கள்,ரூ.25 ஆயிரம் ரொக்கப்பணம் ஆகியவற்றையும் சோதனை நடத்திய தனிப்படை போலீசார் மீட்டனர்.3 மோட்டார் சைக்கிள்களும் இவர்களிடம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

அடகு வைத்த 200 சவரன் நகைகள்
கொள்ளை அடித்த நகைகளில் 200 சவரன் நகைகளை 12 அடகு கடைகளில் அடகு வைத்து பணம் பெற்றுள்ளனர். இதற்கான 74 அடகு ரசீதுகளை கைப்பற்றி உள்ளோம்.விரைவில் அந்த நகைகளும் மீட்கப்படும்.இந்த வழக்கில் திருட்டு கொடுத்த நகைகள் அப்படியே பாதிக்கப்பட்டவர்களுக்கு திரும்ப கொடுக்கப்படும்.சென்னை நகரில் முதல் முதலாக கணவன்–மனைவி சேர்ந்து சென்று இதுபோல் கொள்ளை அடிக்கும் தொழிலை செய்து,போலீசில் மாட்டி இருக்கிறார்கள்.

கர்ணபிரபுவின் கைரேகை கொள்ளை நடந்த வீடுகளில் பதிவாகி உள்ளது.அது உறுதி செய்யப்பட்டு உள்ளது.இவர்களிடம் நகைகளை திருட்டு கொடுத்த பெண் ஒருவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.அந்த பெண்ணை அழைத்து நீங்கள் திருட்டு கொடுத்த 35 சவரன் நகைகள் திரும்ப கிடைத்து விட்டது என்று தெரிவித்தோம். இந்த கொள்ளை தம்பதியை பிடித்த தனிப்படை போலீசாரை கமிஷனர் ஜார்ஜ் பாராட்டி உள்ளார்.

இவ்வாறு இணை கமிஷனர் அருண் தெரிவித்தார்.

பேட்டியின் போது,துணை கமிஷனர் கண்ணன்,உதவி கமிஷனர் தம்புசாமி ஆகியோர் உடன் இருந்தனர்.மீட்கப்பட்ட நகைகள் மற்றும் பொருட்கள்,திருட பயன்பட்ட கட்டிங் மெஷின் போன்ற பொருட்களும் நேற்று மாலை சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டன.Chennai

SHARE