மதத்தின் பெயரால் நடக்கும் அழிப்புக்கள்…!

306
பிரான்ஷில் தீவிரவாதிகளினால் நடத்தப்பட்ட தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் பலர் கொல்லப்பட்டிருக்கின்றார்கள்.

கடந்த காலங்களில் இலங்கையில் பொதுமக்கள் வீதிகளிலும், தெருவிலும் சுட்டுப்போடப்பட்டதை நினைவுபடுத்தியிருக்கின்றது இந்த தாக்குதல் சம்பவம்.

இந்த உலகத்தில் நடந்த தாக்குதல்கள் வன்முறைகள் என்பன பெரும்பாலும் மதத்தின் பெயரால் நடந்தது என்பது தான் உண்மை. அது 2009ம் ஆண்டு முள்ளிவாய்க்கால் போராகட்டும், இன்று பிரான்ஷில் நடந்த தாக்குதலாகட்டும் அவை ஒரு மதத்தின் பெயரால் நடத்தப்பட்டவை தான்.

இலங்கையில் பௌத்த பேரினவாதம் மேல் எழுந்ததன் விளைவாகவே பல உயிர்கள் கொல்லப்பட்டன.

உண்மையில் மதத்தினையும், அது சொல்லுகின்ற தத்துவங்களையும் மனிதன் பின்பற்றத் தொடங்கியிருப்பானாயின் இவ்வுலகம் அமைதிப்பூங்காவாக மாறும் என்பதில் இருவேறு கருத்துக்கள் இருக்க வாய்ப்பில்லை.

மாறாக மனிதன் மதம் என்னும் வெறிபிடித்து அலைகின்றான்.

இலங்கை சுதந்திரம் அடைந்த பின்னர் இந்த நாட்டில் உள்ள மக்கள் அனைவரும் இலங்கையர். பின்னரே நாங்கள் மதங்களின் படி உள்ளவர்கள் என்று ஆட்சியாளர்களும், பெரும்பான்மை மக்களும் நினைத்திருப்பார்களாயின், சிறுபான்மையினமும், இந்த நாட்டில் நிம்மதிப் பெருமூச்சுவிட்டிருக்கும்.

ஆனால், ஆட்சி பொறுப்பேறினதும், நாம் பௌத்தத்தை காப்போம். என்று சபதம் எடுப்பது ஒரு நாட்டின் அமைதிக்கு நல்லதன்று. அதுவே இலங்கையில் நடந்தது.

ஆனால், இன்னொரு பக்கம் நோக்கில், புனிதப் போர் என்று அம்மதத்தின் பெயரால் அட்டூழியத்தனமான தாக்குதல்கள் நடத்தப்படுவதானது மனித இனம் வெகு விரையில் அழிந்து இல்லாமல் போய்விடுமோ என்னும் அச்சத்தை ஏற்படுத்துகின்றது.

நேற்றைய தினம் பிரான்ஸில் நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத இயக்கம் பொறுப்பு ஏற்றுள்ளது. இஸ்லாத்தை காப்பதாக கூறிக்கொள்ளும் அது மனித உயிர்களை வேட்டையாடிக்கொண்டிருக்கின்றது. அதற்கு அது புனிதப் போர் என்றும் கூறுகின்றது.

இத்தாக்குதல்களை வன்மையாக கண்டிக்கும் இஸ்லாமிய சகோதரர்களும் இருக்கின்றார்கள்.

மதத்தின் பெயரால் இந்த உலகத்தில் நடத்தப்பட்ட அத்தனை தாக்குதல்களும் கண்டிக்கபட வேண்டியவை தான். இந்தியாவின் தந்தை காந்தியும் மதத்தின் பெயரால் கொல்லப்பட்டார். அவரை கோட்சே கொலை செய்தான். இந்துக்களுக்கு துரோகம் இழைத்தார் காந்தி என்றான்.

ஈழத்தில் பௌத்தர்கள் மட்டுமே வாழ வேண்டும் எனறார்கள். இதனால் தமிழ் மக்களும், முஸ்லிம் மக்களும் வதைபட்டனர்.

ஆக! எதிர்கால சந்ததியிடம் இந்த குரோதமான மனபாங்கினை இல்லாது செய்தாலே ஒழிய நிம்மதியான ஒரு உலகை கட்டியெழுப்ப எவராலும் முடியாது.

உலகில் என்ன தான் அதிநவீன தொழில் நுட்பங்கள் வளர்ச்சியடைந்தாலும் மனிதர்கள் தங்கள் மனதில் இன்னமும் சமத்துவத்தையும் சகிப்புத் தன்மையினையும் வளர்த்துக் கொள்ளவில்லை என்பது மீண்டுமொருமுறை நிரூபிக்கப்பட்டுள்ளது.

SHARE