மனைவியுடன் ஹொட்டலில் முடங்கி கிடக்கும் தாகிர்: காரணம் என்ன?

334

தென் ஆப்பிரிக்க வீரர் இம்ரான் தாகிர், தனது மனைவி மற்றும் குழந்தையுடன் மும்பை ஹொட்டல் அறையில் முடங்கி கிடக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.

பாகிஸ்தானின் பிறந்த இம்ரான் தாகிர், பாகிஸ்தானில் முதல் தரப் போட்டிகளில் லாகூர் அணிக்காக விளையாடினார்.

பின்னர் தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த சுமாய்யா தில்தார் என்பவரை காதலித்து மணந்த தாகிர், முதல் தரப் போட்டிகளில் செய்த சாதனைகளை வைத்து 2010ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான தென் ஆப்பிரிக்க அணியில் இடம் பிடித்தார்.

தற்போது இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் தென் ஆப்பிரிக்க அணியில் இடம்பெற்றிருக்கும் தாகிர், டெஸ்ட் போட்டியில் பங்கேற்க உள்ளார்.

இந்நிலையில் மும்பை ஹொட்டலில் மனைவி சுமாய்யா தில்தார் மற்றும் ஒன்றரை வயது ஆண் குழந்தையுடன் தங்கி இருக்கும் தாகிர், ஹொட்டலில் இருந்து எக்காரணத்தைக் கொண்டும் வெளியில் வர வேண்டாம் என்று தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் நிர்வாகத்தால் அறிவுறுத்தப்பட்டுள்ளார்.

ஏனெனில் பாகிஸ்தானுடன் கிரிக்கெட் போட்டிகள் நடத்த அந்நாட்டு கிரிக்கெட் வாரியத்துடன் நடக்கவிருந்த பேச்சுவார்த்தைக்கு எதிர்ப்பு தெரிவித்து, சிவசேனா கட்சியினர் மும்பை பிசிசிஐ அலுவலகத்துக்குள் புகுந்து போராட்டம் நடத்தினர்.

மேலும், அவர்களின் எதிர்ப்பால் பாகிஸ்தான் நடுவர் ஆலீம் தாரை ஐசிசி திரும்பப்பெற்றது. அதே போல் பாகிஸ்தானின் வாசிம் அக்ரம், சோயிப் அக்தர் வர்ணனை பணியில் இருந்து விலகினர்.

இந்த நிலையில் எதிர்பாராதவிதமாக எந்தவொரு மோசமான சம்பவமும் நடைபெற்று விடக்கூடாது என்பதற்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தென் ஆப்பிரிக்க அணி நிர்வாகம் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

SHARE