மட்டக்களப்பில் பெய்துவரும் மழையினால் உடைந்துள்ள இரண்டு அணைக்கட்டுகளை விரைவாக திருத்தியமைக்க நடவடிக்கை

259

மட்டக்களப்பில் பெய்துவரும் மழையினால் உடைந்துள்ள இரண்டு அணைக்கட்டுகளை விரைவாக திருத்தியமைக்க நடவடிக்கையெடுக்குமாறு நீர்ப்பாசன திணைக்களத்திற்கு கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராஜசிங்கம் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.

625.0.560.320.160.600.053.800.668.160.90 (1) 625.0.560.320.160.600.053.800.668.160.90 (2) 625.0.560.320.160.600.053.800.668.160.90 (3)

மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர்ப்பற்று பிரதேசத்திற்குட்பட்ட மாவடியோடை அணைக்கட்டு மற்றும் கிரான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கிரான்புல் அணைக்கட்டு ஆகியன உடைப்பெடுத்துள்ள நிலையில் அவற்றினை கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராஜசிங்கம் மற்றும் நீர்ப்பாசன திணைக்கள அதிகாரிகள் நேரில் சென்று பார்வையிட்டுள்ளனர்.

உறுகாமம் நீர்ப்பாசனத்திற்குட்பட்ட பகுதியில் 2014.5 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதன் காரணமாக நீர் ஓட்டத்தின் வேகம் அதிகரித்து குறித்த அணைக்கட்டுகள் உடைப்பெடுத்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

மாவடியோடைப்பாலம் புதிதாக அமைக்கப்பட்டு அண்மையில் நீர்ப்பாசன திணைக்கள பணிப்பாளரினால் முறையாக அமைக்கப்படாததன் காரணத்தினாலேயே குறித்த அணைக்கட்டு உடைப்பெடுத்துள்ளதாக விவசாயிகள் தம்மிடம் முறையிட்டுள்ளதாகவும் விவசாய அமைச்சர் தெரிவித்தார்.

இது தொடர்பில் முறையான விசாரணை முன்னெடுக்கப்படும் என மட்டக்களப்பு மாவட்ட நீர்ப்பாசன திணைக்களத்தின் பணிப்பாளர் ஜப்பார் உறுதியளித்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

இதேபோன்று கிரான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கிரான்புல்சேனை அணைக்கட்டும் உடைப்பெடுத்துள்ளதாகவும் அதனையும் திருத்தியமைப்பதற்கான நடவடிக்கையினை எடுக்குமாறு பணிப்புரைகளை விடுத்துள்ளதாகவும் கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் தெரிவித்தார்.

இரண்டு வாரங்களுக்குள் இரண்டு அணைக்கட்டுகளும் திருத்தமுடியாத பட்சத்தில் அது விவசாயிகளுக்கு பெரும் பாதிப்பினை ஏற்படுத்தும் எனவும் விவசாய அமைச்சர் நீர்ப்பாசன திணைக்களத்திடம் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனினும் தொடர்ச்சியாக மழைபெய்து ஆற்றில் நீர்மட்டம் அதிகமாக காணப்படும் பட்சத்தில் அவற்றினை திருத்தியமைக்க முடியாத நிலையேற்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

இதேவேளை பெய்துவரும் மழை காரணமாக உன்னிச்சைப் பகுதியில் 170மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதன் காரணமாக அப்பகுதியில் உள்ள ஆறுகள் மற்றும் வாய்க்கால்களில் நீர் மட்டம் அதிகரித்துள்ளது.

இதனால் சில வீதிகள் சேதமடைந்து மக்கள் போக்குவரத்து செய்யமுடியாத நிலை ஏற்பட்டுள்ளதுடன் சில வயல் நிலங்களும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இந்த வீதிகளையும் திருத்தியமைத்து மக்கள் போக்குவரத்து செய்யும் நிலைமைகளை ஏற்படுத்துமாறும் பணிப்புரைகளை வழங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

 

SHARE