மக்கள் தொகை பிரச்சனையில் மயங்கி நிற்கும் சீனா

285
குழந்தை பெறுவது அதிகமானால், ஆட்களுக்கு உணவு போதவில்லை, குழந்தை பெறுவதை குறைத்தால், உழைப்பதற்கு ஆட்கள் போதவில்லை என மக்கள் தொகை பிரச்சனையில் சிக்கித்தவிக்கிறது சீனா. வரும் ஜனவரி 1 முதல் ஒரு தம்பதி இரண்டு குழந்தை வரை பெற்றுக் கொள்ளலாம் என சீனாவில் புதிய சட்டம் அமுலுக்கு வருகிறது. இதற்கு காரணம், 1978 முதல் ஒரு தம்பதியினர் ஒரு குழந்தைதான் பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற சட்டம் இருந்து வந்தது. அது பல சர்ச்சைகளை ஏற்படுத்தியது. மனித உரிமை ஆர்வலர்கள் மத்தியிலும் விமர்சிக்கப்பட்டு வந்தது. இப்போது இரண்டு குழந்தைகள் வரை பெற்றுக்கொள்ள விதி தளர்த்தப்பட்டுள்ளது. அங்குள்ள அனைவரையுமே இது மகிழ்ச்சியடைய வைத்துள்ளது. ஆனாலும், பல தசாப்தங்கள் கழித்தே இதன் சாதக பாதக விளைவுகளை புரிந்துகொள்ள முடியும்.

மக்கள் தொகை மீதான சீனாவின் பல்வேறு மனநிலைகள்

சீனாவில் 1949 ல் மாவோ சீன கம்யூனிச கட்சிஆட்சிக்கு வந்தது. அப்போதே சீனாவின் மக்கள்தொகை 50 கோடியை தாண்டியிருந்தது. ஆனாலும், அரசு அதற்காக வருந்தவோ, தடுக்க திட்டம் வகுக்கவோ இல்லை. மாறாக, மக்கள் பெருக்கத்தை, உலகில் சீனாவின் தனித்துவமான பலமாகவே கருதியது. 1950 க்கு பிறகு சீனாவில் ஏற்பட்ட மழை, வெள்ளத்தால் மக்கள் பெரிதாக பாதிக்கப்பட்டனர். வெள்ளம் வடிந்த பிறகும் பஞ்சம் தலைவிரித்தாடியது. எல்லா மக்களுக்கும் அரசால் உணவளிக்க முடியவில்லை. மருத்துவ சுகாதார வளர்ச்சியால் இறப்பு விகிதம் குறைந்து. பிறப்பு விகிதம் மட்டும் அதிகரித்திருந்தது.

மக்கள் பெருக்க விளைவுகளின் சுயரூபத்தை அரசு அப்போதே உணர்ந்தது. ஆனாலும், அதை தடுக்கும் நடவடிக்கைகளில் பெரிதாக இறங்கவில்லை.

1970 களில் மக்கள் தொகை, 80 கோடியை எட்டியிருந்தது. வெள்ளம் ஏற்படாமலே பிரச்சனைகள் விஸ்வரூபம் எடுத்தது.

நுகர்வு அதிகமாகவும் உற்பத்தி குறைவாகவும் இருந்ததால் உணவு, உடை, இருப்பிடம், கல்வி, வேலைவாய்ப்பு என எல்லா அடிப்படை விடயங்களிலும் அரசால் மக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய முடியவில்லை.

மக்கள் பெருக்கத்தை தடுக்கும் முதல் நடவடிக்கையாக, விழிப்புணர்வு ஏற்படுத்த ‘Late, Long and Few’ என்ற வாசகத்தை அறிமுகப்படுத்தியது.

அதாவது, தாமதமான திருமணம், குழந்தைகளுக்கு இடையே நீண்ட இடைவெளி, ஓரிரு குழந்தைகள் மட்டுமே பெறுதல் என்ற விளக்கத்தின் சுருக்கமே அது, குடும்ப கட்டுப்பாட்டையும் ஊக்குவித்தனர்.
மாவோ மறைவிற்கு பிறகு 1976 ல் டெங் ஜியோபிங் ஆட்சிக்கு வந்தார்.

சீனாவை உலக அளவில் வல்லரசாக்க வேண்டும், அதற்கு சீன மக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்று கூறிய அவர், அதற்கு தடையாக இருப்பது மக்கள்தொகைதான்.

அது தனிநபர் குடும்ப வறுமானத்தையும் பாதித்து, நாட்டின் மொத்த வளர்ச்சிக்கும் முட்டுக்கட்டையாக இருக்கிறது என்றார்.

அந்த எண்ணத்தின் வெளிப்பாடாகவே 1978 ல் ‘ஒரு தம்பதி ஒரு குழந்தை திட்டம்’ அறிமுகமானது. அந்த திட்டத்துக்கு ஒத்துழைத்தவர்களுக்கு அரசு பல சலுகைகளை வழங்கியது.

பள்ளி கல்லூரிகளில் முன்னுரிமை, வங்கிக் கடன், மானியங்கள், அரசு ஊழியர் குழந்தைகளுக்கு 14 வயது வரை சம்பளத்துடன் ஊக்கத்தொகை என பல சலுகைகளை வழங்கியது.

கருப்பு குழந்தைகள்

ஒன்றுக்கு மேல் பெறுபவர்களுக்கு சிறை தண்டனைகள் வழங்கியது. ஒரு கோடி குழந்தைகளுக்கு மேல் கட்டாய கருக்கலைப்பு செய்தது. அதையும் மீறி பிறந்த குழந்தைகளை ’கருப்பு குழந்தைகள்’ என குடியுரிமை இல்லாமல் அகதிகளைவிட கீழ்த்தரமாக நடத்தியது.

அந்த குழந்தைகளுக்கு பிறப்புச் சான்றிதழ் இல்லை, பள்ளிகளில் இடமில்லை, சொந்த வீடுவாங்க மறுப்பு, வேலைவாய்ப்பு மறுப்பு, சட்ட உரிமைகளே மறுக்கப்பட்டது.

இதனால், மனித உரிமைகள் அமைப்புகளின் கடும் கண்டனங்களுக்கும் அரசு ஆளானது.

இப்படியான கருப்பு குழந்தைகள் கொஞ்சமல்ல, 2010 ம் ஆண்டின் கணக்குப்படி 130 லட்சமாகும். அது சில நாடுகளின் ஜனத்தொகையைவிட அதிகமாகும்.

இப்படி தடுத்தாலும் 1980 களிலேயே 98 கோடி இருந்ததால், இப்போது 137 கோடி மக்கள் என உலகில் முதல் இடத்தில்தான் உள்ளது. கடுமையான சட்டத்தால் 37 ஆண்டுகளில் 40 கோடி மக்களை குறைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இரண்டு குழந்தை திட்டம்

சீனா மீண்டும் 2 குழந்தை திட்டத்தை அறிமுகப்படுத்த காரணம். இப்போது சீனாவில் 60 வயதை கடந்தவர்களே 21 கோடி பேர் உள்ளனர். இதனால், வேலையாட்கள் பற்றாக்குறை, உற்பத்தி பாதிப்பு ஏற்படுகிறது.

ஆண், பெண் பாலின விகிதாச்சாரத்திலும் வேறுபாடு ஏற்படுவதால் திருமண சிரமமும் ஏற்படுகிறது.

மேலும், 2008 ல் சிச்சுவான் மாகாணத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 70,000 மக்கள் மடிந்தனர். இதில் 10,000 குழந்தைகளும் அடங்கும்.

ஒரு குழந்தையையும் இழந்துவிட்டு வாரிசு இல்லாமல் நிற்கதியானவர்கள் பலர்.

இதன் தாக்கமும் அரசை சிந்திக்க வைத்துள்ளது. 13 மில்லியன் தம்பதியர் இரண்டாவது குழந்தை பெற்றுக்கொள்ள இந்த சட்டத்தால் தயாராக உள்ளனர்.

கருப்பு குழந்தைகளும் இப்போது குடியுரிமை குழந்தைகளாக மாறுகின்றனர்.

இந்த இரு குழந்தை திட்டத்திலும் மனித உரிமை அமைப்பினர் திருப்தியடையவில்லை. மூன்றாவதாக தப்பித் தவறி பிறக்கும் குழந்தைக்கு பழைய கொடிய விதிமுறைகள் பொருந்தும் அதைப்பற்றி அரசு எதுவும் இப்போது தெரிவிக்கவில்லை.

மேலும், எந்த நிமிடமும் ஒரு குழந்தைகள் போதும் என அரசு பழைய முடிவுக்கும் வரலாம். எத்தனை குழந்தைகள் பெறுவது என்பதை அந்த தம்பதிகளே தீர்மானிக்க வேண்டும் என அதிருப்தியை கூறுகின்றனர்.

சீனாவில் மட்டுமல்ல பல நாடுகளில் ஆட்சியாளர்கள் இருக்கிறார்கள். ஆனால், ஆட்சிசெய்ய தெரிந்தவர்களாக இல்லை. இவர்கள் செருப்பையும் சிறிதாக செய்துவிட்டு, அதை பொருத்த கால்களை நறுக்க கட்டளையிடுவது போலவே செயல்படுகிறார்கள்.

மருசரவணன்.

SHARE