மகிந்த அணியை களையெடுக்கும் அடுத்த நகர்வு

371

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழுவின் சிறப்புக் கூட்டம் இன்று பிற்பகல் 2 மணிக்கு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் அதிகாரபூர்வ இல்லத்தில் நடைபெறவுள்ளது.

கட்சியின் தலைவரான மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெறவுள்ள இந்தக் கூட்டத்தில், கட்சி ஒழுக்கத்தை மீறிச் செயற்படும் உறுப்பினர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது குறித்து தீர்மானிக்கப்படவுள்ளது.

குறிப்பாக, உள்ளூராட்சி சபைகளின் முன்னாள் பிரதிநிதிகள் பலருக்கு எதிராகவும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சுதந்திரக் கட்சியின் தலைமை, கொள்கைகளுக்கு எதிராக பேசியும் செயற்பட்டும் வருகின்ற மகிந்த ராஜபக்ச ஆதரவு உள்ளூராட்சி சபைகளின் முன்னாள் பிரதிநிதிகள் மீதே ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.

ஏற்கனவே, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தொகுதி மற்றும் மாவட்ட அமைப்பாளர்கள் மத்தியில் இருந்து மகிந்த ராஜபக்ச ஆதரவாளர்களை மைத்திரிபால சிறிசேன களையெடுத்து வருகிறார்.

அடுத்த கட்டமாக, உள்ளூராட்சி மட்டத்தில் மகிந்த ஆதரவு அணியினர் மீது அவர் நடவடிக்கைகளை எடுக்கவுள்ளார்.

இதற்கிடையே, தமது ஆதரவாளர்களான பிரசன்ன ரணதுங்க, காந்தி கொடிகார, திலும் அமுனுகம, துமிந்த சில்வா, சேனாரத் ஜெயசுந்தர உள்ளிட்டோர் தொகுதி அமைப்பாளர் பதவிகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளது குறித்து மகிந்த ராஜபக்ச அதிர்ச்சி வெளியிட்டுள்ளார்.

இந்த நிலையில், சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் இன்றைய மத்திய குழுக் கூட்டத்தில் மகிந்த அணியினருக்கு எதிரான முக்கிய நடவடிக்கைகள் குறித்து தீர்மானிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

SHARE